9-வது உலக கோப்பை 1970 (சாம்பியன் பிரேசில்)


9-வது உலக கோப்பை 1970 (சாம்பியன் பிரேசில்)
x
தினத்தந்தி 30 May 2018 11:00 PM GMT (Updated: 30 May 2018 9:11 PM GMT)

வட அமெரிக்க கண்டத்தில் நடந்த முதல் உலக கோப்பை கால்பந்து போட்டி இதுவாகும்.


உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை ரஷியாவில் நடக்கிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த உதைவிழா கடந்து வந்த பாதையை தினமும் அலசலாம்.

வட அமெரிக்க கண்டத்தில் நடந்த முதல் உலக கோப்பை கால்பந்து போட்டி இதுவாகும். ஐரோப்பா மற்றும் தென்அமெரிக்க கண்டத்துக்கு வெளியே அரங்கேறிய முதல் உலக கோப்பை கால்பந்து போட்டியும் இது தான். நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, போட்டியை நடத்தும் மெக்சிகோ ஆகிய 2 அணிகள் நேரடியாக இந்த போட்டிக்கு தகுதி பெற்றன. எஞ்சிய 14 இடத்துக்கான தகுதி சுற்றில் 68 நாடுகள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டன. எல் சால்வடோர், இஸ்ரேல், மொராக்கோ ஆகிய நாடுகள் உலக கோப்பை போட்டியில் முதல்முறையாக அறிமுகம் ஆகின. அர்ஜென்டினா, பிரான்ஸ், ஹங்கேரி, போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய அணிகள் தகுதி சுற்றில் தேறாமல் வெளியேறிய அணிகளில் குறிப்பிடத்தக்கவையாகும்.

போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் கால்இறுதி சுற்றுக்கு முன்னேறின. லீக் ஆட்டங்கள் முடிவில் சோவியத் யூனியன், மெக்சிகோ, இத்தாலி, உருகுவே, பிரேசில், இங்கிலாந்து, மேற்கு ஜெர்மனி, பெரு அணிகள் கால்இறுதிக்குள் நுழைந்தன. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி கால் இறுதி ஆட்டத்தில் கூடுதல் நேரத்தில் 2-3 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜெர்மனியிடம் தோல்வி கண்டு நடையை கட்டி ஏமாற்றம் அளித்தது. உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் விதமாக கொலம்பியாவுக்கு விளையாட சென்று இருந்த இடத்தில் நகைக்கடைக்கு சென்று திரும்பிய இங்கிலாந்து அணியின் கேப்டன் பாபி மூரே ‘பிரேஸ் லெட்டை’ திருடி விட்டதாக புகார் கிளம்பியது. இதனால் போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு செல்லப்பட்ட பாபி மூரே பின்னர் குற்றச்சாட்டில் உண்மை இல்லாததால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் இங்கிலாந்து அணியின் உத்வேகத்தை சீர்குலைக்க திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நாடகம் என்று இங்கிலாந்து ரசிகர்கள் குற்றம்சாட்டினார்கள்.

தகுதி சுற்று ஆட்டங்கள் எதிலும் தோல்வி காணாமல் பிரதான சுற்றுக்குள் கம்பீரமாக நுழைந்த கார்லஸ் அல்பர்ட்டோ தலைமையிலான பிரேசில் அணி தரமான தாக்குதல் ஆட்டத்தின் மூலம் தலைசிறந்த அணியாக உலக கோப்பை போட்டியில் வலம் வந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பிரேசில் அணியில் பீலே, ஜெர்சன், ஜெய்ன்ஜின்கோ, ரிவலினோ, டோஸ்டாவ் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே இடம் பெற்று இருந்தது.

பிரேசில் அணி லீக் ஆட்டங்களில் 4-1 என்ற கோல் கணக்கில் செக்கோஸ்லோவக்கியாவையும், 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தையும், 3-2 என்ற கோல் கணக்கில் ருமேனியாவையும் வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது. பின்னர் பிரேசில் கால்இறுதி ஆட்டத்தில் பெருவையும் (4-2), அரைஇறுதி ஆட்டத்தில் உருகுவேயையும் (3-1) வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் தோல்வியை தொடாமல் அடியெடுத்து வைத்தது.

ஜூன் 21-ந் தேதி மெக்சிகோ சிட்டியில் நடந்த இறுதிப்போட்டியில் ஏற்கனவே உலக கோப்பையை 2 முறை உச்சி முகர்ந்து இருந்த பிரேசில்-இத்தாலி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரேசில் அணி 4-1 என்ற கோல் கணக்கில் இத்தாலியை சாய்த்து 3-வது முறையாக உலக கோப்பையை உள்ளங்கையில் ஏந்தியது. 3-வது முறையாக வென்றதன் மூலம் பிரேசில் அணி வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் ஜூல்ஸ் ரிமெட் கோப்பையை தனக்கு சொந்தமாக்கியது. இந்த மூன்று உலக கோப்பை போட்டியிலும் பிரேசில் அணியில் இடம் பெற்று இருந்த நட்சத்திர வீரர் பீலே மூன்று உலக கோப்பையை வென்ற ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இந்த போட்டி தொடரில் மொத்தம் 95 கோல்கள் (32 ஆட்டங்களில்) அடிக்கப்பட்டன. 10 கோல்கள் அடித்த மேற்கு ஜெர்மனி வீரர் ஜெர்ட் முல்லர் தங்க ஷூ விருதை தனதாக்கினார். இந்த உலக கோப்பை போட்டி தொடர் உலகம் முழுவதும் முதல்முறையாக கருப்பு வெள்ளையில் இருந்து மாறி வண்ண காட்சியாக டெலிவிஷனில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது.

Next Story