ஐ.எஸ்.எல்.கால்பந்து சென்னை அணி அரைஇறுதிக்கு தகுதி பெறுமா? கேரளாவுடன் இன்று மோதல்


ஐ.எஸ்.எல்.கால்பந்து சென்னை அணி அரைஇறுதிக்கு தகுதி பெறுமா? கேரளாவுடன் இன்று மோதல்
x
தினத்தந்தி 22 Feb 2018 10:45 PM GMT (Updated: 22 Feb 2018 7:34 PM GMT)

முக்கிய லீக் ஆட்டத்தில் சென்னை-கேரளா அணிகள் மோதுகின்றன.

கொச்சி,

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் முக்கிய லீக் ஆட்டத்தில் சென்னை-கேரளா அணிகள் மோதுகின்றன.

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொச்சி நேரு ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு நடைபெறும் 80-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி.-சென்னையின் எப்.சி. அணிகள் மோதுகின்றன.

கேரளா அணி 16 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 டிரா, 4 தோல்வியுடன் 24 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. சென்னை அணி 16 ஆட்டத்தில் விளையாடி 8 வெற்றி, 4 டிரா, 4 தோல்வியுடன் 28 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் இருக்கிறது.

இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். 2 ஆட்டங்கள் எஞ்சி இருக்கும் நிலையில் இந்த ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றால் அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்து விடும். அதேநேரத்தில் கேரளா அணி தோல்வியை சந்தித்தால் அரைஇறுதி வாய்ப்பை இழக்க நேரிடும். எனவே இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

கேரளா அணி தனது கடந்த 4 லீக் ஆட்டங்களில் தோல்வியை சந்திக்கவில்லை. சென்னை அணி கடைசி 3 ஆட்டங்களில் தோல்வியை தொடவில்லை. இந்த சீசனில் இரு அணிகளும் மோதிய முந்தைய லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது நினைவிருக்கலாம். கடைசி கட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன.

இந்த போட்டி குறித்து சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஜான் கிரிகோரி அளித்த பேட்டியில், ‘போட்டி அட்டவணை எங்களுக்கு கடுமையானதாக அமைந்து இருக்கிறது. போதிய ஓய்வின்றி விளையாடி வருகிறோம். கடந்த 4 ஆட்டங்களில் கிடைத்த புள்ளி எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நான் அணி வீரர்களை மாற்றப்போவதில்லை. எங்கள் அணி நல்ல நிலையில் இருக்கிறது. முந்தைய லீக் ஆட்டத்தில் கேரளா அணி எங்களுக்கு எதிராக ஆடுகையில் தடுமாறியது. புதிய பயிற்சியாளர் டேவிட் ஜேம்ஸ் நேர்மறையான செயல்பாட்டுடன் வந்து இருக்கிறார். அந்த அணி முற்றிலும் மாறி இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Next Story