ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கேரளா ஆட்டம் ‘டிரா’


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கேரளா ஆட்டம் ‘டிரா’
x
தினத்தந்தி 22 Dec 2017 9:00 PM GMT (Updated: 22 Dec 2017 8:46 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையில் நேற்று இரவு நடந்த சென்னை-கேரளா அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

சென்னை,

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையில் நேற்று இரவு நடந்த சென்னை-கேரளா அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

30-வது லீக் ஆட்டம்

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 30-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் மோதின.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க அதிக தீவிரம் காட்டினார்கள். இருப்பினும் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. முதல் பாதியில் கேரள அணி வீரர் ஜாக்கி சந்த் அடித்த பந்து மயிரிழையில் கோல் கம்பத்துக்கு வெளியில் சென்றதால் கோல் அடிக்கும் நல்ல வாய்ப்பு நழுவியது.

ஆட்டம் டிரா

பின் பாதியிலும் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக போராடின. ஆட்டத்தின் போக்கை பார்க்கையில் கோல் எதுவுமின்றி டிராவில் முடிய போவது போல் தெரிந்தது. ஆனால் கடைசி 5 நிமிடங்களில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. 88-வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் பிரான்சிஸ்கோ பெர்னாண்டஸ் கோல் இலக்கை நோக்கி உதைத்த பந்தை கேரளா வீரர் சந்தேஷ் ஜின்கான் தடுக்க முயற்சித்த போது கையில் பட்டுவிட்டது. இதையடுத்து சந்தேஷ்க்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டதுடன், சென்னை அணிக்கு பெனால்டி வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த வாய்ப்பை சென்னை அணி வீரர் மிஹெலிக் அருமையாக கோலாக்கினார். ஆனால் இந்த மகிழ்ச்சி சென்னை அணிக்கு நிலைக்கவில்லை.

கடைசி நிமிடத்தில் கேரளா அணி வீரர் சி.கே.வினீத் பதில் கோல் திருப்பினார். முடிவில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 7-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி 4 வெற்றி, ஒரு டிரா, 2 தோல்வியுடன் 13 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. கோவா, பெங்களூரு அணிகள் 12 புள்ளியுடன் 2-வது இடத்தில் உள்ளன.

இன்றைய ஆட்டங்கள்

இன்று (சனிக்கிழமை) நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில் எப்.சி. கோவா-எப்.சி.புனே சிட்டி அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் கோவாவில் மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. 32-வது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா-டெல்லி டைனமோஸ் எப்.சி. அணிகள் சந்திக்கின்றன. இந்த ஆட்டம் கொல்கத்தாவில் இரவு 8 மணிக்கு ஆரம்பமாகிறது.

Next Story