வெற்றியுடன் தொடங்கியது, பெல்ஜியம் 3-0 கோல் கணக்கில் பனாமா அணியை தோற்கடித்தது


வெற்றியுடன் தொடங்கியது, பெல்ஜியம் 3-0 கோல் கணக்கில் பனாமா அணியை தோற்கடித்தது
x
தினத்தந்தி 18 Jun 2018 10:30 PM GMT (Updated: 18 Jun 2018 7:50 PM GMT)

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 3-0 என்ற கோல் கணக்கில் பனாமா அணியை தோற்கடித்து வெற்றியுடன் போட்டியை தொடங்கியது.

சோச்சி,

உலக கோப்பை கால்பந்து போட்டியில் சோச்சி நகரில் நேற்று நடந்த ‘ஜி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் பெல்ஜியம் அணி, முதல்முறையாக தகுதி பெற்ற பனாமா அணியை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பெல்ஜியம் அணியின் கட்டுப்பாட்டில் பந்து அதிக நேரம் வலம் வந்தாலும், முதல் பாதியில் கோல் எதுவும் வரவில்லை.

2-வது பாதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணியின் ஆதிக்கம் மேலோங்கியது. 47-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணி முதல் கோல் அடித்தது. அந்த அணி வீரர் மெர்டென்ஸ் காலால் மேல் நோக்கி தூக்கி உதைத்த பந்து இடது புறமாக கோல் கம்பத்தின் மேல் பகுதியை உரசியபடி உள்ளே சென்றது. இதனால் பெல்ஜியம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

69-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணி வீரர் கெவின் டி புருனி கோலை நோக்கி அடித்த பந்தை சக வீரர் ரோம்லு லுகாகு பாய்ந்த படி தலையால் முட்டி கோலுக்குள் திணித்தார். 75-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணி வீரர் ரோம்லு லுகாகு மீண்டும் ஒரு கோல் அடித்தார். கேப்டன் ஈடன் ஹஜார்ட் கடத்தி கொடுத்த பந்தை ரோம்லு லுகாகு, பனாமா கோல்கீப்பர் ஜாய்மி பென்டோவை அருமையாக ஏமாற்றி கோலாக்கினார்.

பனாமா அணிக்கு பிரிகிக் உள்பட கோல் அடிக்க சில வாய்ப்புகள் கிடைத்தாலும் கடைசி வரை பெல்ஜியம் அணியின் தடுப்பு அரணை அந்த அணியால் தகர்க்க முடியவில்லை. முடிவில் பெல்ஜியம் அணி 3-0 என்ற கோல் கணக்கில் பனாமாவை வீழ்த்தி வெற்றியுடன் போட்டியை தொடங்கியது. பெல்ஜியம் வீரர் ரோம்லு லுகாகு ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Next Story