கால்பந்து

சுவிட்சர்லாந்து அணி முதல் வெற்றி2-1 கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது + "||" + Switzerland's first win 2-1 score Defeated Serbia

சுவிட்சர்லாந்து அணி முதல் வெற்றி2-1 கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது

சுவிட்சர்லாந்து அணி முதல் வெற்றி2-1 கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது
உலக கோப்பை கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

கலினிங் கிராட்,

உலக கோப்பை கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

தலையால் முட்டி கோல்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் கலினிங் கிராட் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த ‘இ’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் சுவிட்சர்லாந்து-செர்பியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே செர்பியா அணி தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தது. அதற்கு அந்த அணிக்கு கைமேல் பலன் கிடைத்தது. 5-வது நிமிடத்தில் செர்பியா அணி கோல் அடித்தது. அந்த அணி வீரர் துசன் டாடிச் கோல் எல்லையை நோக்கி அடித்த பந்தை, சக வீரர் அலெக்சாண்டர் மிட்ரோவிச் தலையால் முட்டி கோலுக்குள் திருப்பினார். அதற்கு சற்று முன்பு மிட்ரோவிச் தலையால் முட்டி கோல் அடிக்க எடுத்த முயற்சியை சுவிட்சர்லாந்து அணியின் கோல்கீப்பர் சோமெர் அருமையாக தடுத்தார். ஆனால் இந்த முறை அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

சமநிலை

பதில் கோல் திருப்ப சுவிட்சர்லாந்து அணி தீவிரம் காட்டியது. 10-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் பிளரிம் ஜிமாலி அடித்த பந்து கோலுக்கு வெளியே சென்றது. 30-வது நிமிடத்தில் பிளரிம் ஜிமாலி கோலை நோக்கி அடித்த பந்தை செர்பியா கோல் கீப்பர் விளாடிமிர் ஸ்டோஜ்கோவிச் லாவகமாக தடுத்து வெளியேற்றினார். முதல் பாதியில் செர்பியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

பிற்பாதியில் சுவிட்சர்லாந்து அணி கோல் அடிக்க ஆக்ரோஷமாக விளையாடியது. 52-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீரர் கிரானிட் ஷகா ‘ரீபவுண்ட்’ ஆகி வந்த பந்தை 25 அடி தூரத்தில் இருந்து இடது காலால் உதைத்து அபாரமாக கோலாக்கி அசத்தினார். இதனால் சுவிட்சர்லாந்து அணி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது.

பெனால்டி வழங்காததால் சர்ச்சை

அதன் பிறகு சுவிட்சர்லாந்து அணியின் ஆட்டத்தில் வேகம் அதிகரித்தது. ஆனால் செர்பியா அணியின் ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த சில முயற்சிகள் மயிரிழையில் நழுவி போயின. செர்பியா அணி வீரர்களிடம் முரட்டு ஆட்டமும் தலை தூக்கியது. இதனால் அந்த அணியின் 4 வீரர்கள் மஞ்சள் அட்டை எச்சரிக்கைக்கு ஆளானார்கள்.

71-வது நிமிடத்தில் செர்பியா அணியின் முன்கள வீரர் அலெக்சாண்டர் மிட்ரோவிச்சை, கோல் எல்லையில் வைத்து சுவிட்சர்லாந்து அணியின் பின்கள வீரர்கள் ஸ்டீபன் லிட்ஸ்டீனிர் (கேப்டன்), பாபியன் ஸ்சார் ஆகியோர் பிடித்து இழுத்து தள்ளினார்கள். இதற்கு போட்டி நடுவர் பெலிக்ஸ் ‘பெனால்டி’ வாய்ப்பு வழங்காததை பல்வேறு தரப்பினரும் விமர்சித்துள்ளனர். வீடியோ உதவி நடுவர் தொழில்நுட்பத்தை நடுவர் பயன்படுத்தாதது ஏன்? என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது. அதற்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கலாம்.

சுவிட்சர்லாந்து அணி வெற்றி

கடைசி நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணி அதிரடியாக 2-வது கோலை அடித்தது. அந்த அணி வீரர் ஷெர்டான் ஷகிரி பந்தை அதிக தூரம் வேகமாக கடத்தி வந்ததுடன் கோல் எல்லையில் செர்பியா அணியின் ஒரு பின்கள வீரர் மற்றும் கோல்கீப்பரை அருமையாக ஏமாற்றி இந்த கோலை அடித்தார்.

முடிவில் சுவிட்சர்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. சுவிட்சர்லாந்து அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலுடன் டிரா கண்டு இருந்தது. செர்பியா அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். அந்த அணி தொடக்க லீக் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை வென்று இருந்தது. இந்த உலக கோப்பை போட்டி தொடரில் முதல் கோலை விட்டுக்கொடுத்து, அதன் பிறகு சரிவில் இருந்து மீண்டு வந்து வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையை சுவிட்சர்லாந்து பெற்றது.

அணிகளின் நிலை

‘இ’ பிரிவில் 2 சுற்று லீக் ஆட்டம் முடிந்து விட்டாலும் எந்த அணியும் இன்னும் அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்யவில்லை. சுவிட்சர்லாந்து அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் கோஸ்டாரிகாவை சந்திக்கிறது. மற்றொரு லீக் ஆட்டத்தில் பிரேசில்-செர்பியா அணிகள் மோதுகின்றன. இந்த 2 ஆட்டமும் 27-ந் தேதி நடக்கிறது. தலா 4 புள்ளிகள் பெற்றுள்ள பிரேசில், சுவிட்சர்லாந்து அணிகள் தங்கள் கடைசி லீக் ஆட்டங்களில் டிரா கண்டாலே அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும். 3 புள்ளிகள் பெற்றுள்ள செர்பியா அணியை பொறுத்தவரையில் கடைசி லீக் ஆட்டத்தில் பிரேசிலை வீழ்த்தினால் மட்டுமே அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும். முதல் 2 ஆட்டத்திலும் தோல்வி கண்ட கோஸ்டாரிகா அணி ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.