கால்பந்து

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: கொலம்பியா அணியிடம் இந்தியா தோல்வி + "||" + Junior World Cup football: India lost to Colombia

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: கொலம்பியா அணியிடம் இந்தியா தோல்வி

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: கொலம்பியா அணியிடம் இந்தியா தோல்வி
ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்றைய ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 1–2 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவிடம் தோல்வி கண்டது.

புதுடெல்லி,

17–வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி(17 வயதுக்கு உட்பட்டோர்) இந்தியாவில் 6 நகரங்களில் நடந்து வருகிறது. பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் இந்தியா, அமெரிக்கா, கொலம்பியா, கானா, ‘பி’ பிரிவில் பராகுவே, மாலி, நியூசிலாந்து, துருக்கி, ‘சி’ பிரிவில் ஈரான், கினியா, ஜெர்மனி, கோஸ்டாரிகா, ‘டி’ பிரிவில் வடகொரியா, நைஜர், பிரேசில், ஸ்பெயின், ‘இ’ பிரிவில் ஹோண்டுராஸ், ஜப்பான், நியூகலிடோனியா, பிரான்ஸ், ‘எப்’ பிரிவில் ஈராக், மெக்சிகோ, சிலி, இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3–வது இடத்தை பிடிக்கும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் 2–வது சுற்றுக்குள் நுழையும்.

4–வது நாளான நேற்று டெல்லியில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, கொலம்பியாவை எதிர்கொண்டது. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் கொலம்பியா அணி 49–வது நிமிடத்தில் முதல் கோல் போட்டது. அந்த அணி வீரர் ஜூயன் பெனாலோசா இந்த கோலை அடித்தார். 82–வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் ஜீக்சன் சிங் பதில் கோல் திருப்பினார். இதன் மூலம் உலக கோப்பை போட்டியில் கோல் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

ஆட்டம் டிராவில் முடியலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 83–வது நிமிடத்தில் கொலம்பியா வீரர் ஜூயன் பெனாலோசா மீண்டும் ஒரு கோல் அடித்தார். முடிவில் கொலம்பியா அணி 2–1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. 2–வது தோல்வியை சந்தித்த இந்திய அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு மங்கியது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 0–3 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவிடம் தோல்வி கண்டு இருந்தது.

மும்பையில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் பராகுவே அணி 4–2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை தோற்கடித்து 2–வது வெற்றியை பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்தது.

முன்னதாக டெல்லியில் நடந்த விறுவிறுப்பான ஆட்டம் ஒன்றில் அமெரிக்க அணி 1–0 என்ற கோல் கணக்கில் கானாவை வீழ்த்தி 2–வது வெற்றியை ருசித்தது. வெற்றிக்கான கோலை அமெரிக்க அணி வீரர் அகினோலா 75–வது நிமிடத்தில் அடித்தார். கானா அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். வெற்றி பெற்ற அமெரிக்க அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. மும்பையில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் மாலி அணி 3–0 என்ற கோல் கணக்கில் துருக்கியை துவம்சம் செய்து முதல் வெற்றியை தனதாக்கியது.

இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் கோஸ்டாரிகா–கினியா (மாலை 5 மணி), ஸ்பெயின்–நைஜர் (மாலை 5 மணி), ஈரான்–ஜெர்மனி (இரவு 8 மணி), வடகொரியா–பிரேசில் (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன.