3–வது உலக கோப்பை 1938 (சாம்பியன்– இத்தாலி)


3–வது உலக கோப்பை 1938 (சாம்பியன்– இத்தாலி)
x
தினத்தந்தி 24 May 2018 9:00 PM GMT (Updated: 24 May 2018 8:49 PM GMT)

ஐரோப்பிய கண்டத்தில் போர்மேகம் சூழ்ந்து கொண்டிருந்த நிலையில், 3–வது உலக கோப்பையை நடத்தும் உரிமத்தை அர்ஜென்டினா, ஜெர்மனியை பின்னுக்கு தள்ளிவிட்டு பிரான்ஸ் பெற்றது.

நடத்திய நாடு– பிரான்ஸ், பங்கேற்ற அணிகள்–15

ரோப்பிய கண்டத்தில் போர்மேகம் சூழ்ந்து கொண்டிருந்த நிலையில், 3–வது உலக கோப்பையை நடத்தும் உரிமத்தை அர்ஜென்டினா, ஜெர்மனியை பின்னுக்கு தள்ளிவிட்டு பிரான்ஸ் பெற்றது.

போட்டியை நடத்திய பிரான்சுடன், நடப்பு சாம்பியனும் (இத்தாலி) முதல்முறையாக இந்த உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றது. நடப்பு சாம்பியன் தகுதி சுற்றில் விளையாடாமல் நேரடியாக தகுதி பெறும் நடைமுறை 2006–ம் ஆண்டு வரை நீடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டிக்கு ஆஸ்திரியாவும் தகுதி பெற்று இருந்தது. ஆனால் அந்த நாட்டை ஜெர்மனி படைகள் கைப்பற்றி தங்களோடு இணைத்துக் கொண்டதால் ஆஸ்திரியா விலக நேரிட்டது. அதற்கு பதிலாக வேறு நாடு எதுவும் அழைக்கப்படவில்லை. இதனால் சில ஆஸ்திரியா வீரர்கள் ஜெர்மனி அணியில் இணைந்தனர். தொடர்ந்து 2–வது முறையாக ஐரோப்பிய நாட்டிற்கே உலககோப்பையை நடத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டதால், கோபத்தில் முன்னாள் சாம்பியன் உருகுவே, அர்ஜென்டினா அணிகள் புறக்கணித்தன. உள்நாட்டு கலவரம் காரணமாக ஸ்பெயினும் பின்வாங்கியது. கியூபா, நார்வே, போலந்து அணிகள் முதல்முறையாக உலக கோப்பையில் அடியெடுத்து வைத்தன.

முந்தைய உலக கோப்பையை போன்றே ‘நாக்–அவுட்’ முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதே போல் கூடுதல் நேரத்திலும் சமநிலை நீடித்தால் மறுநாள் ஆட்டத்தை புதியதாக நடத்தப்படும் என்ற விதிமுறையும் தொடர்ந்தது.

நாக்–அவுட் சுற்றில் சுவீடனை எதிர்த்து ஆட இருந்த ஆஸ்திரியா விலகியதால் சுவீடன் விளையாடாமலேயே கால்இறுதியை எட்டியது. மீதமுள்ள 7 நாக்–அவுட் சுற்று ஆட்டங்களில் 5 ஆட்டங்கள் கூடுதல் நேரத்திற்கு சென்றது. இதில் இரண்டு ஆட்டங்களில் மறுநாள் தான் முடிவு கிட்டியது. ஜெர்மனி முதல் ரவுண்டிலேயே சுவிட்சர்லாந்திடம் உதைவாங்கி மூட்டையை கட்டியது.

கால்இறுதி ஆட்டங்களில் சுவீடன் 8–0 என்ற கோல் கணக்கில் கியூபாவையும், பிரேசில் 2–1 என்ற கோல் கணக்கில் செக்கோஸ்லோவக்கியாவையும், ஹங்கேரி 2–1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தையும் தோற்கடித்தது. போட்டியை நடத்திய பிரான்சை 3–1 என்ற கோல் கணக்கில் இத்தாலி துரத்தியது.

அரைஇறுதி ஆட்டங்களில் இத்தாலி 2–1 என்ற கோல் கணக்கில் பிரேசிலையும், ஹங்கேரி 5–1 என்ற கோல் கணக்கில் சுவீடனையும் வென்றது.

இதையடுத்து பாரீஸ் நகரில் ஜூன் 19–ந்தேதி இத்தாலி– ஹங்கேரி இடையே இறுதிப்போட்டி நடந்தது. இதில் இத்தாலி 4–2 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை எளிதில் வீழ்த்தி மீண்டும் மகுடம் சூடியது. இத்தாலி அணியில் லுஜி கோலாசி, சில்வியோ பியலா ஆகியோர் தலா 2 கோல்கள் போட்டனர். அடுத்தடுத்து இரு உலக கோப்பையில் பட்டம் வென்ற முதல் அணி என்ற பெருமை இத்தாலிக்கு கிடைத்தது.

வெறும் 16 நாட்களில் இந்த உலக கோப்பை நடத்தி முடிக்கப்பட்டது. மொத்தம் நடைபெற்ற 18 ஆட்டங்களில் 84 கோல்கள் அடிக்கப்பட்டன. இந்த உலக கோப்பையுடன் இரண்டாவது உலகபோர் மூண்டதால் 1942, 1946–ம் ஆண்டுகளில் உலக கோப்பை போட்டிகள் நடத்தப்படவில்லை. இதனால் 16 ஆண்டுகள் அதாவது 1934–ம் ஆண்டில் இருந்து 1950–ம் ஆண்டு வரை இத்தாலி அணி உலக சாம்பியன் அந்தஸ்துடன் வலம் வந்தது.

‘ரப்பர் மனிதன்’

பிரேசில் வீரர் லியோனிதாஸ் இந்த உலக கோப்பையில் அதிக கோல்கள் (மொத்தம் 7) அடித்த வீரர் என்ற சிறப்பை பெற்றார். இதில் போலந்துக்கு எதிராக அவர் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்ததும் அடங்கும். இவருக்கு ‘கருப்பு வைரம்’, ‘ரப்பர் மனிதன்’ போன்ற செல்ல பெயர்கள் உண்டு. களத்தில் இறங்கி விட்டால் வேகமாகவும், படு சுறுசுறுப்பாகவும் வளைந்து, நெளிந்து பந்தை எதிரணி கோல் கம்பத்தை நோக்கி கடத்துவதில் வல்லவர். அந்தரத்தில் பல்டி அடித்து ‘பைசைக்கிள் கிக்’கை அறிமுகப்படுத்திய வீரர்களில் இவருக்கும் பங்கு உண்டு. உலக கோப்பையில் அந்த மாதிரி அவர் அடித்த ஒரு ஷாட்டை கண்டு ரசிகர்கள் பரவசத்தில் மெய்மறந்து போனார்கள்.


Next Story