ஹைதி அணிக்கு எதிரான கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் அர்ஜென்டினா அபார வெற்றி


ஹைதி அணிக்கு எதிரான கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் அர்ஜென்டினா அபார வெற்றி
x
தினத்தந்தி 30 May 2018 10:30 PM GMT (Updated: 30 May 2018 8:57 PM GMT)

ஹைதி அணிக்கு எதிரான கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் அர்ஜென்டினா அபார வெற்றிபெற்றது.

பியூனஸ் அயர்ஸ்,

ஹைதி அணிக்கு எதிரான கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் லயோனல் மெஸ்சியின் ‘ஹாட்ரிக்’ கோலால் அர்ஜென்டினா அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் நடக்கிறது. இதில் 32 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. போட்டிக்கு இன்னும் 2 வாரமே எஞ்சி இருக்கும் நிலையில் எல்லா அணிகளும், பயிற்சி ஆட்டங்களில் விளையாடி தங்களது ஆட்ட திறனை பட்டை தீட்டி வருகின்றன.

இந்த நிலையில் அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் நேற்று முன்தினம் நடந்த பயிற்சி ஆட்டத்தில், அர்ஜென்டினா அணி, ஹைதி அணியை எதிர்கொண்டது.

உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா அணி 4-0 என்ற கோல் கணக்கில் 108-வது இடத்தில் இருக்கும் ஹைதியை எளிதில் தோற்கடித்தது. அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி 17-வது நிமிடத்திலும், 58-வது மற்றும் 66-வது நிமிடத்திலும் கோல் அடித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். மற்றொரு அர்ஜென்டினா வீரர் செர்ஜியோ அகுரோ 69-வது நிமிடத்தில் 4-வது கோலை அடித்தார். ஹைதி அணியால் கடைசி வரை பதில் கோல் திருப்ப முடியவில்லை.

அடுத்து அர்ஜென்டினா அணி, பார்சிலோனா (ஸ்பெயின்) சென்று பயிற்சி ஆட்டத்தில் ஈடுபடுகிறது. உலக கோப்பை போட்டியில் ‘டி’ பிரிவில் இடம் பிடித்துள்ள அர்ஜென்டினா அணி தனது லீக் ஆட்டங்களில் ஜூன் 16-ந் தேதி ஐஸ்லாந்தையும், 21-ந் தேதி குரோஷியாவையும், 26-ந் தேதி நைஜீரியாவையும் சந்திக்கிறது. பெருவில் உள்ள லிமா நகரில் நடந்த பயிற்சி ஆட்டத்தில், உலக கோப்பை போட்டியில் ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ள பெரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்தை தோற்கடித்தது. பெரு அணி தரப்பில் கிறிஸ்டியன் குய்வா 37-வது நிமிடத்திலும் (பெனால்டி வாய்ப்பு), ஜெபெர்சன் பார்பன் 47-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

பனாமா சிட்டியில் நடந்த மற்றொரு பயிற்சி ஆட்டத்தில், உலக கோப்பை போட்டியில் ‘ஜி’ பிரிவில் இடம் பெற்றுள்ள பனாமா அணி, வடக்கு அயர்லாந்தை சந்தித்தது. இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது.

டோக்கியோவில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில், உலக கோப்பை போட்டியில் ‘எச்’ பிரிவில் இடம் பிடித்துள்ள ஜப்பான் அணி, கானாவுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் ஜப்பான் அணி 0-2 என்ற கோல் கணக்கில் கானாவிடம் தோல்வி கண்டது.

Next Story