16–வது உலக கோப்பை 1998 (சாம்பியன் பிரான்ஸ்)


16–வது உலக கோப்பை 1998 (சாம்பியன் பிரான்ஸ்)
x
தினத்தந்தி 6 Jun 2018 9:00 PM GMT (Updated: 6 Jun 2018 8:23 PM GMT)

‘பிபா உலக கோப்பையின் தந்தை’ என்று அழைக்கப்படும் ஜூலெஸ் ரிமெல்ட்டின் தாயகமான பிரான்சில் 2–வது முறையாக உலககோப்பை அரங்கேறியது.

நடத்திய நாடு– பிரான்ஸ், பங்கேற்ற அணிகள்–32

‘பிபா உலக கோப்பையின் தந்தை’ என்று அழைக்கப்படும் ஜூலெஸ் ரிமெல்ட்டின் தாயகமான பிரான்சில் 2–வது முறையாக உலககோப்பை அரங்கேறியது. அணிகளின் எண்ணிக்கை முதல் முறையாக 24–ல் இருந்து 32 ஆக உயர்த்தப்பட்டது. குரோஷியா, ஜமைக்கா, ஜப்பான், தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு உலக கோப்பை கதவு முதல்முறையாக திறந்தன. அதே சமயம் முன்னாள் சாம்பியன் உருகுவே, சுவீடன், ரஷியா, ஹங்கேரி, போர்ச்சுகல் ஆகிய முன்னணி அணிகள் தகுதி சுற்றுடன் ஓரங்கட்டப்பட்டன.

பங்கேற்ற அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. இந்த தொடரில் போட்டியை நடத்திய பிரான்ஸ், நடப்பு சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ அணியுமான பிரேசில் ஆகிய அணிகள் மீதே மிகுந்த எதிர்பார்ப்பு காணப்பட்டது. அது போலவே அவ்விரு அணிகளும் இறுதி சுற்றில் சந்தித்தன. பாரீசின் புறநகரான செயின்ட் டெனிசில் 80 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் களம் இறங்கிய பிரான்சின் ஆதிக்கத்தை பிரேசிலால் துளியும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

முதல் பாதியில் பிரான்ஸ் வீரர் ஜிடேன் (27 மற்றும் 45–வது நிமிடம்) கார்னர் பகுதியில் வந்த பந்தை தலையால் முட்டி அட்டகாசமாக கோல் அடித்து உள்ளூர் ரசிகர்களை பரவசப்படுத்தினார். கடைசி நிமிடத்தில் மற்றொரு பிரான்ஸ் வீரர் இமானுவேல் பெடிட் கோல் போட்டார். முடிவில் டிடெர் டெஸ்சாம்ப்ஸ் தலைமையிலான பிரான்ஸ் அணி 3–0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை பந்தாடி முதல்முறையாக உலக கோப்பை மகுடத்தை சூடிக்கொண்டது. உலக கோப்பையை ருசித்த அணிகளின் வரிசையில் 7–வது அணியாக பிரான்ஸ் இணைந்தது.

இந்த உலக கோப்பையில் முன்னாள் சாம்பியன்கள் அர்ஜென்டினா, இத்தாலி, ஜெர்மனி அணிகளால் கால்இறுதியை தாண்ட முடியவில்லை. அறிமுக அணியாக அடியெடுத்து வைத்த குரோஷியாவின் ஆட்டம் வெகுவாக கவர்ந்தது. 2–வது சுற்றில் ருமேனியாவையும் (1–0 என்ற கோல் கணக்கில்), கால்இறுதியில் ஜெர்மனியையும் (3–0) புரட்டியெடுத்த குரோஷியா அரைஇறுதியில் பிரான்சிடம் 1–2 என்ற கோல் கணக்கில் மண்ணை கவ்வியது. இதன் பின்னர் நடந்த 3–வது இடத்துக்கான ஆட்டத்தில் குரோஷியா 2–1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. குரோஷியா வீரர் டேவோர் சுகர் (மொத்தம் 6 கோல்) தங்க ஷூ விருதையும், பிரேசிலின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்த ரொனால்டோ (4 கோல்) சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டு தங்கபந்து விருதையும் தட்டிச் சென்றனர். மொத்தம் நடந்த 64 ஆட்டங்களில் 171 கோல்கள் பதிவாகின.

கோல்டன் கோல்

‘கோல்டன் கோல்’ முறை அறிமுகம் ஆன பிறகு நடந்த முதல் உலக கோப்பை இது தான். அதாவது நாக்–அவுட் சுற்றில் வழக்கமான நேரத்தில் கோல் ஏதும் அடிக்கப்படாத போது 15 நிமிடங்கள் வீதம் இரண்டு முறை கூடுதல் நேரம் ஒதுக்கப்படும். முன்பு கூடுதல் நேரத்தில் ஆட்டம் முழுமையாக நடக்கும். ஆனால் ‘கோல்டன் கோல்’ என்பது கூடுதல் நேரத்தில் கோல் அடிக்கப்பட்டதும் அத்துடன் ஆட்டம் முடித்துக் கொள்ளப்படும். பராகுவேவுக்கு எதிரான 2–வது சுற்றில் பிரான்ஸ் வீரர் லாரென்ட் பிளாங் கூடுதல் நேரத்தில் (114–வது நிமிடம்) கோல் போட்டார். அதுவே உலக கோப்பை வரலாற்றில் அடிக்கப்பட்ட முதல் ‘கோல்டன் கோல்’ ஆகும். ஆனால் இந்த முறைக்கு எதிர்ப்பு கிளம்பியதால் பிற்காலத்தில் ‘கோல்டன் கோல்’ முறை கைவிடப்பட்டது.


Next Story