உலக கோப்பை கால்பந்து: மெஸ்சியின் ‘ஹாட்ரிக்’ கோலால் அர்ஜென்டினா அணி தகுதி


உலக கோப்பை கால்பந்து: மெஸ்சியின் ‘ஹாட்ரிக்’ கோலால் அர்ஜென்டினா அணி தகுதி
x
தினத்தந்தி 12 Oct 2017 12:00 AM GMT (Updated: 11 Oct 2017 11:27 PM GMT)

மெஸ்சியின் ‘ஹாட்ரிக்’ கோலால் அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை வீழ்த்தி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.

குய்டோ,

அடுத்த ஆண்டு (2018) ரஷியாவில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.

தென் அமெரிக்க கண்டத்துக்கான தகுதிசுற்றின் கடைசி லீக் ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா-ஈகுவடார் அணிகள் மோதின. இந்த ஆட்டம் ஈகுவடாரில் உள்ள குய்டோவில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெற முடியும் என்ற உச்சக்கட்ட நெருக்கடியுடன் அர்ஜென்டினா களம் கண்டது. விறுவிறுப்பான இந்த போட்டியில் ஆட்டம் தொடங்கிய 38-வது வினாடியிலேயே ஈகுவடார் கோல் போட்டு வியப்பூட்டியது. அந்த அணி வீரர் ரொமாரியோ இபரா இந்த கோலை அடித்தார்.

உள்ளூர் ரசிகர்களின் உற்சாகத்துக்கு 11-வது நிமிடத்தில் அர்ஜென்டினா பதிலடி கொடுத்தது. டி மரியா தட்டிக்கொடுத்த பந்தை அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி லாவகமாக அடித்து கோலாக்கினார். மெஸ்சியை குறி வைத்து ஈகுவடார் வீரர்கள் செயல்பட்டாலும், அவர்களின் வியூகங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கிய மெஸ்சி 18-வது மற்றும் 62-வது நிமிடங்களிலும் கோல் அடித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். தனது கால்பந்து வாழ்க்கையில் மெஸ்சியின் 44-வது ‘ஹாட்ரிக்’ இதுவாகும்.

எதிர்பார்ப்பையும், நெருக்கடியையும் சமாளித்து மெஸ்சி கோல் அடித்த விதம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. முடிவில் அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை தோற்கடித்தது. 18 லீக் ஆட்டங்கள் முடிவில் அர்ஜென்டினா அணி 7 வெற்றி, 7 டிரா, 4 தோல்வியுடன் 28 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் 3-வது இடம் பிடித்ததுடன் உலக கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றது.

இந்த பிரிவில் இருந்து உருகுவே, கொலம்பியா அணிகளும் உலக கோப்பை வாய்ப்பை பெற்றுள்ளன. முதலிடத்தை பிடித்த பிரேசில் அணி ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது.

வட, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் மண்டலத்துக்கான தகுதி சுற்று ஒன்றில் டிரினிடாட் அண்ட் டொபாக்கோவுக்கு எதிராக டிரா செய்தாலே போதும் என்ற நிலையில் களம் இறங்கிய அமெரிக்கா 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்று உலக கோப்பை வாய்ப்பை இழந்து வெளியேறியது.

2018-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு இதுவரை போட்டியை நடத்தும் ரஷியா உள்பட 23 நாடுகள் தகுதி பெற்று இருக்கின்றன. இன்னும் 9 அணிகள் தகுதி பெற வேண்டி இருக்கிறது.


Next Story