உலக கோப்பை கால்பந்து திருவிழா–2018 - இன்னும் 21 நாட்களில்....


உலக கோப்பை கால்பந்து திருவிழா–2018 - இன்னும் 21 நாட்களில்....
x
தினத்தந்தி 22 May 2018 8:45 PM GMT (Updated: 22 May 2018 7:56 PM GMT)

உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கும் 21–வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 14–ந்தேதி முதல் ஜூலை 15–ந்தேதி வரை ரஷியாவில் நடக்கிறது.

லகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கும் 21–வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 14–ந்தேதி முதல் ஜூலை 15–ந்தேதி வரை ரஷியாவில் நடக்கிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த உதைவிழா கடந்து வந்த பாதையை தினமும் அலசலாம்.

முதலாவது உலக கோப்பை (1930)

நடத்திய நாடு–உருகுவே, பங்கேற்ற அணிகள் –13

ஒலிம்பிக் போட்டியில் 1924, 1928–ம் ஆண்டுகளில் கால்பந்துக்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்த வேண்டும் என்ற முடிவுக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) வந்தது.

1930–ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை நடத்த இத்தாலி, சுவீடன், நெதர்லாந்து, ஸ்பெயின், ஹங்கேரி, உருகுவே ஆகிய 6 நாடுகள் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்தன. நடப்பு ஒலிம்பிக் சாம்பியன், பொருளாதார பிரச்சினையிலும் புதிய ஸ்டேடியம் கட்டுவதாக வாக்குறுதி கொடுத்தது, பங்கேற்கும் அணிகளின் போக்குவரத்து செலவு உள்ளிட்ட செலவினங்கள் அனைத்தையும் ஏற்பதாக உத்தரவாதம் அளித்தது போன்ற காரணங்களால் உருகுவே உலக கோப்பையை நடத்தும் உரிமத்தை தட்டிச் சென்றது. உருகுவேயில், முதலாவது அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உலக கோப்பை கால்பந்து திருவிழாவும் ஒட்டிக்கொண்டன.

தென்அமெரிக்க நாடான உருகுவேவுக்கு செல்வது நெடிய கப்பல் பயணம் மற்றும் அதிகமான செலவு பிடிக்கும் என்பதால் ஐரோப்பிய அணிகள் இந்த உலக கோப்பையில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை. கால்பந்து கிளப்புகளும் முன்னணி வீரர்களை விடுவிக்க மறுத்தன. போட்டி தொடங்குவதற்கு 2 மாதங்கள் இருந்த வரை எந்த ஐரோப்பிய அணிகளும் பங்கேற்க பதிவு செய்யவில்லை. பிறகு ‘பிபா’ தலைவர் ஜூலஸ் ரிமெட் தலையிட்டு சமரச பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் பெல்ஜியம், பிரான்ஸ், ருமேனியா, யூகோஸ்லாவியா ஆகிய 4 ஐரோப்பிய அணிகள் உலக கோப்பையில் ஆடுவதற்கு சம்மதம் தெரிவித்தன. யூகோஸ்லாவியா அணி வீரர்கள் தனிக்கப்பலில் உருகுவேக்கு புறப்பட்டு சென்றனர். எஞ்சிய 3 ஐரோப்பிய அணி வீரர்களும் ஒரே கப்பலில் பயணித்தனர். ரியோ டி ஜெனீரோவுக்கு வந்த போது பிரேசில் வீரர்களையும் ஏற்றிக் கொண்டது. ஐரோப்பிய அணிகளுக்கு இந்த கப்பல் பயணம் 15 நாட்கள் நீடித்தது. இவர்களுடன் உலக கோப்பையும் எடுத்து செல்லப்பட்டது.

பங்கேற்ற 13 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. தகுதி சுற்று இல்லாமல் நடத்தப்பட்ட ஒரே உலக கோப்பை இது தான். அனைத்து ஆட்டங்களும் தலைநகர் மான்டேவீடியோவில் உள்ள மூன்று ஸ்டேடியங்களில் நடத்தப்பட்டது.

தொடக்க ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 4–1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை தோற்கடித்தது. இதில் 19–வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் லூசியன் லாரென்ட் அடித்த கோலே, உலக கோப்பையில் அடிக்கப்பட்ட முதல் கோலாகும். ஆனால் அடுத்த லீக் ஆட்டங்களில் அர்ஜென்டினா, சிலியிடம் தோற்று பிரான்ஸ் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. இதில் அர்ஜென்டினாவுக்கு எதிராக பிரான்ஸ் அணி பதில் கோல் திருப்பி சமன் செய்ய போராடிக்கொண்டிருந்த போது, 6 நிமிடங்களுக்கு முன்பே நடுவர் ஆட்டம் முடிவதற்கான விசிலடித்தது சர்ச்சையை கிளப்பியது. பிரேசில் அணி தனது பிரிவில் யூகோஸ்லாவியாவிடம் (1–2) தோற்று, பொலிவியாவை (4–0) வென்று 2–வது இடத்தை பிடித்து வெளியேறியது.

லீக் சுற்று முடிவில் உருகுவே, யூகோஸ்லாவியா, அர்ஜென்டினா, அமெரிக்கா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. அரைஇறுதி ஆட்டங்களில் உருகுவே 6–1 என்ற கோல் கணக்கில் யூகோஸ்லாவியாவையும், அர்ஜென்டினா 6–1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவையும் பந்தாடின.

ஜூலை 30–ந்தேதி, 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களின் முன்னிலையில் உருகுவே–அர்ஜென்டினா மோதிய இறுதி ஆட்டம் அரங்கேறியது. முதல் பாதியில் 1–2 என்ற கணக்கில் உருகுவே பின்தங்கி இருந்தாலும் பிற்பாதியில் எழுச்சி பெற்றது. சியா (57–வது நிமிடம்), இரியர்ட் (68–வது நிமிடம்), கேஸ்ட்ரோ (89–வது நிமிடம்) ஆகியோர் தொடர்ந்து அடித்த கோல்களின் உதவியுடன் உருகுவே 4–2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதலாவது உலக கோப்பையை உச்சிமுகர்ந்தது. உருகுவே வீரர்கள் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தனர். மறுநாள் உருகுவேயில் தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. இந்த உலக கோப்பையில் மொத்தம் நடந்த 18 ஆட்டங்களில் 70 கோல்கள் அடிக்கப்பட்டன. அர்ஜென்டினா வீரர் குல்லர்மோ ஸ்டாபி 8 கோல்கள் போட்டு அதிக கோல்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

முதலாவது உலக கோப்பையில் விளையாடிய வீரர்கள் 87 ஆண்டுகள் கடந்த நிலையில் இப்போது யாரும் உயிருடன் இல்லை. அர்ஜென்டினா அணிக்காக ஆடிய பிரான்சிஸ்கோ வரலோ கடைசியாக தனது 100–வது வயதில் 2010–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மறைந்தார்.

முதல் கோல் அடித்த வீரர்

உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல் கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பிரான்சின் லூசியன் லாரென்ட் பெற்றார். மெக்சிகோவுக்கு எதிராக அவர் இந்த கோலை அடித்தார். ஆனால் காயம் காரணமாக கடைசி லீக்கில் விளையாட முடியவில்லை. அடுத்த உலக கோப்பையிலும் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இதன் பிறகு கிளப் போட்டிகளில் மட்டும் அவர் கவனம் செலுத்தினார். இரண்டாம் உலகப்போரின் போது ஆயுதப்படையில் இணைய அழைக்கப்பட்ட அவர் ஜெர்மனியர்களால் சிறைபிடிக்கப்பட்டு 3 ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்தார். விடுதலைக்கு பிறகு இளைஞர்களுக்கு கால்பந்து பயிற்சி அளித்து வந்த அவர் தனது 97–வது வயதில் மரணம் அடைந்தார்.


Next Story