ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: கானாவிடமும் இந்தியா தோல்வி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது


ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: கானாவிடமும் இந்தியா தோல்வி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது
x
தினத்தந்தி 12 Oct 2017 10:45 PM GMT (Updated: 12 Oct 2017 8:00 PM GMT)

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் கானாவிடமும் தோல்வி கண்ட இந்திய அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.

புதுடெல்லி,

17–வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி(17 வயதுக்கு உட்பட்டோர்) இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, அமெரிக்கா, கொலம்பியா, கானா, ‘பி’ பிரிவில் பராகுவே, மாலி, நியூசிலாந்து, துருக்கி, ‘சி’ பிரிவில் ஈரான், கினியா, ஜெர்மனி, கோஸ்டாரிகா, ‘டி’ பிரிவில் வடகொரியா, நைஜர், பிரேசில், ஸ்பெயின், ‘இ’ பிரிவில் ஹோண்டுராஸ், ஜப்பான், நியூகலிடோனியா, பிரான்ஸ், ‘எப்’ பிரிவில் ஈராக், மெக்சிகோ, சிலி, இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3–வது இடத்தை பிடிக்கும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் 2–வது சுற்றுக்குள் (நாக்–அவுட்) நுழையும்.

இந்த நிலையில் ‘பி’ பிரிவில் நேற்று நடந்த ஆட்டங்களில் பராகுவே 3–1 என்ற கோல் கணக்கில் துருக்கியையும், மாலி 3–1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தையும் தோற்கடித்தன. பராகுவே (3 வெற்றியுடன் 9 புள்ளி), மாலி (2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளி) ஆகிய அணிகள் இந்த பிரிவில் இருந்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

டெல்லி நேரு ஸ்டேடியத்தில் இரவில் அரங்கேறிய மற்றொரு ஆட்டத்தில் (ஏ பிரிவு) முன்னாள் சாம்பியன் கானா அணி, இந்தியாவை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இந்தியா களம் புகுந்த போதிலும், அனுபவம் வாய்ந்த கானாவின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறியது. கானாவின் தடுப்பு அரணை இந்திய இளம் படையால் உடைக்க முடியவில்லை.

பந்து அதிக நேரம் கானா (60 சதவீதம்) வசமே சுற்றிக்கொண்டு இருந்தது. கானா கேப்டன் எரிக் அயா 43 மற்றும் 52–வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார். இதன் பிறகு இந்தியாவின் பலவீனமான பின்களத்தை பயன்படுத்தி 86–வது நிமிடத்தில் ரிச்சர்ட் டான்சோவும், 87–வது நிமிடத்தில் எமானுல் டோகும் கோல் போட்டு கலங்கடித்தனர். கடைசி நிமிடம் வரை இந்திய அணியினரால் ஒரு கோல் கூட திருப்ப இயலவில்லை.

முடிவில் கானா அணி 4–0 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை எளிதில் தோற்கடித்தது. இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் கொலம்பியா 3–1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை சாய்த்தது. தனது முதல் இரு ஆட்டங்களில் அமெரிக்கா, கொலம்பியாவிடம் தோல்வியை தழுவிய இந்திய அணி, கடைசி லீக்கிலும் தோற்று வெற்றி ஏதுமின்றி போட்டியை விட்டு வெளியேறியது.

‘பிபா’ உலக கோப்பை போட்டி ஒன்றில் முதல் முறையாக அடியெடுத்து வைத்த இந்திய அணி ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி காணாதது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. ஜூனியர் உலக கோப்பை போட்டியை நடத்திய நாடு முதல் சுற்றுடன் வெளியேறுவது இது 9–வது நிகழ்வாகும்.

ஏ பிரிவில் கானா, அமெரிக்கா, கொலம்பியா தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன. இதையடுத்து கோல் விகிதாச்சாரம் அடிப்படையில் கானா, கொலம்பியா முதல் இரு இடங்களை பிடித்து அடுத்த சுற்றை எட்டியது. சிறந்த 3–வது அணி என்ற அடிப்படையில் அமெரிக்காவின் 2–வது சுற்று வாய்ப்பும் உறுதியானது.

இன்றைய ஆட்டங்களில் கோஸ்டாரிகா–ஈரான், ஜெர்மனி–கினியா (இரு ஆட்டமும் மாலை 5 மணி), பிரேசில்–நைஜர், ஸ்பெயின்– வடகொரியா (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story