கால்பந்து

7வது உலக கோப்பை 1962 (சாம்பியன் பிரேசில்) + "||" + 7th World Cup 1962 (Champion Brazil)

7வது உலக கோப்பை 1962 (சாம்பியன் பிரேசில்)

7வது உலக கோப்பை 1962 (சாம்பியன் பிரேசில்)
7வது உலக கோப்பை கால்பந்து போட்டி தென் அமெரிக்க நாடான சிலியில் அரங்கேறியது.

உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை ரஷியாவில் நடக்கிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த உதைவிழா கடந்து வந்த பாதையை தினமும் அலசலாம்.

இந்த (7-வது) உலக கோப்பை கால்பந்து போட்டி தென் அமெரிக்க நாடான சிலியில் அரங்கேறியது. நடப்பு சாம்பியன் பிரேசில், போட்டியை நடத்தும் சிலி ஆகிய இரு நாடுகள் நேரடியாக இந்த போட்டிக்கு தகுதி பெற்றன. எஞ்சிய 14 இடத்துக்கு 52 அணிகள் தகுதி சுற்றில் களம் கண்டன. அதில் இருந்து 14 அணிகள் பிரதான சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தன. கொலம்பியா, பல்கேரியா அணிகள் முதல் முறையாக உலக கோப்பை போட்டியில் கால் பதித்தன. 1958-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் இறுதி ஆட்டத்தில் பிரேசிலிடம் தோல்வி கண்டு 2-வது இடம் பிடித்த சுவீடன் அணி தகுதி சுற்று போட்டியில் அதிர்ச்சிகரமாக தோல்வி கண்டு இந்த போட்டிக்கு தகுதி பெறாமல் போனது. பிரான்ஸ், ஆஸ்திரியா அணிகள் தகுதி சுற்று போட்டியில் இருந்து விலகி கொண்டன.

வலுவான பிரேசில் அணி இந்த போட்டி தொடரிலும் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது. லீக்கில் தோல்வியை சந்திக்காமல் தனது பிரிவில் முதலிடம் பிடித்து பிரேசில் அணி கால்இறுதிக்கு முன்னேறியது. சோவியத் யூனியன், இங்கிலாந்து, மேற்கு ஜெர்மனி, ஹங்கேரி அணிகள் கால்இறுதியுடன் நடையை கட்டின. அரைஇறுதிப்போட்டிகளில் பிரேசில் அணி 4-2 என்ற கோல் கணக்கில் போட்டியை நடத்திய சிலியையும், செக்கோஸ்லோவக்கியா அணி 3-1 என்ற கோல் கணக்கில் யூகோஸ்லாவியாவையும் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

2-வது லீக் ஆட்டத்தில் காயம் அடைந்த பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் பீலே அதன் பிறகு இந்த போட்டி தொடரில் எந்த ஆட்டத்திலும் களம் காணவில்லை. பீலேவின் துடிப்பான ஆட்டத்தை காண காத்து இருந்த ரசிகர்களுக்கு இது பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. பீலே இல்லாவிட்டாலும், மானுவேல் பிரான்சிஸ்கோ (காரின்சா), எட்வால்டோ ஜிசிடியோ, அமரில்டோ ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பிரேசில் அசைக்க முடியாத அணியாக வலம் வந்தது.

சான்டியாகோவில் ஜூன் 17-ந் தேதி நடந்த இறுதிப்போட்டியில் பிரேசில் அணி 3-1 என்ற கோல் கணக்கில் செக்கோஸ்லோவக்கியாவை சாய்த்து சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது. செக்கோஸ்லோவக்கியா அணி 15-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது. அதன் பிறகு பிரேசில் அணி வீரர்கள் அமரில்டோ (17-வது நிமிடம்), ஜிடோ (69-வது நிமிடம்), எட்வால்டோ ஜிசிடியோ (78-வது நிமிடம்) ஆகியோர் அடுத்தடுத்து தலா ஒரு கோல் அடித்து தங்கள் அணிக்கு வெற்றி மகுடம் கிடைக்க வழிவகுத்தனர். இத்தாலி அணிக்கு பிறகு (1938-ம் ஆண்டு) உலக கோப்பையை தக்கவைத்த 2-வது அணி என்ற பெருமையை பிரேசில் பெற்றது. 1958-ம் ஆண்டிலும் பிரேசில் அணி கோப்பையை வென்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் சிலி அணி 1-0 என்ற கோல் கணக்கில் யூகோஸ்லாவியாவை வீழ்த்தியது.

இந்த போட்டி தொடரில் லீக் ஆட்டம் ஒன்றில் (ஜூன் 2) சிலி அணி 2-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் வீரர்கள் களத்தில் நடந்து கொண்ட விதம் ரசிகர்கள் முகம் சுழிக்கும் வகையில் இருந்ததுடன், கடும் விமர்சனத்துக்கும் ஆளானது. களத்தில் பல நேரங்களில் இரு அணி வீரர்கள் ஒருவரையொருவர் தாக்கி முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சில வீரர்கள் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். ஆடுகளத்தை விட்டு வெளியே வரும் போது இரு அணி வீரர்களுக்கும் பிரத்யேக பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த உலக கோப்பை போட்டியில் பல அணிகள் தாக்குதல் ஆட்டத்தை தவிர்த்து தற்காப்பு ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தின. இதனால் முந்தைய போட்டிகளை போல் கோல் மழையை ரசிகர்களால் பார்க்க முடியவில்லை. இந்த போட்டி தொடரில் மொத்தம் 89 கோல்கள் (32 ஆட்டம்) அடிக்கப்பட்டன. ஒரு ஆட்டத்தின் சராசரி கோல் 2.78 ஆக பதிவானது. உலக கோப்பை வரலாற்றில் சராசரி கோல் கணக்கு 3-க்கு குறைவாக போனது இந்த போட்டி தொடரில் தான். இந்த போட்டி தொடரில் தலா 4 கோல்கள் அடித்த மானுவேல் பிரான்சிஸ்கோ (பிரேசில்), எட்வால்டோ ஜிசிடியோ (பிரேசில்), லியோனல் சாஞ்சஸ் (சிலி), புளோரியன் ஆல்பர்ட் (ஹங்கேரி), வாலென்டின் இவானோவ் (சோவியத் யூனியன்), டிராஜன் செர்கோவிச் (யூகோஸ்லாவியா) ஆகியோர் தங்க ஷூவை பகிர்ந்து கொண்டனர்.