உலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்


உலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்
x
தினத்தந்தி 21 Jun 2018 9:02 PM GMT (Updated: 21 Jun 2018 9:02 PM GMT)

தனது தொடக்க ஆட்டத்தில் (இ பிரிவு) சுவிட்சர்லாந்துடன் ‘டிரா’ கண்ட 5 முறை சாம்பியனான பிரேசில் அணி இன்றைய ஆட்டத்தில் கோஸ்டாரிகாவை கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.

நெருக்கடியில் தவிக்கும் பிரேசில்

*தனது தொடக்க ஆட்டத்தில் (இ பிரிவு) சுவிட்சர்லாந்துடன் ‘டிரா’ கண்ட 5 முறை சாம்பியனான பிரேசில் அணி இன்றைய ஆட்டத்தில் கோஸ்டாரிகாவை கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. முந்தைய ஆட்டத்தில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மாரை, சுவிட்சர்லாந்து வீரர்கள் குறி வைத்து தாக்கினர். பிடித்து இழுப்பது, காலை இடறி விடுவது என்று 10 முறை அவரை பவுல் செய்தனர். உலக கோப்பையில் கடந்த 20 ஆண்டுகளில் குறிப்பிட்ட வீரர் மீது இத்தனை முறை ‘பவுல்’ செய்யப்பட்டது அது தான் முதல் முறையாகும். எப்படியோ இன்றைய ஆட்டத்தில் நெய்மார், பிலிப் காட்டினோ, கேப்ரியல் ஜீசஸ் உள்ளிட்டோர் மீதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. கடந்த ஆட்டத்தில் மார்சிலோ கேப்டனாக இருந்தார். சுழற்சி அடிப்படையில் இந்த ஆட்டத்தில் தியாகோ சில்வா கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 1960–ம் ஆண்டுக்கு பிறகு பிரேசிலை வெல்ல முடியாமல் தவிக்கும் கோஸ்டாரிகா அதிர்ச்சி வைத்தியம் அளிக்க தீவிரம் காட்டும்.

*‘இ’ பிரிவில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் செர்பிய அணி 2–வது வெற்றியை எதிர்நோக்கி, சுவிட்சர்லாந்தை எதிர்கொள்கிறது. தொடக்க ஆட்டத்தில் கோஸ்டாரிகாவை 1–0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த செர்பிய அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி கண்டால் 2–வது சுற்றை எட்டி விடும். மாறாக அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க சுவிட்சர்லாந்து அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி காண வேண்டியது அவசியமாகும்.

*குறைந்த மக்கள் தொகையை கொண்ட ஐஸ்லாந்து நாடு, தனது முதல் ஆட்டத்தில் (டி பிரிவு) பலம் வாய்ந்த அர்ஜென்டினாவுடன் பதற்றமின்றி விளையாடி டிரா செய்தது. அந்த அணி உலக கோப்பை வரலாற்றில் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் ஆப்பிரிக்க தேசமான நைஜீரியாவுடன் இன்று கோதாவில் இறங்க காத்திருக்கிறது. அதே நேரத்தில் தொடக்க ஆட்டத்தில் 0–2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவிடம் உதைவாங்கிய இளம் வீரர்களை கொண்ட நைஜீரியா அணி, கடந்த உலக கோப்பையை போன்று நாக்–அவுட் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்றால், இன்றைய ஆட்டத்தில் ஐஸ்லாந்தை புரட்டியெடுத்தாக வேண்டும்.


Next Story