ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சி. 4-வது வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சி. 4-வது வெற்றி
x
தினத்தந்தி 17 Dec 2017 11:00 PM GMT (Updated: 17 Dec 2017 7:52 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சி. 4-வது வெற்றி பெங்களூருவை வீழ்த்தியது.

சென்னை,

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை பெங்களூருவில் நடந்த 26-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி, பெங்களூரு எப்.சி.யுடன் கோதாவில் இறங்கியது. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த மோதலில் 5-வது நிமிடத்தில் சென்னை வீரர் ஜெஜெ லால்பெகுலா கோல் அடித்து உள்ளூர் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தார். பதிலடி கொடுக்க முனைப்பு காட்டிய பெங்களூருவின் பல முயற்சிகள் வீண் ஆகின. இத்தனைக்கும் அந்த அணி வீரர்களின் வசமே பந்து அதிகமான நேரம் (60 சதவீதம்) வலம் வந்து கொண்டிருந்தது. முதல் பாதியில் சென்னை அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது

பிற்பாதியில் ஆட்டம் மேலும் தீவிரமானது. 46 மற்றும் 66-வது நிமிடங்களில் கிடைத்த நல்ல கோல் வாய்ப்புகளை பெங்களூரு அணியினர் கோட்டை விட்டனர். 81-வது நிமிடத்தில் இரு அணி வீரர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. எதிரணி வீரரை தாக்கியதாக சென்னை வீரர் தனபால் கணேஷ் மஞ்சள் அட்டை காட்டி எச்சரிக்கப்பட்டார். இந்த பரபரப்பான சூழலில் 85-வது நிமிடத்தில் பெங்களூரு கேப்டன் சுனில் சேத்ரி சென்னை அணியின் தடுப்பு அரணை உடைத்து கோல் போட்டார். ஆனால் அவர்களின் மகிழ்ச்சி அதிக நேரம் நிலைக்கவில்லை.

88-வது நிமிடத்தில் கிடைத்த ‘பிரிகிக்’ வாய்ப்பில் சென்னை வீரர் மிஹெலிக் உதைத்த பந்தை சக வீரர் தனபால் கணேஷ் தலையால் முட்டி கோலாக்கி அட்டகாசப்படுத்தினார். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த தனபால் கணேஷ், ஐ.எஸ்.எல். போட்டியில் அடித்த முதல் கோல் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவில் சென்னையின் எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூருவை வீழ்த்தி திரில் வெற்றியை பெற்றது. 6-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 4-வது வெற்றியாகும். பெங்களூருவுக்கு இது 2-வது தோல்வியாகும். கோவா, பெங்களூரு, சென்னை ஆகிய மூன்று அணிகளும் தலா 4 வெற்றியுடன் 12 புள்ளிகளை பெற்று முதல் 3 இடங்களில் உள்ளன.

மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தா 1-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டியை தோற்கடித்தது. கொல்கத்தா அணியில் ராபின்சிங் 54-வது நிமிடத்தில் கோல் போட்டார். 5-வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தாவுக்கு இது முதல் வெற்றியாகும்.

Next Story