பெரு கால்பந்து கேப்டனுக்கு தடை நீட்டிப்பு


பெரு கால்பந்து கேப்டனுக்கு தடை நீட்டிப்பு
x
தினத்தந்தி 15 May 2018 9:45 PM GMT (Updated: 15 May 2018 7:45 PM GMT)

பெரு கால்பந்து அணியின் கேப்டனுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பெரு,

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அர்ஜென்டினாவில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியின் தகுதி சுற்று ஆட்டத்தில் ஆடிய பெரு அணியின் கேப்டன் பாலோ குரேரோவிடம் நடத்திய ஊக்க மருந்து சோதனையில் அவர் கோகைன் என்னும் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்திய சர்வதேச கால்பந்து சம்மேளன ஒழுங்கு நடவடிக்கை குழு, பாலோ குரேரோவுக்கு ஒரு ஆண்டு தடை விதித்தது. இதை எதிர்த்து செய்யப்பட்ட அப்பீலில் அவரது தண்டனையை சர்வதேச கால்பந்து சம்மேளனம் 6 மாத காலமாக குறைத்தது. இந்த நிலையில் உலக ஊக்க மருந்து தடுப்பு கழகம் சார்பில், சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் பாலோ குரேரேவுக்கு விதிக்கப்பட்ட ஒரு ஆண்டு தடையை 2 ஆண்டாக உயர்த்த வேண்டும் என்று அப்பீல் செய்யப்பட்டது. தடை காலம் முடிந்து களம் திரும்பி இருந்த பாலோ குரேரோவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அதில் பாலோ குரேரோவின் தடை காலம் 14 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் 34 வயதான பாலோ குரேரோ, ரஷியாவில் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாட முடியாது. பெரு அணி 36 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story