கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லியை வீழ்த்தியது கேரளா + "||" + I.S.L. Football: Kerala beat Delhi

ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லியை வீழ்த்தியது கேரளா

ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லியை வீழ்த்தியது கேரளா
ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழாவில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் கேரள அணி 3–1 என்ற கோல் கணக்கில் டெல்லியை சாய்த்தது. இயான் ஹூமே ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தார்.

புதுடெல்லி,

4–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்–4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்த நிலையில் டெல்லி நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 43–வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்சும், டெல்லி டைனமோசும் கோதாவில் இறங்கின.

உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் அடியெடுத்து வைத்த டெல்லி அணியினர் வசமே பந்து அதிக நேரம் (58 சதவீதம்) சுற்றிக் கொண்டு இருந்தாலும் அதிர்ஷ்டம் என்னவோ கேரளாவுக்கு தான் இருந்தது. 6–வது நிமிடத்தில் டெல்லி வீரர் லாலியன்ஜூலா உதைத்த பந்து எதிரணி கோல் கம்பத்திற்கு மேலாக சென்றது. அதன் பிறகு 12–வது நிமிடத்தில் கேரள வீரர் பெகுசன் கடத்தி கொடுத்த பந்தை அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் இயான் ஹூமே அருமையாக கோலாக்கினார்.

18–வது நிமிடத்தில் இயான் ஹூமேவும், டெல்லி அணியின் ரோவில்சன் ரோட்ரிக்சும் பந்தை தலையால் முட்டிய போது ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர். இதில் இருவரின் தலையிலும் காயம் ஏற்பட்டு ரத்தம் காட்டியது. இருவரும் மைதானத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டு தொடர்ந்து மல்லுகட்டினர். 44–வது நிமிடத்தில் கிடைத்த ‘பிரிகிக்’ வாய்ப்பில் டெல்லி வீரர் ரோமியோ பெர்னாண்டஸ் உதைத்த பந்தை கேப்டன் பிரிதம் கோட்டல் தலையால் முட்டி கோலாக்கி ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார்.

இதையடுத்து பிற்பாதி ஆட்டம் மேலும் சூடுபிடித்தது. இயான் ஹூமேவின் ஊடுருவலை தடுப்பதற்கே டெல்லி தடுப்பாட்டக்காரர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருந்தது. அப்படி என்றாலும் 78–வது நிமிடத்தில் இயான் ஹூமே தனி ஆளாக சென்று அட்டகாசமாக கோல் அடித்து உள்ளூர் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தார். 83–வது நிமிடத்தில் அவர் மேலும் ஒரு கோலை திணித்தார். அதாவது டெல்லி பின்கள வீரர் ரோட்ரிக்சை ஏமாற்றிக்கொண்டு பந்துடன் முன்னேறிய அவரை டெல்லி கோல் கீப்பர் அர்னாப் தாஸ் ‌ஷர்மா முன்னோக்கி வந்து தடுக்க முயன்றார். அதற்குள் பந்தை மேல்வாக்கில் அடித்து வலைக்குள் அனுப்பினார்.

முடிவில் இயான் ஹூமேவின் ‘ஹாட்ரிக்’ கோலின் உதவியுடன் கேரளா அணி 3–1 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோசை வீழ்த்தியது. 9–வது லீக்கில் ஆடிய கேரளாவுக்கு இது 2–வது வெற்றியாகும். டெல்லி அணி சந்தித்த 7–வது தோல்வியாகும்.

இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கோவா–ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதுகின்றன.தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி முதல் வெற்றி பெறுமா? டெல்லியுடன் இன்று மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை-டெல்லி அணிகள் மோதுகின்றன.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா-டெல்லி ஆட்டம் ‘டிரா’
5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொச்சி நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி.-டெல்லி டைனமோஸ் எப்.சி. அணிகள் மோதின.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: வெற்றி கணக்கை தொடங்குமா சென்னை அணி? - கவுகாத்தியுடன் இன்று மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழாவில் சென்னையில் இன்று (வியாழக்கிழமை) இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை-கவுகாத்தி அணிகள் மோதுகின்றன.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா - டெல்லி அணிகள் இன்று மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் இன்று மோத உள்ளன.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு-ஜாம்ஷெட்பூர் ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், பெங்களூரு - ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா ஆனது.