ஐ.எஸ்.எல். கால்பந்து : இறுதிப்போட்டிக்கு சென்னை அணி முன்னேறுமா? கோவாவுடன் இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து :  இறுதிப்போட்டிக்கு சென்னை அணி முன்னேறுமா? கோவாவுடன் இன்று மோதல்
x
தினத்தந்தி 13 March 2018 12:15 AM GMT (Updated: 12 March 2018 8:53 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையில் இன்று நடைபெறும் முக்கியமான அரைஇறுதிப்போட்டியில் சென்னையின் எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் மோதுகின்றன.

சென்னை,

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. லீக் ஆட்டங்கள் முடிவில் பெங்களூரு எப்.சி., சென்னையின் எப்.சி., எப்.சி.கோவா, எப்.சி.புனே சிட்டி ஆகிய 4 அணிகள் அரைஇறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

பெங்களூரு எப்.சி.-எப்.சி.புனே சிட்டி அணிகள் இடையிலான முதலாவது அரைஇறுதிப்போட்டியில் முதல் சுற்று ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது. இதன் 2-வது சுற்றில் பெங்களூரு அணி 3-1 என்ற கோல் கணக்கில் புனே அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

சென்னை-கோவா இன்று மோதல்

இந்த நிலையில் சென்னையின் எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் இடையிலான 2-வது அரைஇறுதிப்போட்டியின் 2-வது சுற்று ஆட்டம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கிறது. இரு அணிகள் இடையே கோவாவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்து இருந்தது. எனவே இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ? அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

அதேநேரத்தில் இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தால் வெளியூரில் அடித்த ஒரு கோலுக்கு அதிக மதிப்பு என்பதால் சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க கூடுதல் நேரம் (30 நிமிடம்) ஒதுக்கப்படும். அதிலும் முடிவு கிடைக்காவிட்டால் பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்படும். 2 மற்றும் அதற்கு மேல் எத்தனை கோல்கள் அடித்து ஆட்டம் டிராவில் முடிந்தாலும் கோவா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விடும்.

கோல் அடிக்க விடாமல்...

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சிரமமின்றி இறுதிப்போட்டிக்குள் முன்னேற முடியும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த சீசனில் லீக் ஆட்டங்களில் இரு அணிகளும் தங்கள் சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தன. இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி வித்தியாசம் ஒரு கோலாக அமைந்தது.

இந்த போட்டி குறித்து சென்னை அணி பயிற்சியாளர் ஜான் கிரிகோரி நேற்று அளித்த பேட்டியில், ‘நாங்கள் எதிரணியை கோல் அடிக்க விடாமல் பார்த்து கொண்டால் இறுதிப்போட்டிக்கு எளிதாக சென்று விடலாம், ஆனால் எதிரணி கோல் அடித்தால் எல்லாவற்றிலும் மாற்றம் ஏற்படும். எனவே எதிரணியை கோல் அடிக்க விடாமல் பார்த்து கொள்வதில் அதிக கவனம் செலுத்துவோம். ஒருவேளை கோவா அணி கோல் அடித்தால் அடுத்த திட்டத்தை அமல்படுத்த முயற்சி மேற்கொள்வோம். கோவா அணியின் அபாயகரமாக வீரர்கள் யார்? என்பது எங்களுக்கு தெரியும். எனவே அவர்களுக்கு எதிராக சிறப்பான தடுப்பு ஆட்டத்தை செயல்படுத்துவோம்’ என்றார்.

2015-ம் ஆண்டில் சென்னை அணி 3-2 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.




Next Story