கால்பந்து

14-வது உலக கோப்பை 1990 (சாம்பியன்-மேற்கு ஜெர்மனி) + "||" + The West Germany team won the trophy in 1990

14-வது உலக கோப்பை 1990 (சாம்பியன்-மேற்கு ஜெர்மனி)

14-வது உலக கோப்பை 1990 (சாம்பியன்-மேற்கு ஜெர்மனி)
1990-ம் ஆண்டில் கோப்பையை வென்ற மேற்கு ஜெர்மனி அணி
14-வது உலக கோப்பை கால்பந்து போட்டி இத்தாலியில் அரங்கேறியது. உலக கோப்பை போட்டி இத்தாலியில் நடத்தப்பட்டது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 1934-ம் ஆண்டில் இங்கு இந்த போட்டி நடந்து இருந்தது. பிபாவின் வாக்கெடுப்பில் சோவியத் யூனியனை பின்னுக்கு தள்ளி இந்த போட்டியை நடத்தும் வாய்ப்பை இத்தாலி பெற்றது.

போட்டியை நடத்திய இத்தாலி, நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணிகள் நேரடியாக போட்டிக்கு தகுதி கண்டன. எஞ்சிய 22 இடத்துக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் 116 அணிகள் கோதாவில் குதித்தன. இந்த போட்டிக்கான தகுதி சுற்றில் சிலி-பிரேசில் அணிகள் மோதிய ஆட்டத்தில் எதிர்பாராத நாடகம் அரங்கேறியது. வெற்றி பெற்றால் தான் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியில் ஆடிய சிலி அணி 0-1 என்ற கோல் கணக்கில் பின்தங்கி இருந்த போது அந்த அணியின் கோல்கீப்பர் ராபர்ட்டோ ரோஜாஸ் திடீரென தரையில் விழுந்து புரண்டார். அவரது நெற்றியில் இருந்து ரத்தம் வழிந்தது. நெற்றியை பிடித்தபடி கதறிய அவர் பிரேசில் ரசிகர் கேலரியில் வைத்து வெடித்த பட்டாசு தன்னை தாக்கி விட்டதாக தெரிவித்தார். உடனடியாக அவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். பாதுகாப்பு இல்லை என்று கூறி சிலி அணி வீரர்கள் தொடர்ந்து விளையாட மறுத்து விட்டனர்.

பின்னர் போட்டியின் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்ததில் சிலி அணியின் கோல்கீப்பர் ராபர்ட்டோ ரோஜாஸ் மீது பட்டாசு பட்டதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை. பிரேசில் அணி மீது பழியை சுமத்தி தோல்வியில் இருந்து தப்ப நினைத்து ராபர்ட்டோ ரோஜாஸ், கையுறையில் மறைத்து வைத்து இருந்த பிளேடால் தன்னைத் தானே நெற்றியில் கிழித்து கொண்டது தெரியவந்தது. இதனை அடுத்து ராபர்ட்டோ ரோஜாஸ்க்கு வாழ்நாள் முழுவதும் விளையாட தடை விதிக்கப்பட்டது. பிரேசில் வெற்றி பெற்றதாக அறிவித்ததால் சிலி அணி அந்த உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறாமல் போனது. அத்துடன் சிலி அணிக்கு அடுத்த உலக கோப்பை (1994) போட்டியில் விளையாடவும் தடை விதிக்கப்பட்டது.

கோஸ்டாரிகா, அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை கன்னி அணிகளாக உலக கோப்பை போட்டியில் காலடி எடுத்து வைத்தன. எகிப்து, அமெரிக்கா, கொலம்பியா, ருமேனியா, சுவீடன், நெதர்லாந்து ஆகிய அணிகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் களம் திரும்பின. பங்கேற்ற 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் ஆட்டங்கள் முடிவில் 16 அணிகள் கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றன.

அர்ஜென்டினா அணி, கால்இறுதியில் யூகோஸ்லாவியாவையும், அரைஇறுதியில் இத்தாலியையும் பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வீழ்த்தி இறுதிபோட்டிக்குள் நுழைந்தது. மேற்கு ஜெர்மனி அணி கால்இறுதியில் செக்கோஸ்லோவாக்கியாவையும், அரைஇறுதியில் இங்கிலாந்தையும் சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ரோமில் (ஜூலை 8-ந் தேதி) நடந்த இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா-மேற்கு ஜெர்மனி அணிகள் மோதின. ஆட்டத்தின் 65-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணி வீரர் பெட்ரோ மோன்சன் முரட்டு ஆட்டம் காரணமாக சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் சிவப்பு அட்டை பெற்ற முதல் வீரர் இவர் தான். ஒரு வீரரை இழந்ததால் அர்ஜென்டினா அணி தடுமாறியது.

85-வது நிமிடத்தில் மேற்கு ஜெர்மனி அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி அந்த அணி வீரர் ஆந்த்ரே பிரிக்மி கோல் அடித்தார். இதுவே வெற்றியை நிர்ணயிக்கும் கோலாக அமைந்தது. கடைசி கட்டத்தில் அர்ஜென்டினா அணி வீரர் குஸ்டாவ் டிசோட்டியும் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேறினார். முடிவில் மேற்கு ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி 3-வது முறையாக உலக கோப்பையை தன்வசப்படுத்தியது. அத்துடன் முந்தைய (1986) உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினாவிடம் கண்ட தோல்விக்கும் பழிதீர்த்தது. கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி என்று தனித்தனியாக உலக கோப்பை போட்டியில் பங்கேற்றது இதுவே கடைசி முறையாகும். இந்த ஆண்டில் இரு நாடுகளும் இணைந்து ஒரே ஜெர்மனியானது.

போட்டியை நடத்திய இத்தாலி அணி 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்த உலக கோப்பை போட்டி தொடரில் மொத்தம் 115 கோல்களே (52 ஆட்டங்களில்) அடிக்கப்பட்டன. ஆட்டத்தின் சராசரி கோல் எண்ணிக்கை 2.21 ஆகும். உலக கோப்பை வரலாற்றில் இதுவரை குறைந்த சராசரி கோல் எண்ணிக்கை இது தான். இந்த போட்டி தொடரில் 6 கோல்கள் அடித்த இத்தாலி அணி வீரர் சால்வடோர் ஹிலாச்சி சிறந்த வீரர் விருதை தட்டிச் சென்றார்.