வெற்றியுடன் வெளியேறியது சவுதி அரேபியா


வெற்றியுடன் வெளியேறியது சவுதி அரேபியா
x
தினத்தந்தி 25 Jun 2018 11:00 PM GMT (Updated: 25 Jun 2018 11:00 PM GMT)

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சவுதி அரேபியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் எகிப்தை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்து போட்டியை விட்டு வெளியேறியது.

வால்கோகிராட்,

உலக கோப்பை கால்பந்து போட்டியில் வால்கோகிராட் நகரில் நேற்று நடந்த ‘ஏ’ பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் எகிப்து-சவுதி அரேபியா அணிகள் மோதின. ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட இந்த இரு அணிகளும் சம்பிரதாயத்துக்காக சந்தித்தன.

ஆறுதல் வெற்றிக்காக களம் கண்ட இந்த ஆட்டத்தில் சவுதி அரேபியாவின் கட்டுப்பாட்டிலேயே பந்து அதிக நேரம் இருந்தது. இருப்பினும் எகிப்து அணி தான் முதல் கோலை அடித்தது. 22-வது நிமிடத்தில் அந்த அணியின் நட்சத்திர வீரர் முகமது சலா இந்த கோலை அடித்தார். இந்த உலக கோப்பையில் அவர் அடித்த 2-வது கோல் இதுவாகும். 39-வது நிமிடத்தில் சவுதி அரேபியா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி சவுதி அரேபியா வீரர் பஹத் அல் முவாலத் கோலை நோக்கி அடித்த பந்தை எகிப்து அணியின் கேப்டனும், கோல்கீப்பருமான எஸ்சாம் எல் ஹடாரி அபாரமாக தடுத்து வெளியேற்றினார்.

45-வது நிமிடத்தில் சவுதி அரேபியா அணிக்கு 2-வது பெனால்டி வாய்ப்பு கிட்டியது. இதனை சரியாக பயன்படுத்தி கொண்ட அந்த அணி வீரர் சல்மான் அல்பராஜ் இடது காலால் உதைத்து கோலாக்கினார். முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலை வகித்தன.

இந்த ஆட்டம் டிராவில் முடியும் என்று எதிர்பார்த்த நிலையில் சவுதி அரேபியா அணி கடைசி நிமிடத்தில் 2-வது கோல் அடித்தது. அந்த அணி வீரர் சலிம் அல் தவ்சாரி லாவகமாக இந்த கோலை திணித்தார். முடிவில் சவுதி அரேபியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் எகிப்து அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றதுடன், தனது பிரிவில் 3-வது இடத்தை பிடித்தது. உலக கோப்பை போட்டியில் 24 ஆண்டுகளுக்கு பிறகு சவுதி அரேபியா அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். எல்லா ஆட்டங்களிலும் தோல்வி கண்ட எகிப்து அணி கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது. 3-வது முறையாக உலக கோப்பை போட்டியில் ஆடிய எகிப்து அணி இதுவரை ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றதில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

Next Story