கால்பந்து

4–வது உலக கோப்பை 1950(சாம்பியன்–உருகுவே) + "||" + 4th World Cup 1950

4–வது உலக கோப்பை 1950(சாம்பியன்–உருகுவே)

4–வது உலக கோப்பை 1950(சாம்பியன்–உருகுவே)
இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942, 1946–ம் ஆண்டு உலக கோப்பை போட்டிகள் நடத்தப்படவில்லை.

நடத்திய நாடு– பிரேசில், பங்கேற்ற அணிகள்–13

ரண்டாம் உலகப் போர் காரணமாக 1942, 1946–ம் ஆண்டு உலக கோப்பை போட்டிகள் நடத்தப்படவில்லை. யுத்தம் ஓய்ந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு உலக கால்பந்து போட்டி மீண்டும் புத்துயிர் பெற்றது. 4–வது உலக கோப்பையை நடத்தும் உரிமம் தென்அமெரிக்க நாடான பிரேசிலுக்கு வழங்கப்பட்டது.

பிரிட்டிஷ் பேரரசு 1894–ம் ஆண்டு பிரேசிலில் கால்பந்து விளையாட்டை அறிமுகம் செய்தது. குறுகிய காலத்திலேயே கால்பந்து மோகம் கொண்ட தேசமாக உருவெடுத்துவிட்ட பிரேசில், இந்த உலக கோப்பையில் அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைப்பதற்கு பெரும்பாடு பட வேண்டி இருந்தது.

உலகப்போர் முடிந்தாலும் அதன் தாக்கம் இந்த உலக கோப்பையில் எதிரொலித்ததை மறுக்க முடியாது. போரில் வீழ்ச்சியடைந்த ஜெர்மனி, ஜப்பான் நாடுகளின் சில பகுதிகள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியிருந்ததால், அந்த நாடுகளுக்கு உலக கோப்பை தகுதி சுற்றில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.

போட்டியை நடத்திய பிரேசிலும், 16 ஆண்டு நடப்பு சாம்பியனாக வலம் வந்த இத்தாலியும் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது. மீதமுள்ள 14 அணிகளை தகுதி சுற்று மூலம் தேர்வு செய்ய வேண்டி இருந்தது. இதில் ஆசியாவுக்கும் ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

அடுக்கடுக்கான பிரச்சினைகள் காரணமாக பல அணிகள் தகுதி சுற்றில் ஆடாமல் பின்வாங்கின. இதில் ஹங்கேரி, செக்கோஸ்லோவக்கியா, அர்ஜென்டினா, ஈகுவடார், பெரு, ஆஸ்திரியா, பெல்ஜியம் அணிகள் முக்கியமானவை. அர்ஜென்டினாவை பொறுத்தவரை பிரேசில் கால்பந்து சங்கத்துடன் ஏற்பட்ட மோதல் போக்கால் அங்கு செல்ல மறுத்தது. இதன் காரணமாக சில அணிகளுக்கு தகுதி சுற்றில் ஆடாமலேயே பிரதான சுற்றை எட்டும் அதிர்ஷ்டம் கிட்டியது. ஐரோப்பாவில் நடத்தப்பட்டதால் முந்தைய இரு உலக கோப்பைகளை புறக்கணித்த முதலாவது உலக சாம்பியன் உருகுவே அணி இந்த முறை மகிழ்ச்சியுடன் பங்கேற்றது. இதே போல் இங்கிலாந்து அறிமுக அணியாக அடியெடுத்து வைத்தது.

ஆசிய அணிகளில் பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, பர்மா அணிகள் ‘ஜகா’ வாங்கியதால் இந்தியா தானாகவே உலக கோப்பைக்கு முதல்முறையாக தகுதி பெற்றது. அந்த சமயத்தில் இந்தியா ஆசியாவில் சிறந்த அணிகளில் ஒன்றாக விளங்கியது. போட்டி அட்டவணையில் இந்திய அணி, சுவீடன், இத்தாலி, பராகுவே ஆகிய அணிகளுடன் ஒரே குரூப்பில் இடம் பிடித்திருந்தது. இந்தியா தனது முதல் லீக்கில் பராகுவேயுடன் மோதும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டிருந்தது.

ஆனால் காலணி இன்றி வெறுங்காலுடன் விளையாடுவதற்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) தடை விதித்ததால் இந்திய அணி உலக கோப்பையில் ஆடுவதற்கு தயக்கம் காட்டியது. மேலும் நீண்ட பயணம் என்பதால், செலவுத் தொகையும் உறுத்தியது. ஒரு கட்டத்தில் கப்பல் பயணத்திற்குரிய செலவுத் தொகையை ஏற்றுக்கொள்வதாக பிரேசில், இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கு உறுதி அளித்தது. இதனால் இந்திய அணி நிச்சயம் இந்த போட்டியில் பங்கேற்கும் என்று கருதிய பிரேசில், வேறு எந்த ஆசிய அணியையும் அழைக்கவில்லை. ஆனால் கடைசி நேரத்தில் உலக கோப்பையில் இருந்து இந்தியா ஒதுங்கிக் கொண்டது. பொன்னான வாய்ப்பை நழுவ விட்ட இந்தியாவுக்கு அதன் பிறகு உலக கோப்பையில் ஆடும் கனவு இந்தநாள் வரை நனவாகவில்லை. துருக்கியும், ஸ்காட்லாந்தும் கடைசி நேரத்தில் விலகின. மாற்று அணிகளை சேர்க்கும் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து அணிகளின் எண்ணிக்கை 13 ஆக குறைந்தது.

13 அணிகள் 4 பிரிவாக (ஒரு பிரிவில் 4 அணி, மற்ற பிரிவுகளில் 3 அணி) பிரிக்கப்பட்டன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் இறுதிகட்ட லீக் சுற்றுக்கு முன்னேறும். தனியாக இறுதிப்போட்டி நடத்தப்படாத ஒரே உலக கோப்பை இது தான். நடப்பு சாம்பியன் இத்தாலி முதல் சுற்றை தாண்டவில்லை. முந்தைய ஆண்டில் நடந்த விமான விபத்தில் சில இத்தாலி வீரர்கள் பலியானதால் இந்த முறை பலவீனமான அணியாகவே காணப்பட்டது. அது மட்டுமின்றி விமான பயணத்தை தவிர்த்து, கப்பல் மூலமே அந்த அணி வீரர்கள் பிரேசில் சென்றது கவனிக்கத்தக்க ஒன்று.

லீக் சுற்று முடிவில் உருகுவே, பிரேசில், சுவீடன், ஸ்பெயின் ஆகிய 4 அணிகள் இறுதிகட்ட லீக் சுற்றுக்கு தகுதி பெற்றது. இறுதி சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். யார் அதிக புள்ளிகள் சேர்க்கிறார்களோ அந்த அணியே உலக சாம்பியன் கிரீடம் அலங்கரிக்கும் என்பது விதிமுறையாகும்.

பிரேசில் முதல் இரு லீக்கில் 7–1 என்ற கோல் கணக்கில் சுவீடனையும், 6–1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினையும் ஊதித்தள்ளியது. அதே நேரத்தில் ஸ்பெயினுடன் 2–2 என்ற கோல் கணக்கில் டிரா செய்த உருகுவே அணி அடுத்த ஆட்டத்தில் சுவீடனை 3–2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

இதையடுத்து இறுதி லீக் ஆட்டத்தில் பிரேசில்–உருகுவே அணிகள் ரியோடி ஜெனீரோ நகரில் புதியதாக கட்டப்பட்ட மரகானா ஸ்டேடியத்தில் சந்தித்தன. ‘டிரா’ செய்தாலே கோப்பையை கையில் ஏந்தி விடலாம் என்ற நிலைமையில் பிரேசிலும், கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் உருகுவேயும் இருந்தன.

சொந்த மண்ணில் வலுவான அணியாக விளங்கிய பிரேசில் அணியே உலக கோப்பையை கைப்பற்றும் என்பது நிபுணர்களின் கணிப்பாகும். இறுதிப்போட்டிக்கு முந்தைய நாள் சில பிரேசில் பத்திரிகைகள், ‘நாளை நாங்கள் உருகுவேயை வீழ்த்துவோம். இவர்கள் தான் புதிய உலக சாம்பியன்கள்’ என்று தலைப்பிட்டு பிரேசில் வீரர்களின் புகைப்படங்களை வெளியிட்டது. இதனால் பிரேசில் முழுவதும் உலக கோப்பை ஜூரம் பற்றி எரிந்தது.

மரகானா ஸ்டேடியத்தில் ஏறக்குறைய 2 லட்சம் ரசிகர்கள் திரண்டு இருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களம் இறங்கிய பிரேசில் 47–வது நிமிடத்தில் கோல் அடித்தது. அந்த அணி வீரர் பிரைக்கா கோல் போட்டார். 66–வது நிமிடத்தில் உருகுவே வீரர் ஸ்சியாப்பினோ பதில் கோல் திருப்பினார். 79–வது நிமிடத்தில் உருகுவே வீரர் அல்சிட் ஜிக்கியோ இன்னொரு கோல் அடிக்க, ஒரு கணம் ஸ்டேடியம் அதிர்ச்சியில் உறைந்து போனது. இவரது உதையில், கோல் கம்பத்தை நோக்கி தாழ்வாக சென்ற பந்து, பிரேசில் கோல் கீப்பர் பார்போசாவின் தவறான கணிப்பால் கோலாக மாறியது. எஞ்சிய 11 நிமிடங்கள் மேற்கொண்டு கோல் வாங்காமல் உருகுவே வீரர்கள் பார்த்துக் கொண்டனர்.

முடிவில் உருகுவே 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, பிரேசிலின் கனவை தகர்த்தது. உருகுவே 5 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து 2–வது முறையாக உலக கோப்பையை உச்சிமுகர்ந்தது. பிபா தலைவராக ஜூலெஸ் ரிமெட் 25 ஆண்டுகள் பதவி வகித்ததையொட்டி அவரது பெயரில் இந்த உலக கோப்பை வழங்கப்பட்டது. பிரேசில் 4 புள்ளியுடன் 2–வது இடத்தை பிடித்தது. பிரேசில் தோற்றதும் ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். ஸ்டேடியத்திற்கு வெளியே கலவரமும் வெடித்தது. பிரேசில் தான் ஜெயிக்கும் என்று கருதி பிரேசில் வீரர்களின் உருவம் பொறித்த 22 தங்க நாணயங்கள் தயார் செய்து வைக்கப்பட்டிருந்தன. அவை வழங்கப்படாமல் அப்புறப்படுத்தப்பட்டது.

இந்த உலக கோப்பையில் மொத்தம் நடந்த 22 ஆட்டங்களில் 88 கோல்கள் அடிக்கப்பட்டன. அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் பிரேசில் வீரர் அட்மிர் (8 கோல்) முதலிடத்தை பிடித்தார்.

பிரேசில் கோல் கீப்பரை திட்டி தீர்த்த மக்கள்

இறுதி லீக்கில் பிரேசில் தோற்றதும், எல்லோரது ‘அக்னி’ பார்வையும் அந்த அணியின் கோல் கீப்பரான கருப்பின வீரர் பார்போசா மீது திரும்பியது. கடைசி கோலை தடுக்க தவறியதால் அவரை வசைப்பாடாதவர்களே கிடையாது. இத்தனைக்கும் அந்த சமயத்தில் சிறந்த கோல் வீரர்களில் ஒருவராக வர்ணிக்கப்பட்டார். அதன் பிறகு பிரேசில் அணிக்காக மீண்டும் ஒரு முறை மட்டுமே விளையாடினார்.

மற்ற வகையில் அவரை பிரேசில் கால்பந்து சங்கம் ஒதுக்கியே வைத்திருந்தது. வர்ணனையாளர் பணிக்கு கூட அனுமதிக்கவில்லை. 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கடை வீதியில் அவரை பார்த்த பெண் ஒருவர் தனது குழந்தையிடம், ‘அந்த மனிதரை பார். அவர் தான் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒட்டுமொத்த பிரேசில் மக்களையும் அழ வைத்தவர்’ என்று சொல்லும் அளவுக்கு வெறுப்புணர்வுக்கு ஆளானார். 2000–ம் ஆண்டு மறைவுக்கு முன்பாக அவர் அளித்த ஒரு பேட்டியில், ‘பிரேசில் நாட்டில் கிரிமினல் குற்றங்களுக்கு அதிகபட்சமாக 30 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் நானோ அது போன்று எதுவும் செய்யாமலேயே 50 ஆண்டுகள் தண்டனை அனுபவித்ததை போன்று உணர்கிறேன்’ என்று மனம் வெதும்பினார்.