கால்பந்து

ஹாரிகேன் அசத்தல் கோல்களால் இங்கிலாந்து அணி வெற்றி 2–1 கோல் கணக்கில் துனிசியாவை வீழ்த்தியது + "||" + Harcian wackling goals England team win

ஹாரிகேன் அசத்தல் கோல்களால் இங்கிலாந்து அணி வெற்றி 2–1 கோல் கணக்கில் துனிசியாவை வீழ்த்தியது

ஹாரிகேன் அசத்தல் கோல்களால் இங்கிலாந்து அணி வெற்றி 2–1 கோல் கணக்கில் துனிசியாவை வீழ்த்தியது
உலக கோப்பை கால்பந்து போட்டியில் துனிசியா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஹாரிகேன் அடித்த அசத்தல் கோல்களால் இங்கிலாந்து அணி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

வோல்கோகிராட், 

உலக கோப்பை கால்பந்து போட்டியில் துனிசியா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஹாரிகேன் அடித்த அசத்தல் கோல்களால் இங்கிலாந்து அணி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

தாக்குதல் ஆட்டம்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் வோல்கோகிராட் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த ‘ஜி’ பிரிவு லீக் ஆட்டத்தில் 1966–ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து அணி, ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த அணியான துனிசியாவை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே இங்கிலாந்து அணி தாக்குதல் ஆட்டத்தை கடைப்பிடித்தது. இங்கிலாந்து அணியினர் எதிரணியின் கோல் எல்லையை அடிக்கடி முற்றுகையிட்டாலும், எதிரணியின் தடுப்பு அரணை தகர்ப்பது எளிதான காரியமாக இருக்கவில்லை. இங்கிலாந்து அணியினர் கோல் அடிக்க எடுத்த சில நல்ல முயற்சிகளை துனிசியா அணியின் கோல் கீப்பர் ஹாசென் அபாரமாக செயல்பட்டு தடுத்தார்.

ஆட்டத்தின் 11–வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி முதல் கோல் அடித்தது. கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இங்கிலாந்து அணி வீரர் ஆஷ்லே யங் கோல் எல்லையை நோக்கி அடித்த பந்தை சக வீரர் ஜான் ஸ்டோன்ஸ் தலையால் முட்டி கோலாக்க முயற்சித்தார். அதனை துனிசியா அணியின் கோல்கீப்பர் ஹாசென் கையால் தடுத்தார். அவரது கையில் பட்டு திரும்பிய பந்தை (ரீ பவுண்ட்) இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேன் மின்னல் வேகத்தில் உதைத்து கோலாக்கினார். அடுத்த சில நிமிடங்களில் கோல் கீப்பர் ஹாசென் காயம் அடைந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக பென் முஸ்தபா களம் இறங்கினார்.

சமநிலை

35–வது நிமிடத்தில் துனிசியா அணி பதில் கோல் திருப்பியது. கோல் எல்லை பகுதியில் பந்தை எதிர்கொள்ள முயன்ற துனிசியா வீரர் பென் யூசுப்பை, இங்கிலாந்து அணி வீரர் கெய்ல் வால்கெர் முழங்கையால் லேசாக இடித்தார். இதனால் அவர் நடுவரால் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டார். அத்துடன் துனிசியா அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இந்த லேசான மோதலுக்கு பெனால்டி வாய்ப்பு அளித்தது தவறானது என்று இங்கிலாந்து ரசிகர்கள் கோ‌ஷம் எழுப்பினார்கள். இந்த சர்ச்சைக்கு மத்தியில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி துனிசியா அணி வீரர் பெர்ஜானி சசி கோல் அடித்தார். முதல் பாதியில் இரு அணிகளும் 1–1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.

2–வது பாதி ஆட்டத்திலும் இங்கிலாந்து அணி தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. துனிசியா அணி தடுப்பு ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தியது. இதனால் இங்கிலாந்து அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் கைகூடாமல் போனது. எனவே இந்த ஆட்டம் டிராவை நோக்கி நகர்வது போல் இருந்தது.

கடைசி நிமிட கோலால் வெற்றி

கடைசி நிமிடத்தில் இங்கிலாந்து அணி அற்புதமாக 2–வது கோலை அடித்தது. கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இங்கிலாந்து அணி வீரர் கிரன் டிரிப்பெர் கோல் எல்லையை நோக்கி அடித்த பந்தை, சக வீரர் ஹாரி மாகுரே தலையால் முட்டினார். அந்த பந்தை, கோல் கம்பத்தின் அருகில் நின்ற கேப்டன் ஹாரிகேன் அதிரடியாக தலையால் முட்டி கோலுக்குள் திருப்பி அசத்தினார். முடிவில் இங்கிலாந்து அணி 2–1 என்ற கோல் கணக்கில் துனிசியாவை வீழ்த்தி வெற்றியுடன் இந்த போட்டியை தொடங்கியது. 59 சதவீதம் பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்த இங்கிலாந்து அணி 7 முறை கோல் இலக்கை நோக்கி ஷாட் அடித்தது. ஆனால் துனிசியா அணியால் எதிரணியின் கோல் எல்லையை எட்டுவதே அரிதான வி‌ஷயமாக இருந்தது.

முன்னதாக சோச்சி நகரில் நடந்த ‘ஜி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் பெல்ஜியம் அணி 3–0 என்ற கோல் கணக்கில் பனாமா அணியை வென்றது.