‘கால்பந்து வீராங்கனைகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்’ தேசிய போட்டியில் அசத்திய தமிழக வீராங்கனை வேண்டுகோள்


‘கால்பந்து வீராங்கனைகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்’ தேசிய போட்டியில் அசத்திய தமிழக வீராங்கனை வேண்டுகோள்
x
தினத்தந்தி 17 Feb 2018 9:00 PM GMT (Updated: 17 Feb 2018 8:49 PM GMT)

‘கால்பந்து வீராங்கனைகளுக்கு அரசு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்’ என்று தேசிய சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணியில் அதிக கோல்கள் அடித்து அசத்திய இந்துமதி வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை,

‘கால்பந்து வீராங்கனைகளுக்கு அரசு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்’ என்று தேசிய சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணியில் அதிக கோல்கள் அடித்து அசத்திய இந்துமதி வேண்டுகோள் விடுத்தார்.

முதல்முறையாக தேசிய சாம்பியன்


ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடந்த 23-வது தேசிய சீனியர் பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் தமிழக அணி 2-1 என்ற கோல் கணக்கில் 18 முறை சாம்பியனான மணிப்பூரை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று மகத்தான சாதனை படைத்தது. இந்த போட்டித் தொடரில் தமிழக அணி மொத்தம் 25 கோல்கள் அடித்தது. அதில் நட்சத்திர வீராங்கனை இந்துமதி அடித்த 10 கோல்களும் அடங்கும். இந்துமதி தொடர்நாயகி விருதையும் தட்டிச் சென்றார். 24 வயதான இந்துமதி சென்னை ராஜமங்கலம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த இவர் கூலி தொழிலாளியின் மகள் ஆவார்.

தேசிய போட்டியில் சாதித்த தமிழக பெண்கள் கால்பந்து அணியினருக்கு, தமிழ்நாடு கால்பந்து சங்கம் சார்பில் பாராட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் தமிழ்நாடு கால்பந்து சங்க தலைவர் ஜேசையா வில்லவராயர், சீனியர் துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் கண்ணன், தமிழ்நாடு கால்பந்து சங்க பெண்கள் கமிட்டி சேர்மன் சீனி முகைதீன் உள்பட பலர் கலந்து கொண்டு வீராங்கனைகளை வாழ்த்தி பேசினார்கள். வீராங்கனைகள் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

அகாடமி தேவை


விழாவில் தமிழக அணியின் தலைமை பயிற்சியாளர் முருகுவேந்தன் (எஸ்.டி.ஏ.டி.) பேசும் போது, ‘சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணியில் இளம் வீராங்கனைகள் பலர் உள்ளனர். இதனால் வருங்காலங்களிலும் நமது அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று நம்புகிறேன். நமது மாநிலத்தில் விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் அரசு பயிற்சி மையங்களில் 12 வயது முதல் தான் சேர்க்கப்படுகிறார்கள்.

ஆனால் வடமாநிலங்களில் 10 வயது முதலே வீராங்கனைகள் கால்பந்து பயிற்சியில் ஈடுபட தொடங்கி விடுகிறார்கள். அத்துடன் அவர்களுக்கு 10 வயது முதல் பல்வேறு வயது பிரிவுகளில் மாநில அளவில் லீக் போட்டிகள் நடத்தப்படுகிறது. இது தான் அவர்களின் சிறப்பான செயல்பாட்டுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. எனவே நாமும் கால்பந்துக்கு என்று அகாடமிகள் ஆரம்பித்து சிறு வயது முதலே பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு கால்பந்து சங்கத்தை கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

இந்துமதி பேட்டி

தமிழக அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த இந்துமதி அளித்த பேட்டியில், ‘நான் 7-ம் வகுப்பு முதலே கால்பந்து ஆட்டத்தில் பங்கேற்று வருகிறேன். பெற்றோரை விட என்னை இந்த ஆட்டத்தில் அதிகம் ஊக்குவித்தது எனது பயிற்சியாளர் மாரியப்பன். எனது இந்த முன்னேற்றத்துக்கு அவர் தான் முக்கிய காரணம். கடந்த 10 ஆண்டுகளாக புதுச்சேரி அணிக்காக பல்வேறு தேசிய போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். முதல்முறையாக தமிழக அணிக்காக ஆடிய ஆட்டத்திலேயே சாம்பியன் பட்டத்தை வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றி கால்பந்து ஆட்டத்தை நோக்கி இளம் வீராங்கனைகள் பலரும் வர உத்வேகம் அளிக்கும் என்று நம்புகிறேன்.கால்பந்து வீராங்கனைகளுக்கு அரசு வேலைவாய்ப்பு இல்லாததால் பலர் கல்லூரி படிப்பை முடித்ததுடன் விளையாட்டை விட்டு விலகும் நிலை நிலவுகிறது. வீராங்கனைகளுக்கு போதிய வேலைவாய்ப்பு கிடைத்தால் மேலும் பலர் விளையாட்டுக்கு வருவதுடன் ஆட்டமும் மேலும் மேம்படும்.

இந்த போட்டியில் கால்இறுதியில் ஒடிசாவை வீழ்த்தியதும் கோப்பையை கைப்பற்றி விடலாம் என்ற நம்பிக்கை எங்களுக்கு அதிகரித்தது. இந்திய அணிக்கான பயிற்சி முகாமில் மணிப்பூர் வீராங்கனைகளுடன் ஆடிய அனுபவம் எங்களுக்கு இருந்ததால் அவர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட உதவியது’ என்றார்.

Next Story