கால்பந்து

12-வது உலக கோப்பை 1982 (சாம்பியன் இத்தாலி) + "||" + 12th World Cup 1982 (Champion Italy)

12-வது உலக கோப்பை 1982 (சாம்பியன் இத்தாலி)

12-வது உலக கோப்பை 1982 (சாம்பியன் இத்தாலி)
ஸ்பெயின் நாடு நடத்திய இந்த உலக கோப்பை போட்டியில் 24 அணிகள் பங்கேற்றன.
உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை ரஷியாவில் நடக்கிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த உதைவிழா கடந்து வந்த பாதையை தினமும் அலசலாம்.


12-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஸ்பெயின் நாட்டில் கோலாகலமாக அரங்கேறியது. இந்த உலக கோப்பை போட்டியில் அணிகளின் எண்ணிக்கை 16-ல் இருந்து 24 ஆக உயர்த்தப்பட்டது. இதனால் குறிப்பாக ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய கண்டத்தை சேர்ந்த அணிகள் கூடுதலாக பங்கேற்கும் வாய்ப்பு உருவாகியது. தொடர்ந்து 2 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நெதர்லாந்து மற்றும் மெக்சிகோ, சுவீடன் ஆகிய அணிகள் தகுதி சுற்றுடன் நடையை கட்டிய அணிகளில் குறிப்பிடத்தக்கவையாகும். செக்கோஸ்லோவக்கியா, இங்கிலாந்து, பெல்ஜியம், சோவியத் யூனியன் ஆகிய அணிகள் 12 ஆண்டுகளுக்கு பிறகு விளையாட தகுதி கண்டன. அல்ஜீரியா, கேமரூன், ஹோண்டுராஸ், குவைத், நியூசிலாந்து ஆகியவை அறிமுக அணிகளாக களம் கண்டன.

இந்த முறை அணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப்பட்டதுடன், போட்டி அட்டவணை முறையிலும் மாற்றம் செய்யப்பட்டது. போட்டியில் பங்கேற்ற 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் லீக் ஆட்டத்தில் மோதின. முதல் சுற்று லீக் ஆட்டம் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் 2-வது சுற்றுக்குள் நுழைந்தன. 2-வது சுற்றுக்கு தகுதி பெற்ற 12 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மீண்டும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் லீக் ஆட்டத்தில் விளையாடின. இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடித்த அணிகள் அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தன.

இந்த உலக கோப்பை போட்டியில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் கோப்பையை கைப்பற்றிய இத்தாலி அணிக்கு அதிர்ஷ்டமும் அதிகம் உதவியது என்றால் மிகையாகாது. ‘குரூப்-1’-ல் இடம் பெற்று இருந்த இத்தாலி அணி முதல் சுற்று லீக் ஆட்டங்களில் ஒரு வெற்றியை கூட பெறவில்லை. இத்தாலி அணி லீக் சுற்றில் போலந்து (0-0), பெரு (1-1), கேமரூன் (1-1) அணிகளுடன் டிரா செய்து 3 புள்ளிகள் பெற்றது. இதேபோல் கேமரூன் அணியும் 3 ஆட்டங்களில் டிரா கண்டு 3 புள்ளிகள் பெற்று இருந்தது. இரு அணிகளும் சமபுள்ளி வகித்தாலும் கோல் விகிதாச்சாரம் அடிப்படையில் இத்தாலி அணி தனது பிரிவில் இரண்டாவது இடம் பிடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறியது. முதல் சுற்றில் வெற்றியையே சுவைக்காத ஒரு அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது இதுவே முதல்முறையாகும்.

2-வது சுற்றில் ‘சி’ பிரிவில் இடம் பிடித்து இருந்த இத்தாலி அணியின் ஆட்டம் பின்னர் விசுவரூபம் எடுத்தது. இத்தாலி அணி 2-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவையும், 3-2 என்ற கோல் கணக்கில் பிரேசிலையும் வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. அரைஇறுதியில் இத்தாலி அணி 2-0 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தி இறுதிப்போட்டியை எட்டியது. நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, போட்டியை நடத்திய ஸ்பெயின் அணிகள் 2-வது சுற்றுடன் ஏமாற்றம் அளித்து வெளியேறியது.

இறுதிப்போட்டியில் இத்தாலி அணி, மேற்கு ஜெர்மனியை சந்தித்தது. இதில் இத்தாலி அணி 3-1 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜெர்மனியை துவம்சம் செய்து 3-வது முறையாக உலக கோப்பையை தனதாக்கியது. ஏற்கனவே 1934, 1938-ம் ஆண்டுகளில் இத்தாலி கோப்பையை வென்று இருந்தது. மொத்தம் 7 ஆட்டங்களில் 12 கோல்கள் மட்டுமே அடித்த இத்தாலி கோப்பையை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இதன் மூலம் மூன்று முறை உலக கோப்பையை வென்று இருந்த பிரேசிலின் (1958, 1962, 1970) சாதனையை சமன் செய்தது.

இத்தாலி அணியின் வெற்றியில் அந்த அணி வீரர் பாலோ ரோஸி முக்கிய பங்கு வகித்தார். லீக் ஆட்டங்களில் ஜொலிக்காத அவர் பிரேசிலுக்கு எதிரான 2-வது சுற்று லீக் ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல்கள் அடித்ததுடன், இறுதிப்போட்டியிலும் ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். மொத்தம் 6 கோல்கள் அடித்த அவர் சிறந்த வீரருக்கான விருதை கைப்பற்றினார். பாலோ ரோஸி சூதாட்ட சர்ச்சையில் சிக்கி 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்து சாதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலி அணியின் கேப்டனும், கோல்கீப்பருமான டினோ ஜோப் இறுதிப்போட்டியில் ஆடிய போது அவரது வயது 40 ஆகும். இதன் மூலம் உலக கோப்பையை வென்ற வயதான கேப்டன் என்ற சிறப்பை அவர் பெற்றார். அரைஇறுதி ஆட்டத்தில் மேற்கு ஜெர்மனி அணி பெனால்டி ஷூட்-அவுட் முறையில் பிரான்சை வீழ்த்தியது. உலக கோப்பை போட்டியில் கடைப்பிடிக்கப்பட்ட முதலாவது பெனால்டி ஷூட்-அவுட் ஆட்டம் இது தான். 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் போலந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி 3-வது இடத்தை தனதாக்கியது. இந்த போட்டி தொடரில் மொத்தம் 146 கோல்கள் (52 ஆட்டங்களில்) அடிக்கப்பட்டன.