மெஸ்சியை எச்சரிக்கும் நைஜீரியா வீரர் முசா 2 கோல்கள் அடிப்பேன் என்கிறார்


மெஸ்சியை எச்சரிக்கும் நைஜீரியா வீரர் முசா 2 கோல்கள் அடிப்பேன் என்கிறார்
x
தினத்தந்தி 23 Jun 2018 9:30 PM GMT (Updated: 23 Jun 2018 9:00 PM GMT)

உலக கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் இரவு ‘டி’ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் நைஜீரியா 2–0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை தோற்கடித்தது.

வால்கோகிராட், 

உலக கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் இரவு ‘டி’ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் நைஜீரியா 2–0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை தோற்கடித்தது. நைஜீரியா அணியில் இரண்டு கோல்களையும் அகமத் முசா அடித்தார். நைஜீரியா கடைசி லீக்கில் அர்ஜென்டினாவை (26–ந்தேதி) சந்திக்கிறது. அடுத்து சுற்று வாய்ப்பை பெற இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா கட்டாயம் வென்றாக வேண்டிய உச்சக்கட்ட நெருக்கடியில் தவிக்கிறது.

இந்த ஆட்டம் குறித்து நைஜீரியா அணியின் ‘புதிய ஹீரோ’ அகமத் முசா கூறுகையில், ‘எப்போதெல்லாம் நான் அர்ஜென்டினாவுக்கு எதிராக அல்லது லயோனல் மெஸ்சிக்கு எதிராக களம் இறங்குகிறேனோ அப்போதெல்லாம் நான் கோல் அடிக்கிறேன். 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் எனக்கு எதிராக மெஸ்சி ஆடிய போது இரண்டு கோல்கள் அடித்தேன். இதே போல் கிளப் போட்டியில் லீசெஸ்டர் சிட்டி அணிக்கு நான் மாறிய போது பார்சிலோனா அணிக்கு எதிரான மோதலில் இரண்டு கோல்கள் போட்டேன். அந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணிக்காக மெஸ்சியும் விளையாடினார். எனவே அர்ஜென்டினாவுக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் எதுவும் நடக்கலாம். நான் இன்னொரு 2 கோல்கள் அடிப்பதற்கும் வாய்ப்புள்ளது’ என்றார். 25 வயதான அகமத் முசா நைஜீரியா அணிக்காக உலக கோப்பை போட்டியில் அதிக கோல்கள் (மொத்தம் 4 கோல்) என்ற பெருமைக்குரியவர் ஆவார்.

முதல் 2 ஆட்டத்தில் சொதப்பியதால் கடும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கும் அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி கடைசி லீக்கில் எழுச்சி பெற வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்.


Next Story