கால்பந்து

6–வது உலக கோப்பை 1958 (சாம்பியன் பிரேசில்) + "||" + 6th World Cup 1958

6–வது உலக கோப்பை 1958 (சாம்பியன் பிரேசில்)

6–வது உலக கோப்பை 1958 (சாம்பியன் பிரேசில்)
ஐரோப்பிய நாடான சுவீடன் நடத்திய இந்த உலக கோப்பையில் ஒலிம்பிக் சாம்பியன் சோவியத் யூனியன், வடக்கு அயர்லாந்து அணிகள் அறிமுகம் ஆகின.

நடத்திய நாடு– சுவீடன், பங்கேற்ற அணிகள்–16

ரோப்பிய நாடான சுவீடன் நடத்திய இந்த உலக கோப்பையில் ஒலிம்பிக் சாம்பியன் சோவியத் யூனியன், வடக்கு அயர்லாந்து அணிகள் அறிமுகம் ஆகின. முந்தைய மூன்று உலக கோப்பையை புறக்கணித்த அர்ஜென்டினா மறுபிரவேசம் செய்தது. அதே சமயம் முன்னாள் சாம்பியன்கள் இத்தாலி, உருகுவே மற்றும் ஸ்பெயின், பெல்ஜியம் அணிகள் தகுதி சுற்றில் தோற்று பிரதான சுற்றை எட்டும் வாய்ப்பை இழந்தன.

இதில் கலந்து கொண்ட 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதின. புள்ளி பட்டியலில் 2–வது மற்றும் 3–வது இடம் பிடிக்கும் அணிகள் ஒரே புள்ளிகள் வகிக்கும் போது, ‘பிளே–ஆப்’ அடிப்படையில் 2–வது இடத்திற்கான அணி தீர்மானிக்கப்பட்டது. அந்த வகையில் மூன்று ‘பிளே–ஆப்’ சுற்று ஆட்டங்கள் நடந்தன.

லீக், ‘பிளே–ஆப்’, கால்இறுதி முடிவில் பிரேசில், பிரான்ஸ், சுவீடன், மேற்கு ஜெர்மனி ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. லீக் சுற்றில் பிரேசில்–இங்கிலாந்து இடையிலான ஆட்டத்தில் கடைசி வரைக்கும் இரு அணிகளும் கோல் ஏதும் (0–0) அடிக்கவில்லை. உலக கோப்பை வரலாற்றில் கோல் இன்றி முடிந்த முதல் ஆட்டம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அரைஇறுதி ஆட்டங்களில் பிரேசில் 5–2 என்ற கோல் கணக்கில் பிரான்சையும், சுவீடன் 3–1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் மேற்கு ஜெர்மனியையும் வெளியேற்றின.

பிரேசில்–சுவீடன் இடையிலான இறுதிப்போட்டி சோல்னா நகரில் ஜூன் 29–ந்தேதி நடந்தது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் புகுந்த சுவீடன் 4–வது நிமிடத்திலேயே கோல் போட்டாலும், அதன் பிறகு பிரேசிலின் ஆதிக்கத்தை தடுக்க முடியவில்லை. பலம் பொருந்திய அணியாக வலம் வந்த பிரேசில் 5–2 என்ற கோல் கணக்கில் சுவீடனை எளிதில் வீழ்த்தி முதல் முறையாக உலக கோப்பையை கையில் ஏந்தியது.

இந்த உலக கோப்பையின் மூலம் பிரேசில் அணியின் புதிய அவதாரமாக 17 வயதான பீலே உருவெடுத்தார். காயம் காரணமாக முதல் 2 ஆட்டங்களில் ஆடாத பீலே, நாக்–அவுட் சுற்றுகளில் பிரேலின் ‘ஹீரோ’வாக ஜொலித்தார். கால்இறுதியில் பிரேசில் 1–0 என்ற கோல் கணக்கில் வேல்சை வீழ்த்தியபோது வெற்றிக்குரிய கோலை அடித்தவர் பீலே தான். பிரான்சுக்கு எதிரான அரைஇறுதியில் ‘ஹாட்ரிக்’ கோல் போட்டு பிரமிக்க வைத்தார். இறுதிப்போட்டியிலும் பீலேயின் கால்கள் வித்தை காட்ட மறக்கவில்லை. பிரேசிலின் 5 கோல்களில் இவரது பங்களிப்பு இரண்டு (55 மற்றும் 90–வது நிமிடத்தில்) கோல்கள் ஆகும்.

மேலும் பல சாதனைகளுக்கும் பீலே சொந்தக்காரர் ஆனார். இளம் வயதில் கோல் அடித்தவர் (வேல்சுக்கு எதிராக 17 ஆண்டு, 7 மாதம் மற்றும் 27 நாட்களில் கோல் அடித்தார்), இளம் வயதில் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தவர், இறுதிப்போட்டியில் இளம் வயதில் கோல் போட்டவர் ஆகிய அரிய சிறப்புகள் இன்று வரைக்கும் பீலே வசம் உள்ளது. அந்த சமயத்தில் பிரேசில் அணியில் காரின்சா, வாவா, டிடி போன்ற நட்சத்திர வீரர்கள் இருந்தாலும் உலக கால்பந்து அரங்கில் புதிய துருவ நட்சத்திரமாக அடையாளம் காணப்பட்டார், பீலே.

இந்த உலக கோப்பையில் மொத்தம் நடந்த 35 ஆட்டங்களில் 126 கோல்கள் அடிக்கப்பட்டன.

13 கோல்கள் அடித்து போன்டைன் சாதனை

இந்த உலக கோப்பையில் பிரான்ஸ் அணி அரைஇறுதியோடு வெளியேறினாலும் அந்த அணிக்காக ஆடிய ஜஸ்ட் போன்டைன் செய்த சாதனைகளை மறந்து விட முடியாது. அவர் 6 ஆட்டங்களில் விளையாடி ‘ஹாட்ரிக்’ உள்பட 13 கோல்கள் அடித்தார். இதன் மூலம் ஒரு உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற மகத்தான சாதனையை அவர் படைத்தார். இந்த சாதனை இன்றளவும் அவரது பெயரிலேயே தொடருகிறது.