ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 6–வது வெற்றியை பெறுமா? டெல்லியுடன் இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 6–வது வெற்றியை பெறுமா? டெல்லியுடன் இன்று மோதல்
x
தினத்தந்தி 6 Jan 2018 9:00 PM GMT (Updated: 6 Jan 2018 8:29 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.–டெல்லி டைனமோஸ் எப்.சி. அணிகள் மோதுகின்றன.

சென்னை,

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.–டெல்லி டைனமோஸ் எப்.சி. அணிகள் மோதுகின்றன.

சென்னை–டெல்லி மோதல்

4–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறும் 41–வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.–டெல்லி டைனமோஸ் எப்.சி. அணிகள் மோதுகின்றன.

சென்னை அணி இதுவரை 8 ஆட்டத்தில் விளையாடி 5 ஆட்டங்களில் வெற்றியும், ஒரு டிராவும், 2 தோல்வியும் கண்டு புள்ளி பட்டியலில் 2–வது இடத்தில் உள்ளது. கோவா மற்றும் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் சென்னை அணி ஒரு ஒரு கோல் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. டெல்லி அணி 7 ஆட்டத்தில் ஆடி ஒரு வெற்றி, 6 தோல்வியுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணி எப்.சி.புனே சிட்டி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே வெற்றி கண்டது.

பயிற்சியாளர் கிரிகோரிக்கு தடை

சென்னை அணியின் தடுப்பு ஆட்டம் மற்றும் தாக்குதல் ஆட்டம் தரமாக இருக்கிறது. எனவே சென்னை அணி 5–வது வெற்றியை அறுவடை செய்து புள்ளிபட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் டெல்லி அணி கடைசி இடத்தில் இருந்து முன்னேற போராடும். அந்த அணியின் நட்சத்திர வீரர் கலு உச்சே காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் களம் காண முடியாததும், கடந்த போட்டியில் எதிரணி வீரருடன் மல்லுக்கட்டியதால் 4 ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்ட கிளாடியோ ஆகியோர் ஆட முடியாதது டெல்லி அணிக்கு பின்னடைவாகும்.

ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது போட்டி அதிகாரிகளுடன் வரம்பு மீறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஜான் கிரிகோரிக்கு 3 ஆட்டங்களில் பணியாற்ற தடையும், ரூ.4 லட்சம் அபராதமும் விதித்து அகில இந்திய கால்பந்து சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் இன்றைய போட்டியில் ஜான் கிரிகோரி அணியினருடன் இணைந்து செயல்பட முடியாது. உதவி பயிற்சியாளர் சையது சபிர் பாஷா பயிற்சியாளர் பணியை கவனிப்பார்.

கவலைப்பட தேவையில்லை

போட்டி குறித்து சென்னை அணியின் உதவி பயிற்சியாளர் சையது சபிர் பாஷா கருத்து தெரிவிக்கையில், ‘பயிற்சியாளர் இல்லை என்றாலும் எப்படி விளையாடுவது என்பது பற்றி கவலைப்பட தேவையில்லை. எங்களுக்கு எதிரான போட்டி டெல்லி அணிக்கு சோதனையாக இருக்கும். அவர்கள் வெற்றியை எதிர்பார்த்து வருகிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும். அவர்களை நாங்கள் முறையாக எதிர்கொள்வோம்’ என்றார்.

சென்னை, டெல்லி அணிகள் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை அணி ஒரு முறையும், டெல்லி அணி 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.


Next Story