ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 5–வது வெற்றி பெறுமா? கேரளாவுடன் இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 5–வது வெற்றி பெறுமா? கேரளாவுடன் இன்று மோதல்
x
தினத்தந்தி 21 Dec 2017 8:45 PM GMT (Updated: 21 Dec 2017 8:22 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை–கேரளா அணிகள் மோதுகின்றன.

சென்னை,

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை–கேரளா அணிகள் மோதுகின்றன.

சென்னை–கேரளா இன்று மோதல்

4–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் 30–வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.–கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் மோதுகின்றன.

6 ஆட்டத்தில் விளையாடி இருக்கும் சென்னை அணி 4 வெற்றி, 2 தோல்வி கண்டுள்ளது. கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை அணி பெங்களூவை வீழ்த்தி இருந்தது. அந்த வெற்றி உற்சாகத்துடன் சென்னை அணி களம் காணும். 5 ஆட்டங்களில் ஆடி இருக்கும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2 டிரா, 2 தோல்வி, ஒரு வெற்றி பெற்று இருக்கிறது. கேரளா அணி கடைசி லீக் ஆட்டத்தில் கவுகாத்தியை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது.

திருப்தி அடையவில்லை

உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் விளையாடும் சென்னை அணி வெற்றியை ருசித்து புள்ளி பட்டியலில் ஏற்றம் காண முழு திறனையும் வெளிப்படுத்தும். அதேநேரத்தில் 2–வது வெற்றியை ருசிக்க கேரளா அணி கடுமையாக போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இதுவரை இரு அணிகளும் 8 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. சென்னை அணி 4 முறையும், கேரளா அணி 2 முறையும் வெற்றி பெற்று இருக்கின்றன. 2 ஆட்டங்கள் டிராவில் முடிந்தது. இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இந்த போட்டி குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி அளித்த பேட்டியில், ‘இதுவரை பெற்ற வெற்றியால் நான் ஒருபோதும் திருப்தி அடையவில்லை. இன்னும் கொஞ்சம் அதிக புள்ளிகளை நாங்கள் எடுத்து இருக்க வேண்டும் என்று தான் வீரர்களை அறிவுறுத்தி வருகிறேன். நாங்கள் சில நேரங்களில் குழம்பி விட்டோம். இருப்பினும் வீரர்களின் கடின உழைப்பும், பயிற்சியும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று தெரிவித்தார்.


Next Story