கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து- இறுதிப்போட்டியில் பெங்களூரு எப்.சி. + "||" + I.S.L. Football - Football in the final

ஐ.எஸ்.எல். கால்பந்து- இறுதிப்போட்டியில் பெங்களூரு எப்.சி.

ஐ.எஸ்.எல். கால்பந்து- இறுதிப்போட்டியில் பெங்களூரு எப்.சி.
ஐ.எஸ்.எல். கால்பந்து இறுதிப்போட்டிக்கு பெங்களூரு எப்.சி. அணி தகுதி பெற்றது.
பெங்களூரு,

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழாவில் பெங்களூரு எப்.சி.-புனே சிட்டி அணிகள் இடையிலான முதலாவது அரைஇறுதியின் 2-வது சுற்று பெங்களூருவில் நேற்றிரவு நடந்தது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் உற்சாகமாக களம் புகுந்த பெங்களூரு அணியில், கேப்டன் சுனில் சேத்ரி 15-வது நிமிடத்தில் கோல் போட்டு அமர்க்களப்படுத்தினார். அதே சமயம் புனே அணியின் இரு கோல் முயற்சியை பெங்களூரு கோல் கீப்பர் குர்ப்ரீத்சிங் முறியடித்தார்.

பந்து அதிகமான நேரம் (55 சதவீதம்) புனே வசமே சுற்றிக்கொண்டிருந்தாலும் அதிர்ஷ்டம் பெங்களூரு அணி பக்கம் இருந்தது. 65-வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பை சுனில் சேத்ரி கோலாக்கினார். பதில் கோல் திருப்ப போராடிய புனே அணிக்கு 82-வது நிமிடத்தில் அதற்குரிய சந்தர்ப்பம் கனிந்தது. அந்த அணியின் ஜோனதன் லூக்கா கோல் போட்டார். இதன் பிறகு இன்னொரு கோல் அடித்து சமனுக்கு கொண்டு வர வேண்டும் என்று புனே அணியினர் தீவிரம் காட்டினர். அதற்குள் சுனில் சேத்ரி (89-வது நிமிடம்) மேலும் கோல் திணித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.

முடிவில் அறிமுக அணியான பெங்களூரு எப்.சி. 3-1 என்ற கோல் கணக்கில் புனே சிட்டியை வீழ்த்தி இறுதிப்போட்டியை எட்டியது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது சுற்று 0-0 என்ற கணக்கில் டிரா ஆகியிருந்தது.

அடுத்து சென்னை-கோவா அணிகள் இடையே இரண்டாவது அரைஇறுதியின் 2-வது சுற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.