தேசிய பெண்கள் கால்பந்து தமிழக அணி முதல்முறையாக ‘சாம்பியன்’ மணிப்பூரை வீழ்த்தி சாதனை


தேசிய பெண்கள் கால்பந்து தமிழக அணி முதல்முறையாக ‘சாம்பியன்’ மணிப்பூரை வீழ்த்தி சாதனை
x
தினத்தந்தி 14 Feb 2018 9:00 PM GMT (Updated: 14 Feb 2018 8:50 PM GMT)

23–வது தேசிய சீனியர் பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடந்தது.

கட்டாக்,

23–வது தேசிய சீனியர் பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடந்தது. 29 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் தமிழக அணி, 18 முறை சாம்பியனான மணிப்பூரை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த தமிழக அணி 2–1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் மணிப்பூரை வீழ்த்தி முதல்தடவையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது. தமிழக அணியின் கேப்டன் இந்துமதி 3–வது நிமிடத்திலும், 40–வது நிமிடத்திலும் கோல் அடித்தார். மணிப்பூர் அணி தரப்பில் ரதன்பாலா 57–வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார். தமிழக அணி கேப்டன் இந்துமதி ஆட்டநாயகி விருது பெற்றார். இந்த போட்டி தொடரில் தமிழக அணி எந்தவொரு ஆட்டத்திலும் தோல்வியை சந்திக்காமல் கோப்பையை வென்று அசத்தி இருக்கிறது. தேசிய பெண்கள் கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை மணிப்பூரை தவிர்த்து பெங்கால் 2 முறையும், ஒடிசா, ரெயில்வே அணிகள் தலா ஒரு முறையும் வென்று இருந்தன. அந்த வரிசையில் தற்போது தமிழ்நாடு இடம் பிடித்துள்ளது.


Next Story