கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்தில் மகுடம் சூடுவது யார்?சென்னை-பெங்களூரு அணிகள் இறுதிப்போட்டியில் இன்று மோதல் + "||" + Chennai-Bengaluru teams Clash in the final today

ஐ.எஸ்.எல். கால்பந்தில் மகுடம் சூடுவது யார்?சென்னை-பெங்களூரு அணிகள் இறுதிப்போட்டியில் இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்தில் மகுடம் சூடுவது யார்?சென்னை-பெங்களூரு அணிகள் இறுதிப்போட்டியில் இன்று மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் சென்னை-பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன.
பெங்களூரு,

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் சென்னை-பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன.

ஐ.எஸ்.எல். கால்பந்து

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கடந்த ஆண்டு நவம்பர் 17-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் அரைஇறுதி சுற்று முடிவில் சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி. ஆகிய அணிகள் இறுதிப்போட்டியை எட்டின.


4 மாத காலம் நடந்த இந்த கால்பந்து திருவிழாவில் ‘கிளைமாக்ஸ்’ இன்றிரவு (சனிக்கிழமை) பெங்களூருவில் உள்ள கான்டீரவா ஸ்டேடியத்தில் அரங்கேறுகிறது. இதில் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.- பெங்களூரு எப்.சி. அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சென்னை வீரர் லால்பெகுலா

2015-ம் ஆண்டு சாம்பியனான சென்னை அணி, இந்த சீசனில் லீக் சுற்றில் 9 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை பிடித்தது. அரைஇறுதி சுற்றில் 4-1 என்ற கோல் வித்தியாசத்தில் கோவாவை புரட்டியெடுத்தது.

சரியான நேரத்தில் உச்சக்கட்ட பார்முக்கு வந்திருக்கும் சென்னை அணியில் ஜெஜெ லால்பெகுலா (9 கோல்), தனபால் கணேஷ், ரபெல் அகஸ்டோ, இனிகோ கால்ட்ரோன், கிரிகோரி நெல்சன் உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இவர்களைத்தான் சென்னை அணி மலைபோல் நம்பி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இதே போல் 49 கோல் வாய்ப்புகளை முறியடித்து இருக்கும் கோல் கீப்பர் கரன்ஜித்சிங்கும் சூப்பர் பார்மில் இருக்கிறார்.

பெங்களூரு அணியின் இரட்டை தூண்

அறிமுக பெங்களூரு எப்.சி., தங்களது முதல் சீசனிலேயே பிரமிக்கத்தக்க வகையில் விளையாடி இருக்கிறது. லீக் சுற்றில் 18 ஆட்டங்களில் 13-ல் வெற்றிகளை குவித்து முதலிடத்தை பிடித்த பெங்களூரு அணி அரைஇறுதி சுற்றில் 3-1 என்ற கோல் கணக்கில் புனே சிட்டியை விரட்டியடித்தது.

மிகுவும் (14 கோல்), கேப்டன் சுனில் சேத்ரியும் (13 கோல்) பெங்களூரு அணியின் இரட்டை தூண்களாக விளங்குகிறார்கள். அரைஇறுதியின் 2-வது சுற்றில் சுனில் சேத்ரி ‘ஹாட்ரிக்’ கோல் போட்டது கவனிக்கத்தக்கது. இதே போல் முக்கியமான கட்டங்களில் தங்கள் அணியை கோல் ஆபத்துகளில் இருந்து காப்பாற்றி உள்ள கோல் கீப்பர் குர்பிரீத்சிங் சந்துவும் சிம்மசொப்பனமாக திகழ்கிறார். இவரை தாண்டி கோல் போடுவது எளிதான காரியம் அல்ல. இந்த தொடரில் சராசரியாக 111.86 நிமிடங்களுக்கு ஒரு கோல் வீதம் விட்டுக்கொடுத்திருப்பதே அதற்கு சான்று. கடந்த 10 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காத பெங்களூரு அணிக்கு, உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் காண்பது சாதகமான அம்சமாகும். எப்படி ஐ.-லீக் கால்பந்து போட்டியில் தங்களது அறிமுக சீசனிலேயே வாகை சூடியதோ அதே போன்று இங்கும் சாதிக்க வேண்டும் என்பதில் பெங்களூரு அணியினர் தீவிரமாக இருக்கிறார்கள்.

இவ்விரு அணிகளும் ஏற்கனவே லீக்கில் இரண்டு ஆட்டங்களில் மோதியுள்ளன. ஒன்றில் பெங்களூரு எப்.சி.யும் (3-1), மற்றொன்றில் சென்னையின் எப்.சி.யும் (2-1) வெற்றி கண்டுள்ளன. ஆக, இரு அணிகளும் சரிசமபலத்துடன் மல்லுகட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

பயிற்சியாளர்கள் கருத்து

சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஜான் கிரிகோரி (இங்கிலாந்து) நிருபர்களிடம் கூறுகையில், ‘பெங்களூரு எப்.சி. ஒன்றும் தோற்கடிக்க முடியாத அணி அல்ல. ஏற்கனவே அவர்களை லீக் சுற்றில் அவர்களது இடத்திலேயே வீழ்த்தி உள்ளோம். எனவே யாரையும் கண்டு எங்களுக்கு பயம் இல்லை. இறுதிப்போட்டியில் தொடக்கத்திலேயே கோல் அடிக்கும் அணியின் கையே ஓங்கும். அனேகமாக இரு அணிகளுமே தாக்குதல் ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தும் என்று கருதுகிறேன். எங்கள் அணியில் ஜெஜெ லால்பெகுலா தான் பிரதான வீரர். கடைசி ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்த அவர் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளார்.’என்றார்.

பெங்களூரு எப்.சி. பயிற்சியாளர் ஆல்பர்ட் ரோக்கா (ஸ்பெயின்) கூறுகையில், ‘ஏ.எப்.சி. கோப்பைக்கான போட்டியில் விளையாட வேண்டி இருந்ததால் மற்ற அணிகளை காட்டிலும் நாங்கள் ஒரு மாதத்திற்கு முன்னதாக பயிற்சிகளை தொடங்கினோம். இதுவரையிலான எங்களது செயல்பாடும், ரசிகர்களின் ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் ஒரு அடி வெற்றிகரமாக பயணிக்க வேண்டி இருக்கிறது. இது, கடினமான அணிக்கு எதிரான மிகப்பெரிய போட்டியாகும். தாங்கள் தரமான அணி என்பதை சென்னையின் எப்.சி. வெளிக்காட்டியுள்ளது. இந்த சீசனில் இதுதான் மிகவும் கடினமான போட்டியாக இருக்கும். சவாலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்’ என்றார்.

பரிசு எவ்வளவு?

கோப்பையை உச்சிமுகரும் அணி ரூ.8 கோடியையும், தோல்வி அடையும் அணி ரூ.4 கோடியையும் பரிசுத்தொகையாக பெறும். இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.