கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து : சென்னையின் எப்.சி. இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் + "||" + ISL Football match : Chennai FC qualifies to final

ஐ.எஸ்.எல். கால்பந்து : சென்னையின் எப்.சி. இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

ஐ.எஸ்.எல். கால்பந்து : சென்னையின் எப்.சி. இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் அரைஇறுதி சுற்றில் கோவாவை பந்தாடி சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
சென்னை,

ஐ.எஸ்.எல். கால்பந்து 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி ‘கிளைமாக்ஸ்’ கட்டத்துக்கு வந்து விட்டது. இதில் ஏற்கனவே பெங்களூரு எப்.சி. இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது.

சென்னையின் எப்.சி.- எப்.சி.கோவா அணிகள் இடையிலான இரண்டாவது அரைஇறுதியின் முதலாவது சுற்று 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இவ்விரு அணிகள் இடையிலான அரைஇறுதியின் 2-வது சுற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறியது.

இதில் தொடக்கத்தில் கோவா வீரர்களின் கையே சற்று ஓங்கி இருந்தது. 13-வது நிமிடத்தில் சென்னை வீரர் தனபால் கணேஷ், எதிரணி வீரர் கோரோமினாசின் கால்களை இடறிவிட்டதால் மஞ்சள் அட்டை எச்சரிக்கைக்குள்ளானார். இதன் மூலம் கிடைத்த ‘பிரீகிக்’ வாய்ப்பில் கோவா வீரர் மானுல் லான்ஜரோட் உதைத்த பந்து கோல்கம்பத்தின் கார்னர் நோக்கி பறந்தது. சென்னை கோல் கீப்பர் கரன்ஜித்சிங் பாய்ந்து விழுந்து அதை வெளியே தள்ளி காப்பாற்றினார். மேலும் சிறிது நேரம் கோவா வீரர்கள், சென்னை கோல்பகுதியை முற்றுகையிட்டபடி இருந்தனர்.

லால்பெகுலா- தனபால் கணேஷ்

26-வது நிமிடத்தில் ஆட்டத்தின் போக்கு மாறியது. இடது பக்கத்தில் இருந்து கிரிகோரி நெல்சன் தூக்கியடித்த பந்தை சென்னை அணியின் நட்சத்திர வீரர் ஜெஜெ லால்பெகுலா தலையால் முட்டி சூப்பராக கோலாக்கினார். அடுத்த 3-வது நிமிடத்தில் அதே போன்று கிரிகோரி நெல்சன் உதைத்த பந்து கோவா அணியின் கோல்பகுதிக்கு வந்தது. அங்கு நின்ற தனபால் கணேஷ் துள்ளிகுதித்து தலையால் முட்டி பந்தை வலைக்குள் அனுப்பி, அமர்க்களப்படுத்தினார். சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவரான தனபால் கணேஷ் கோல் போட்டதும், உள்ளூர் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர்.

இதையடுத்து முதல் பாதியில் சென்னை அணி 2-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை கண்டது. பிற்பாதியில் பதிலடி கொடுக்க கோவா அணியினர் கடுமையாக முயன்றனர். சொல்லப்போனால் அவர்களின் வசமே பந்து பெரும்பாலும் (60 சதவீதம்) சுற்றிக்கொண்டிருந்தது. ஆனால் சென்னை அணியின் தடுப்பு அரணை கடைசி வரை உடைக்க முடியவில்லை. அதே சமயம் மனரீதியாக துவண்டு போன கோவா அணியினருக்கு 90-வது நிமிடத்தில் லால்பெகுலா மீண்டும் ஒரு ‘செக்’ வைத்தார். காவிலன் தட்டிக்கொடுத்த பந்தை லால்பெகுலா, கோவா கோல் கீப்பர் நவீன்குமாரை ஏமாற்றி லாவகமாக கோல் அடித்தார். முடிவில் சென்னை அணி 3-0 என்ற கோல் கணக்கில் கோவாவை ஊதித்தள்ளியது.

இறுதிப்போட்டியில் சென்னை

இரண்டு அரைஇறுதி சுற்று முடிவுகளின் அடிப்படையில் சென்னை அணி 4-1 என்ற கோல் கணக்கில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. சென்னை அணி இறுதிப்போட்டியை எட்டுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு வந்ததுடன், அதில் கோப்பையும் வென்று இருந்தது.

சாம்பியன் மகுடத்துக்கான இறுதிஆட்டம் வருகிற 17-ந்தேதி பெங்களூருவில் நடக்கிறது. இதில் சென்னையின் எப்.சி. அணி, பெங்களூரு எப்.சி.யுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.