ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-டெல்லி ஆட்டம் ‘டிரா’


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-டெல்லி ஆட்டம் ‘டிரா’
x
தினத்தந்தி 11 Feb 2018 11:15 PM GMT (Updated: 11 Feb 2018 7:32 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை -டெல்லி அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

புதுடெல்லி,

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். லீக் சுற்று முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்றிரவு டெல்லி நேரு ஸ்டேடியத்தில் அரங்கேறிய 71-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோசும், முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி.யும் பலப்பரீட்சையில் இறங்கின.

விறுவிறுப்பான இந்த மோதலில் சென்னை வீரர்கள் வசமே பந்து சற்று (54 சதவீதம்) அதிகமாக சுற்றிக் கொண்டிருந்தது. என்றாலும் முதல் பாதியில் யாரும் கோல் போடவில்லை. பிற்பாதியில் 59-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை டெல்லி வீரர் கலு உச்சே கோலாக்கினார்.

பதிலடி கொடுக்க போராடிய சென்னை அணி 81-வது நிமிடத்தில் கோல் திருப்பியது. ரெனே மிஹலிக் நீண்ட தூரத்தில் இருந்து தூக்கியடித்த பந்தை சென்னை வீரர் மைல்சன் ஆல்வ்ஸ் தலையால் முட்டி அருமையாக கோலாக்கினார். அதன் பிறகு கடுமையாக முயன்றும் இரு அணி தரப்பிலும் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இந்த ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிரா ஆனது.

14-வது லீக்கில் ஆடிய சென்னை அணி 7 வெற்றி, 3 டிரா, 4 தோல்வி என்று 24 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. ஏறக்குறைய அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட டெல்லி அணி 2 வெற்றி, 2 டிரா, 9 தோல்வி என்று 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் தொடருகிறது.

முன்னதாக மும்பையில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் புனே சிட்டி 2-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டியை வீழ்த்தியது. புனே அணியில் டியாகோ கார்லோஸ் (18-வது நிமிடம்), மார்செலோ பெரேரா (83-வது நிமிடம்) கோல் போட்டனர். இதுவரை 9 வெற்றிகளை குவித்துள்ள புனே சிட்டி அணி 28 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறது. மும்பை சிட்டி தழுவிய 7-வது தோல்வி இதுவாகும். 14-ந்தேதி நடக்கும் அடுத்த ஆட்டத்தில் கவுகாத்தி- டெல்லி அணிகள் மோதுகின்றன.

Next Story