ஹாட்ரிக் கோல் அடித்து அர்ஜென்டினாவை உலக கோப்பைக்கு தகுதி பெற வைத்த மெஸ்ஸி


ஹாட்ரிக் கோல் அடித்து  அர்ஜென்டினாவை உலக கோப்பைக்கு தகுதி பெற வைத்த  மெஸ்ஸி
x
தினத்தந்தி 11 Oct 2017 6:38 AM GMT (Updated: 11 Oct 2017 6:38 AM GMT)

ஹாட்ரிக் கோல் அடித்து அர்ஜென்டினாவை உலக கோப்பை போட்டிக்கு மெஸ்ஸி தகுதி பெற வைத்தார்.


குயிட்டோ,

2018-ம் ஆண்டுக்கான உலக கோப்பை  கால்பந்து போட்டி ரஷியாவில் ஜூன்-ஜூலை  மாதங்களில் நடக்கிறது. 32 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும்  ரஷியா நேரடியாக தகுதி பெற்றது.  மற்ற 31 அணிகள் தகுதி சுற்று மூலம் முன்னேறும்.  தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள அர்ஜென்டினா அணி பெருவுக்கு எதிரான ஆட்டத்தில்  கோல் இன்றி ‘டிரா’ செய்ததால் நெருக்கடி ஏற்பட்டது. 2 முறை கோப்பையை வென்ற அந்த அணி ஈகுவாடார் அணிக்கு எதிரான  இன்றைய ஆட்டத்தில் வென்றால் தான் உலக கோப்பைக்கு தகுதி பெற முடியும் என்ற நிலை இருந்தது. தோற்றால் வெளியேற்றப்படும் நிலை இருந்தது.

குயிட்டா நகரில் நடந்த இந்த  முக்கியமான ஆட்டத்தில் அர்ஜென்டினா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அர்ஜென்டினா உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.

உலகின் சிறந்த கால்பந்து வீரரும், அந்த அணியின் கேப்டனுமான லியோஸ் மெஸ்சி அர்ஜென்டினாவின் வெற்றிக்கு  காரணமாக திகழ்ந்தார். 3 கோல்களையும் அவர்தான் அடித்து ஹாட்ரிக் சாதனை புரிந்தார்.

அர்ஜென்டினாவுடன் இணைந்து தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள உருகுவே, கொலம்பியா  ஆகிய அணிகளும் தகுதி பெற்றன. 5 முறை கோப்பையை வென்ற பிரேசில் ஏற்கனவே தகுதி பெற்று இருந்தது. இதுவரை 23 நாடுகள் தகுதி பெற்றுள்ளன. இன்னும் 9 நாடுகள் தகுதி பெற  வேண்டும்.

Next Story