கால்பந்து

சுவீடனை வீழ்த்தி ‘திரில்’ வெற்றி: கடைசி நிமிட கோலால் சிக்கலில் இருந்து மீண்டது ஜெர்மனி + "||" + 'Thrill' Success: The last minute goal is from trouble Overflowed Germany

சுவீடனை வீழ்த்தி ‘திரில்’ வெற்றி: கடைசி நிமிட கோலால் சிக்கலில் இருந்து மீண்டது ஜெர்மனி

சுவீடனை வீழ்த்தி ‘திரில்’ வெற்றி: கடைசி நிமிட கோலால் சிக்கலில் இருந்து மீண்டது ஜெர்மனி
உலக கோப்பை கால்பந்து போட்டியில் டோனி குரூசின் கடைசி நிமிட கோலால் ஜெர்மனி அணி 2–1 என்ற கோல் கணக்கில் சுவீடனை வீழ்த்தி ‘திரில்’ வெற்றியை ர

சோச்சி, 

உலக கோப்பை கால்பந்து போட்டியில் டோனி குரூசின் கடைசி நிமிட கோலால் ஜெர்மனி அணி 2-1 என்ற கோல் கணக்கில் சுவீடனை வீழ்த்தி ‘திரில்’ வெற்றியை ருசித்தது.

ஒசில் நீக்கம்

உலக கோப்பை கால்பந்து திருவிழாவில், நேற்று முன்தினம் இரவு சோச்சி நகரில் அரங்கேறிய ‘எப்’ பிரிவு லீக் ஆட்டத்தில் உலக சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ அணியுமான ஜெர்மனி, சுவீடனுடன் மோதியது.

வெற்றி பெற்றால் மட்டுமே தொடரில் நீடிக்க முடியும் என்ற இக்கட்டான நிலைமையில் ஜெர்மனி களம் இறங்கியது. முதல் லீக் ஆட்டத்தில் தோல்வி எதிரொலியாக முன்னணி வீரர்கள் மெசூத் ஒசில், கெதிரா கழற்றி விடப்பட்டனர்.

எப்போதும் போல ஆக்ரோ‌ஷமாக ஆடிய ஜெர்மனி வீரர்கள் முதல் 8 நிமிடத்திற்குள் இரண்டு முறை சுவீடன் எல்லையை முற்றுகையிட்டு தாக்குதல் தொடுத்தனர். ஆனால் அவர்களை சுவீடன் வீரர்கள் திறம்பட சமாளித்து எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர். சுவீடன் கோல் கீப்பர் ராபின் ஆல்சனை தாண்டி கோல் அடிப்பது எளிதான காரியம் அல்ல. ஏனெனில் கடைசி 548 நிமிடங்களில் அவர் ஒரு கோல் கூட விட்டுக்கொடுத்ததில்லை.

சுவீடன் வீரர்கள் அதிருப்தி

12–வது நிமிடத்தில் சுவீடன் வீரர் மார்கஸ் பெர்க் தனி வீரராக ஜெர்மனி எல்லைக்குள் புகுந்தார். அப்போது அவரை ஜெர்மனி வீரர் போட்டெங் காலை குறுக்கிட்டு இடறி விட்டார். உடனே சுவீடன் வீரர்கள் பெனால்டி கேட்டு முறையிட்டனர். ஆனால் நடுவர் அதை கண்டுகொள்ளவில்லை. வீடியோ உதவி நடுவர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருந்தால் சுவீடனுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்திருக்கும்.

சுவீடன் வீரர்கள் சற்று டென்‌ஷன் ஆகிப்போனார்கள். 32–வது நிமிடத்தில் சுவீடனுக்கு கோல் சந்தர்ப்பம் கனிந்தது. அந்த அணி வீரர் ஓலா டொய்வோனென் ஜெர்மனி கோல் கீப்பர் மானுவல் நியரை லாவகமாக ஏமாற்றி பந்தை வலைக்குள் அடித்தார். அதாவது நியர் முன்பக்கமாக தடுக்க முற்பட்ட போது அவரது தலைக்கு மேலாக பந்தை தூக்கி விட்டு கோலுக்குள் இறக்கினார்.

0-1 என்ற கணக்கில் பின்தங்கியதால் ஜெர்மனி வீரர்கள் நெருக்கடிக்கு உள்ளானார்கள். 80 ஆண்டுகளுக்கு பிறகு ஜெர்மனி முதல் சுற்றுடன் மூட்டையை கட்டி விடுமோ? என்ற அச்சம் ரசிகர்கள் மனதில் எழாமல் இல்லை.

ஒரு வழியாக 48–வது நிமிடத்தில் சக வீரர் வெர்னர் தட்டிக்கொடுத்த பந்தை ஜெர்மனியின் மார்கோ ரீய்ஸ் இடது காலால் வலைக்குள் அனுப்பி ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார். ஆனாலும் ஜெர்மனி மீதான அழுத்தம் தணியவில்லை.

போட்டெங்குக்கு சிவப்பு அட்டை

மனம் தளராத ஜெர்மனியின் தாக்குதல் ஒரு பக்கம் என்றால், அதை முறியடிக்கும் சுவீடனின் தடுப்பாட்ட யுக்தி இன்னொரு பக்கம் என்று ஆட்டம் பரபரப்பாக நகர்ந்தது. 82–வது நிமிடத்தில் எதிரணி வீரரை ‘பவுல்’ செய்ததால் ஜெர்மனியின் ஜெரோம் போட்டெங் 2–வது முறையாக மஞ்சள் அட்டை எச்சரிக்கைக்கு உள்ளானார். இரண்டு மஞ்சள் அட்டை என்பது ஒரு சிவப்பு அட்டைக்கு சமம் ஆகும். இதனால் அவர் சிவப்பு அட்டை காட்டப்பட்டு களத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்த உலக கோப்பையில் இது 2–வது சிவப்பு அட்டை நிகழ்வாகும். இதனால் எஞ்சிய நேரம் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைமைக்கு ஜெர்மனி அணி தள்ளப்பட்டது. இறுதிகட்டத்தில் ஜெர்மனி வீரர்களின் கால்களில் புயல்வேகத்தையும், அவசரத்தையும் பார்க்க முடிந்தது.

கடைசி நிமிடத்தில் கோல்

வழக்கமான 90 நிமிடங்களுக்கு பிறகு காயம் உள்ளிட்ட விரயத்தை கணக்கிட்டு 5 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. இந்த 5 நிமிடங்கள் தான் போட்டியில் திருப்பத்தை ஏற்படுத்தின. இதன் 2–வது நிமிடத்தில் ஜெர்மனி மாற்றுஆட்டக்காரர் ஜூலியன் பிரான்டிட் அடித்த வலுவான ஷாட் கம்பத்தில் பட்டு மயிரிழையில் நழுவி ஏமாற்றியது.

ஆட்டம் முடிய ஒரு நிமிடம் மட்டுமே இருந்த போது தான் ஜெர்மனிக்கு அந்த அதிர்ஷ்டம் கதவை தட்டியது. வெர்னரை கீழே தள்ளி சுவீடன் வீரர் ஜிம்மி துர்மாஸ் ‘பவுல்’ செய்ததால் ஜெர்மனிக்கு ‘பிரிகிக்’ வாய்ப்பு வழங்கப்பட்டது. சுவீடன் கோல் கம்பத்தின் இடது பகுதியில் இருந்து ‘பிரிகிக்’கை அடிக்க ஜெர்மனி நட்சத்திர வீரர் டோனி குரூஸ் தயாரான போது, ரசிகர்கள் திரிலிங்கோடு உற்றுநோக்கினர்.

அந்த கோணத்தில் இருந்து பந்தை அடிப்பது சற்றே கடினமானது என்பதை உணர்ந்த டோனி குரூஸ், பந்தை சில அடி நகர்த்தி விட்டு அங்கிருந்து ஓங்கி உதைத்தார். அது வளைந்து சென்று கோலின் கார்னர் பகுதிக்குள் நுழைந்து வலைக்கு முத்தமிட்டது. அடுத்த கனமே ஜெர்மனி வீரர்கள் மற்றும் ரசிகர்களின் மத்தியில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

ஜெர்மனி வெற்றி

தங்கள் நாட்டினரை நிம்மதி பெருமூச்சு விட வைத்த டோனி குரூஸ் அடித்த பிரமிப்பான அந்த ஷாட், இந்த உலக கோப்பையில் சிறந்த கோல்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

முடிவில் ஜெர்மனி 2–1 என்ற கோல் கணக்கில் சுவீடனை தோற்கடித்து முதல் வெற்றியுடன் அடுத்த சுற்று வாய்ப்பை (நாக்–அவுட் சுற்று) தக்க வைத்துக் கொண்டது. முன்னதாக ஜெர்மனி முதல் ஆட்டத்தில் மெக்சிகோவுடன் தோற்றது நினைவிருக்கலாம்.

அணிகளின் நிலை என்ன?

‘எப்’ பிரிவில் 2 சுற்று ஆட்டங்கள் முடிந்து விட்டன. ஆனாலும் எந்த அணியும் அடுத்த சுற்றை உறுதி செய்யவும் இல்லை, வெளியேறவும் இல்லை. இந்த சுற்றின் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் 27–ந்தேதி நடக்கிறது. இதில் ஜெர்மனி–தென்கொரியா (இரவு 7.30 மணி), மெக்சிகோ–சுவீடன் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

3 புள்ளியுடன் உள்ள ஜெர்மனி அணி கடைசி லீக்கில் தென்கொரியாவை வீழ்த்தியாக வேண்டும். இதே போல் 3 புள்ளி பெற்றிருக்கும் சுவீடன் மெக்சிகோவை சாய்த்தாக வேண்டும். இவ்வாறு நிகழ்ந்தால் மெக்சிகோ, ஜெர்மனி, சுவீடன் அணிகள் தலா 6 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். அப்போது கோல் அடிப்படையில் இரு அணிகள் அடுத்த சுற்றை எட்டும். இது போன்ற முடிவுகளை பொறுத்து 4 அணிகளின் தலைவிதியும் அமையும்.

பயிற்சியாளர்கள் கருத்து

ஜெர்மனி பயிற்சியாளர் ஜோசிம் லோ கூறுகையில், ‘கடைசி நிமிடம் வரை திரிலிங்காகவும், உணர்வுபூர்வமாகவும் இந்த ஆட்டம் இருந்தது. ஒரு கோல் வாங்கியதுடன் நாங்கள் பீதி அடையவில்லை. மீண்டெழுவோம் என்ற நம்பிக்கையையும் இழக்கவில்லை. கடைசி நிமிடத்தில் கோல் அடித்தது கொஞ்சம் அதிர்ஷ்டம் தான். இறுதிவரை முழு உத்வேகத்துடன் போராடிய அணி வீரர்களை பாராட்டுகிறேன். டோனி குரூசின் ‘பிரிகிக்’ ஷாட் உலகத்தரம் வாய்ந்தது’ என்றார்.

சுவீடன் பயிற்சியாளர் ஜானி ஆண்டர்சன் கூறுகையில், ‘ஜெர்மனி வீரர்கள் அதிகமான கோல் வாய்ப்புகளை உருவாக்கவில்லை. அதே சமயம் எங்களது கோல் கீப்பர் எதிரணியின் சில நல்ல வாய்ப்புகளை முறியடித்தார். குறைந்தது ‘டிரா’ கண்டு ஒரு புள்ளியாவது எடுக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டமே. இந்த பிரிவில் எல்லா அணிகளுக்குமே அடுத்த சுற்று வாய்ப்பு இருக்கிறது. தோல்வியின் வேதனையை மறந்து விட்டு அடுத்த ஆட்டத்தில் வலுவாக மீள்வதே முக்கியம்’ என்றார்.