கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து:சென்னை அணி 9-வது வெற்றி + "||" + ISL Football: Chennai team 9th win

ஐ.எஸ்.எல். கால்பந்து:சென்னை அணி 9-வது வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து:சென்னை அணி 9-வது வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் தங்களது கடைசி லீக்கில் சென்னை அணி 1-0 என்ற கோல் கணக்கில் மும்பையை வீழ்த்தி 9-வது வெற்றியை பதிவு செய்தது.
சென்னை,

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் தங்களது கடைசி லீக்கில் சென்னை அணி 1-0 என்ற கோல் கணக்கில் மும்பையை வீழ்த்தி 9-வது வெற்றியை பதிவு செய்தது.

சென்னை வெற்றி


4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 88-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.- மும்பை சிட்டி அணிகள் மோதின. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் இறங்கிய சென்னை அணி தாக்குதல் பாணியை கையாண்டது. மும்பை அணியும் ஈடுகொடுத்து கடும் சவால் அளித்ததால் ஆட்டத்தில் சூடுபறந்தது. 37-வது நிமிடத்தில் சென்னை வீரர் ஜூட் நோரு அடித்த நல்ல ஷாட், எதிரணியின் கம்பத்தில் பட்டு மயிரிழையில் நழுவியது. இரு அணிகளுக்கும் பல வாய்ப்புகள் வீணாகின.

பிற்பாதியில் 67-வது நிமிடத்தில் மும்பை வீரர் வாடூ, கோல் பகுதியில் வைத்து சென்னை வீரர் ஜெம் காவிலனை தள்ளிவிட்டதால் சென்னை அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிட்டியது. அந்த பொன்னான வாய்ப்பை சென்னை வீரர் ரெனே மிஹெலிக் கோலாக்கினார். பதில் கோல் திருப்ப மும்பை வீரர்கள் வரிந்து கட்டி ஓடினர். அந்த அணி வீரர் ஆசெலி எமானா, ‘பிரீகிக்’ வாய்ப்பில் உதைத்த பிரமாதமான ஷாட்டை, சென்னை கோல் கீப்பர் பவான்குமார் சூப்பராக தடுத்து நிறுத்தினார். கடைசி நிமிடத்தில் மும்பை வீரர் பல்வந்த்சிங் கோல் போட்டார். ஆனால் அதை ‘ஆப்-சைடு’ கோல் என்று அறிவித்ததால் மும்பை வீரர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள்.

முடிவில் சென்னை அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை சுவைத்தது. ஏற்கனவே அரைஇறுதியை எட்டிவிட்ட சென்னை அணி 9 வெற்றி, 5 டிரா, 4 தோல்வி என்று 32 புள்ளிகளுடன், பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது. மும்பை அணி 23 புள்ளிகளுடன் (7 வெற்றி, 2 டிரா, 9 தோல்வி) 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இன்றைய ஆட்டங்கள்

இன்றுடன் லீக் சுற்று நிறைவடைகிறது. இன்று மாலை 5.30 மணிக்கு ஜாம்ஷெட்பூரில் நடக்கும் ஆட்டத்தில் எப்.சி.கோவா-ஜாம்ஷெட்பூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியின் முடிவே அரைஇறுதியை எட்டும் 4-வது அணி எது? என்பதை தீர்மானிக்கும். 27 புள்ளிகளுடன் உள்ள கோவா அணி டிரா செய்தாலே அரைஇறுதிக்கு முன்னேறி விடலாம். 26 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கும் ஜாம்ஷெட்பூரை பொறுத்தவரை இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும்.

இரவு 8 மணிக்கு நடக்கும் கடைசி லீக்கில் ஆறுதல் வெற்றிக்காக கொல்கத்தா-கவுகாத்தி அணிகள் மோதுகின்றன.