கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவை பழிதீர்த்தது சென்னை அணி + "||" + ISL Football: Goa team has been beaten by the Chennai team

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவை பழிதீர்த்தது சென்னை அணி

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவை பழிதீர்த்தது சென்னை அணி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியனான சென்னை அணி 1–0 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி பழிதீர்த்தது.

கோவா,

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியனான சென்னை அணி 1–0 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி பழிதீர்த்தது.

ஐ.எஸ்.எல். கால்பந்து

4–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் கோவா நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 73–வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா– சென்னையின் எப்.சி. அணிகள் மோதின. தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் ஆக்ரோ‌ஷமாக மல்லுகட்டினர். 2–வது நிமிடத்தில் சென்னை வீரர் இனிகோ கால்ட்ரோன் பந்தை எதிரணி கோல கம்பத்திற்கு மேலே உதைத்து வீணடித்தார். பந்து கோவா அணி பக்கமே சற்று அதிகமாக (54 சதவீதம்) சுற்றிக்கொண்டிருந்தாலும் ஷாட் அடிப்பதில் இரு அணியினரும் ஏறக்குறைய சரிசம ஆதிக்கம் செலுத்தினர். ரபெல் அகஸ்டோ (4–வது நிமிடம்), ஜெஜெ லால்பெகுலா (37–வது நிமிடம்) ஆகியோர் அடித்த நல்ல ஷாட்டுகளை கோவா கோல் கீப்பர் நவீன்குமார் தடுத்து நிறுத்தினார். முதல் பாதியில் யாரும் கோல் போடவில்லை.

அச்ததிய கோல்கீப்பர்

பலக்கட்ட போராட்டத்திற்கு பிறகு 52–வது நிமிடத்தில் சென்னை அணி கோல் போட்டது. சென்னை வீரர் இலக்கை நோக்க அடித்த ஷாட்டை கோவா கோல கீப்பர் நவீன்குமார் தடுத்தார். திரும்பி வந்த பந்த ஜெஜெ லால்பெகுலா அடித்த போது, கோல் கம்பத்தில் அருகில் நின்ற சக வீரர் இனிகோ கால்ட்ரோன் லாவகமாக வலைக்குள் திருப்பினார்.

இதையடுத்துபதில் கோல் திருப்ப கோவா அணியினர் சென்னை கோல் பகுதியை அடிக்கடி முற்றுகையிட்டனர். ஆனால் பிரமாதமாக செயல்பட்ட சென்னை கோல் கீப்பர் கரன்ஜித்சிங், எதிரணியின் 5 வாய்ப்புகளை சூப்பராக முறியடித்தார். அவ்வப்போது முரட்டு ஆட்டமும் தலைதூக்கியது. சென்னை அணியில் 5 பேரும், கோவா தரப்பில் 2 பேரும் மஞ்சள் அட்டை எச்சரிக்கைக்குள்ளானார்கள்.

சென்னை வெற்றி

முடிவில் சென்னை அணி 1–0 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி 8–வது வெற்றியை பதிவு செய்தது. சென்னையில் நடந்த தொடக்க லீக்கில் கோவா அணி 3–2 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி.யை தோற்கடித்து இருந்தது. இந்த தோல்விக்கு அவர்களது இடத்தில் சென்னை அணி பழிதீர்த்துக் கொண்டது. சென்னை அணி 15 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 3 டிரா, 4 தோல்வி என்று மொத்தம் 27 புள்ளிகளுடன், பட்டியலில் ஒரு இடம் முன்னேறி 3–வது இடத்தை பிடித்துள்ளது. கோவா அணி 6 வெற்றி, 2 டிரா, 6 தோல்வி என்று 20 புள்ளிகளுடன் 6–வது இடத்தில் நீடிக்கிறது. இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.– புனே சிட்டி அணிகள் சந்திக்கின்றன.