அர்ஜென்டினா அணியின் செயல்பாட்டை பொறுத்தே எனது எதிர்காலம் அமையும் - கேப்டன் மெஸ்சி


அர்ஜென்டினா அணியின் செயல்பாட்டை பொறுத்தே எனது எதிர்காலம் அமையும் - கேப்டன் மெஸ்சி
x
தினத்தந்தி 11 Jun 2018 11:15 PM GMT (Updated: 11 Jun 2018 8:09 PM GMT)

உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணியின் செயல்பாட்டை பொறுத்தே தனது எதிர்கால சர்வதேச கால்பந்து ஆட்ட வாழ்க்கை அமையும் என்று அந்த அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி தெரிவித்தார்.

புரோனேட்சி,

உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 14-ந் தேதி ரஷியாவில் தொடங்குகிறது. இதற்காக ரஷியாவே விழாக்கோலம் பூண்டு இருக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளில் பெரும்பாலானவை ரஷியா போய் சேர்ந்து விட்டன. முன்னாள் சாம்பியன் பிரேசில், பிரான்ஸ் உள்பட பல அணிகள் நேற்று ரஷியா போய் சேர்ந்தன.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள அர்ஜென்டினா அணி ‘டி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. ஐஸ்லாந்து, குரோஷியா, நைஜீரியா ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். அர்ஜென்டினா அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வருகிற 16-ந் தேதி ஐஸ்லாந்தை சந்திக்கிறது.

இந்த நிலையில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘இந்த உலக கோப்பை போட்டியில் அர்ஜென்டினா அணியின் செயல்பாடு எந்த மாதிரி இருக்கிறதோ? அதனை பொறுத்து தான் எனது எதிர்கால சர்வதேச கால்பந்து ஆட்ட வாழ்க்கை அமையும். 2014-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டி, 2015 மற்றும் 2016-ம் ஆண்டுக்கான கோபா அமெரிக்கா கோப்பை இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்ததன் மூலம் நாங்கள் சில கடினமான தருணங்களை சந்தித்தோம். இதனால் அர்ஜென்டினா பத்திரிகைகள் எங்களை குறி வைத்து விமர்சித்து வருகின்றன. இந்த போட்டிக்கு நிறைய அணிகள், அதிக நம்பிக்கையுடன் வந்து இருக்கின்றன. எல்லோரும் அணியாகவும், தனிப்பட்ட முறையிலும் சிறந்து விளங்குகிறார்கள்’ என்று தெரிவித்தார்.

உலக கோப்பை போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள எகிப்து அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் உருகுவேவையும் (வருகிற 15-ந் தேதி), 2-வது லீக் ஆட்டத்தில் ரஷியாவையும் (19-ந் தேதி), கடைசி லீக் ஆட்டத்தில் சவூதி அரேபியாவையும் (25-ந் தேதி) எதிர்கொள்கிறது.

எகிப்து அணி ரஷியாவில் உள்ள குரோஸ்னி நகரில் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டது. சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் தோள்பட்டையில் காயம் அடைந்த நட்சத்திர வீரர் முகமது சலா பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை. இதனால் எகிப்து அணியின் முதலாவது லீக் ஆட்டத்தில் முகமது சலா ஆடுவது சந்தேகம் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு தோள்பட்டையில் வலி இன்னும் இருந்து வருகிறது. 2-வது லீக் ஆட்டத்துக்கு அவர் உடல் தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story