கால்பந்து

ஆஸ்திரேலியா–டென்மார்க் ஆட்டம் ‘டிரா’ + "||" + Australia-Denmark match 'draw'

ஆஸ்திரேலியா–டென்மார்க் ஆட்டம் ‘டிரா’

ஆஸ்திரேலியா–டென்மார்க் ஆட்டம் ‘டிரா’
உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று ஆஸ்திரேலியா–டென்மார்க் அணிகள் மோதிய ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

சமரா, 

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று ஆஸ்திரேலியா–டென்மார்க் அணிகள் மோதிய ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

லீக் ஆட்டம்

21–வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் 16) தகுதி பெறும்.

இந்த போட்டி தொடரில் சமரா நகரில் நேற்று நடந்த ‘சி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் டென்மார்க்–ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

பெனால்டி வாய்ப்பில் கோல்

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 7–வது நிமிடத்தில் டென்மார்க் அணி கோல் அடித்தது. நிகோலாய் ஜோர்ஜென்சன் கடத்தி கொடுத்த பந்தை அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சென் இடது காலால் உதைத்து கோலாக்கினார்.

ஆஸ்திரேலிய அணி 38–வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பியது. கோல் எல்லையில் வைத்து டென்மார்க் வீரர் யூசுப் யுராரி பவுல்சென் பந்தை கையால் கையாண்டார். இது வீடியோ உதவி நடுவர் தொழில்நுட்பத்தின் மூலம் ஆய்வு செய்ததில் வெட்டவெளிச்சமானது. இதனை அடுத்து யூசுப் யுராரி பவுல்செனுக்கு நடுவர் மஞ்சள் அட்டை காண்பித்து எச்சரிக்கை செய்ததுடன், ஆஸ்திரேலிய அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கினார். இந்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஆஸ்திரேலிய அணி கேப்டன் மில் ஜெடினாக் அபாரமாக கோல் அடித்தார்.

ஆட்டம் ‘டிரா’

இதனால் ஆஸ்திரேலிய அணி 1–1 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது. மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்ட டென்மார்க் வீரர் யூசுப் யுராரி பவுல்சென், பிரான்ஸ் அணிக்கு எதிரான அடுத்த லீக் ஆட்டத்தில் (26–ந் தேதி) விளையாட முடியாது. ஏனெனில் முந்தைய லீக் ஆட்டத்திலும் (பெரு அணிக்கு எதிராக) யூசுப் யுராரி பவுல்சென் மஞ்சள் அட்டை பெற்று இருந்தார். இந்த போட்டி தொடரில் தொடர்ந்து 2 ஆட்டங்களில் மஞ்சள் அட்டை பெற்றதால் அவரால் அடுத்த ஆட்டத்தில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலை வகித்தன.

பிற்பாதியிலும் சமபலத்துடன் போராடிய இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரம் காட்டின. இருப்பினும் அதன் பிறகு இரண்டு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. முடிவில் இந்த ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

ஆடு கணிப்பு பலித்தது

முதலாவது லீக் ஆட்டத்தில் பெரு அணியை வீழ்த்தி இருந்த டென்மார்க் அணி, முதல் டிரா கண்டுள்ளது. முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் அணியிடம் தோல்வி கண்டு இருந்த ஆஸ்திரேலிய அணி இன்னும் வெற்றி கணக்கை தொடங்கவிட்டாலும், அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.

இந்த ஆட்டம் டிராவில் முடியும் என்று ரஷியாவின் சமரா நகரில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வரும் ‘ஜபியகா’ என்ற ஆடு ஏற்கனவே கணித்து இருந்தது. அந்த ஆட்டின் கணிப்பு இந்த முடிவின் மூலம் மெய்யாகி இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.