கால்பந்து

ஐ.எஸ்.எல். போட்டியில் 2-வது முறையாக சென்னை அணி சாம்பியன்:“தடைகளை தாண்டி சாதித்து இருக்கிறோம்” + "||" + ISL Contest Chennai team champion for 2nd time:

ஐ.எஸ்.எல். போட்டியில் 2-வது முறையாக சென்னை அணி சாம்பியன்:“தடைகளை தாண்டி சாதித்து இருக்கிறோம்”

ஐ.எஸ்.எல். போட்டியில் 2-வது முறையாக சென்னை அணி சாம்பியன்:“தடைகளை தாண்டி சாதித்து இருக்கிறோம்”
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் பல தடைகளை தாண்டி சென்னை அணி மகுடம் சூடியிருப்பதாக பயிற்சியாளர் ஜான் கிரிகோரி கூறியிருக்கிறார்.
சென்னை,

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் பல தடைகளை தாண்டி சென்னை அணி மகுடம் சூடியிருப்பதாக பயிற்சியாளர் ஜான் கிரிகோரி கூறியிருக்கிறார்.

ஐ.எஸ்.எல். கால்பந்து

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் நடந்த இறுதி ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி 3-2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எப்.சி.யை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை ருசித்தது. மெயில்சன் ஆல்வ்ஸ் (2 கோல்), ரபெல் அகஸ்டோ சென்னை அணியில் கோல் அடித்தனர்.


கோப்பையை வென்ற பிறகு சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஜான் கிரிகோரி (இங்கிலாந்து) கூறுகையில், ‘இறுதிப்போட்டியில் விளையாடுவது அதுவும் எதிரணியை அவர்களது இடத்திலேயே சாய்ப்பது என்பது சுலபமான காரியம் அல்ல. இங்குள்ள சூழல் உள்ளூர் அணிக்கே சாதகமாக இருந்தது. 0-1 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த போதிலும் தைரியமாக போராடி மீண்டு வந்து வெற்றி கண்டிருக்கிறோம். எத்தகைய நிலையில் பின்தங்கி இருந்தாலும் மனஉறுதியுடன் போராடினால் மீள முடியும் என்பதை இந்த சீசனில் காட்டியிருக்கிறோம்.

இறுதி ஆட்டத்தை பொறுத்தவரை முதல் பாதியில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது எங்களுக்கு சாதகமாக மாறியது. அது மட்டுமின்றி முதல்பாதி ஆட்டம் முடிந்ததும் எங்களது வீரர்களிடம் ‘பிற்பாதியில் தவறுக்கு இடம் கொடுக்காமல் தொடர்ந்து ஆடுங்கள். வெற்றி பெறலாம் என்று கூறினேன். இந்த சீசன் முழுவதும் பல்வேறு தடைகளை தாண்டியே வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக வீரர்களின் ஒருங்கிணைப்பு சாதிக்க வித்திட்டது.’ என்றார்.

பெங்களூரு பயிற்சியாளர் புலம்பல்

பெங்களூரு எப்.சி. பயிற்சியாளர் ஆல்பர்ட் ரோக்கா (ஸ்பெயின்) கூறுகையில், ‘கார்னர் பகுதியில் இருந்து இரண்டு கோல்கள் விட்டுக்கொடுத்தது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. இதற்காக எங்களது தடுப்பாட்டக்காரர்களை குறை சொல்லமாட்டேன். இதற்கு நானே பொறுப்பு. களத்தில் வீரர்களை எந்த மாதிரி நிற்க வைப்பது என்ற வியூகத்தில் நான் தவறு செய்து விட்டேன். கால்பந்தில் வீரர்கள் மட்டுமல்ல சில நேரம் பயிற்சியாளர்களும் தவறு செய்கிறார்கள். அந்த வகையில் இந்த முறை நான் தவறிழைத்து விட்டேன்.

எங்களது கேப்டன் சுனில் சேத்ரி அற்புதமான ஒரு வீரர். அவரை நினைத்து மிகவும் பெருமிதம் அடைகிறேன். தொடக்கத்திலேயே கோல் அடித்தது மட்டுமின்றி, கடைசி நிமிடம் வரை முழு மூச்சுடன் போராடினார்’ என்றார்.

சென்னையில் வரவேற்பு

ஐ.எஸ்.எல். போட்டியில் வாகை சூடிய சென்னையின் எப்.சி. வீரர்கள் நேற்று சென்னை திரும்பினர். சென்னை சேத்துப்பட்டில் உள்ள நேரு பூங்காவில் வீரர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ரசிகர்கள் பாட்டுபாடி உற்சாகமான வரவேற்பு அளித்தனர். வீரர்கள் ‘மறுபடியும் தூக்கிட்டோம்’ என்ற வாசகம் அடங்கிய சீருடையுடன் வலம் வந்தனர். 2015 மற்றும் இந்த ஆண்டில் வென்ற இரண்டு கோப்பைகளையும் எடுத்து வந்திருந்தனர். ரசிகர்கள் அனைவருக்கும் தமிழில் நன்றி தெரிவித்தனர்.