கடைசி நிமிட கோலால் உருகுவே வெற்றி: 1-0 கோல் கணக்கில் எகிப்து அணியை வீழ்த்தியது


கடைசி நிமிட கோலால் உருகுவே வெற்றி: 1-0 கோல் கணக்கில் எகிப்து அணியை வீழ்த்தியது
x
தினத்தந்தி 15 Jun 2018 11:00 PM GMT (Updated: 15 Jun 2018 7:05 PM GMT)

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் உருகுவே அணி கடைசி நிமிட கோலால் 1-0 என்ற கோல் கணக்கில் எகிப்து அணியை வீழ்த்தியது.

எகடெரின்பர்க்,

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று ‘ஏ’ பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனான உருகுவே அணி, 28 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை போட்டியில் முதல் முறையாக காலடி எடுத்து வைத்துள்ள எகிப்து அணியை எதிர்கொண்டது.

எகிப்து அணியில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் முகமது சலா தோள்பட்டை காயத்தில் இருந்து ஓரளவு தேறினாலும், ‘ரிஸ்க்’ எடுக்க விரும்பாத அணி நிர்வாகம் அவரை விளையாட வைக்காமல் வெளியில் உட்கார வைத்தது. அதற்குரிய தாக்கம் இந்த ஆட்டத்தில் பிரதிபலித்தது. இதனால் எகிப்து அணியின் முன்கள தாக்குதல் ஆட்டத்தில் முனை மழுங்கி இருந்ததை பார்க்க முடிந்தது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் எகிப்து அணி துடிப்புடன் ஆடி பந்தை அதிக நேரம் தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது. எகிப்து அணி வீரர் டிரெஸ்குயட் கோலை நோக்கி அடித்த பந்தை உருகுவே அணியின் கோல்கீப்பர் பெர்னாண்டோ முஸ்லெரா தடுத்து நிறுத்தினார். அடுத்து கிடைத்த ‘பிரிகிக்’ வாய்ப்பை எகிப்து அணி கோலுக்கு வெளியே அடித்து வீணடித்தது.

உருகுவே அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் லூயிஸ் சுவாரஸ் சோபிக்கவில்லை. 4 முறை அவருக்கு கோல் அடிக்க நல்ல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அதில் ஒன்றை கூட அவர் கோலாக்காமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். அவர் அடித்த ஒரு அருமையான ஷாட் எகிப்து அணியின் கோல்கீப்பர் முகமது அல் ஷெனாவின் முழங்காலில் பட்டு மயிரிழையில் கோல் கம்பத்தை விட்டு வெளியே சென்றது. உருகுவே அணிக்கு கிடைத்த பிரிகிக் வாய்ப்பும் வீணடிக்கப்பட்டது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

பின்பாதி ஆட்டத்தில் உருகுவே அணியின் பிடியே சற்று மேலோங்கி இருந்தது. இரு அணிகளும் தலா 3 மாற்று ஆட்டக்காரர்களை களம் இறக்கி கோல் அடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டினார்கள். இருப்பினும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் வெற்றிகரமான முடிவை கொடுக்கவில்லை. எகிப்து அணி வீரர் அகமத் பாத்தி அடித்த அருமையான ஷாட்டை, உருகுவே அணியின் கோல் கீப்பர் லாவகமாக தடுத்து நிறுத்தி அசத்தினார். இரு அணியின் கோல் கீப்பர்களின் அபாரமான செயல்பாட்டை பார்க்கையில் இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆட்ட நேரம் முடிய ஒரு நிமிடம் இருக்கையில் (89-வது நிமிடம்) உருகுவே அணிக்கு மீண்டும் ‘பிரிகிக்’ வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி உருகுவே அணி வீரர் கார்லோஸ் சாஞ்செஸ் வலது புறத்தில் இருந்து கோல் எல்லையை நோக்கி பந்தை தூக்கி அடித்தார். அதனை எகிப்து அணியின் 3 வீரர்கள் துள்ளிக்குதித்து தலையால் முட்டி தடுக்க முயற்சித்தனர். ஆனால் அவர்கள் எல்லோரையும் விட உயரமாக குதித்த உருகுவே வீரர் ஜோஸ் ஜிமென்ஸ் தலையால் அற்புதமாக முட்டி கண் இமைக்கும் நேரத்தில் பந்தை கோலுக்குள் திணித்து எகிப்து அணிக்கு எதிர்பாராத அதிர்ச்சி அளித்தார். அதன் பிறகு பதில் கோல் திருப்ப எகிப்து அணி எல்லா வகையிலும் மும்முரம் காட்டினாலும், எஞ்சிய நேரத்தில் அதற்கு பரிகாரம் எதுவும் கிடைக்கவில்லை. தடுப்பு ஆட்டத்தில் தலைசிறந்து விளங்கிய எகிப்து அணி கடைசி கட்ட சறுக்கலால் டிரா செய்யும் நல்ல வாய்ப்பை கோட்டை விட்டது. முடிவில் உருகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் எகிப்து அணியை வீழ்த்தி வெற்றியுடன் போட்டியை தொடங்கியது.

இந்த வெற்றியின் மூலம், 1970-ம் ஆண்டுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டியில் உருகுவே அணி தங்களது தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றதில்லை என்ற மோசமான சாதனையை மாற்றியது.

Next Story