சர்ச்சைகளுக்கு மத்தியில் ஈரானுடன் டிரா: 2வது சுற்றை எட்டியது போர்ச்சுகல்


சர்ச்சைகளுக்கு மத்தியில் ஈரானுடன் டிரா: 2வது சுற்றை எட்டியது போர்ச்சுகல்
x
தினத்தந்தி 26 Jun 2018 10:45 PM GMT (Updated: 26 Jun 2018 9:06 PM GMT)

ஈரானுக்கு எதிரான ஆட்டத்தில் சில சர்ச்சைகளை தாண்டி ‘டிரா’ செய்த போர்ச்சுகல் அணி 2வது சுற்றை எட்டியது.

சரான்ஸ்க்,

உலக கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் இரவு சரான்ஸ்க் நகரில் அரங்கேறிய ‘பி’ பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் ஐரோப்பிய சாம்பியன் போர்ச்சுகலும், ஆசிய அணியான ஈரானும் மோதின.

குறைந்தது ‘டிரா’ செய்தாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் களம் புகுந்த போர்ச்சுகல் அணி பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு (68 சதவீதம்) எதிரணியின் கோல்பகுதியை நோக்கி படையெடுப்பதில் கவனம் செலுத்தியது. போர்ச்சுகல் கேப்டனும், நட்சத்திர ஆட்டக்காரருமான கிறிஸ்டியானா ரொனால்டோ முதல் பாதிக்குள் அடித்த இரண்டு ஷாட்டுகளையும் ஈரான் கோல் கீப்பர் அலி பெய்ரன்வான்ட் சுலபமாக தடுத்தார். அதே சமயம் ஈரான், இரண்டு ‘பிரிகிக்’ வாய்ப்புகளை வீணடித்தது. 45-வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் 34 வயதான ரிக்கார்டோ குரேஸ்மா, வலது பக்கத்தில் இருந்து பிரமாதமாக தூக்கியடித்த பந்து, கார்னர் பகுதிக்குள் நுழைந்து கோலாக மாறியது. இதனால் முதல் பாதியில் போர்ச்சுகல் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

பிற்பாதியின் 49-வது நிமிடத்தில் கோல்பகுதியில் வைத்து ரொனால்டோவை, ஈரான் வீரர் சயீத் இஜாடோலாஹி லேசாக இடித்தார். இதனால் பெனால்டி வாய்ப்பு போர்ச்சுகலுக்கு வழங்கப்பட்டது. இந்த பொன்னான வாய்ப்பில் ரொனால்டோ உதைத்த ஷாட்டை, ஈரான் கோல் கீப்பர் பெய்ரன்வான்ட் துல்லியமாக கணித்து பாய்ந்து விழுந்து பந்தை அமுக்கினார். பெனால்டி வீண் ஆனதால், போர்ச்சுகல் வீரர்களும், ரசிகர்களும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

இதன் பிறகு ஈரான் வீரர்கள் புதுரத்தம் பாய்ச்சியது போல் ஆவேசமாக விளையாடினர். அவர்களின் எழுச்சியை கண்டு போர்ச்சுகல் அணியினர் திகைத்து போனார்கள் என்று தான் சொல்ல வேண்டும். 80-வது நிமிடத்தில் ரொனால்டோ, ஈரான் வீரர் மோர்டெஜா போராலிகஞ்சியின் முகத்தில் முழங்கையால் லேசாக இடித்தார். இதற்கு அவருக்கு சிவப்பு அட்டை வழங்க வேண்டும் என்று ஈரான் அணியினர், போட்டி நடுவரிடம் வாதிட்டனர்.

இதையடுத்து வீடியோ உதவிநடுவர் (வி.ஏ.ஆர்.) தொழில்நுட்பத்தை பயன்படுத்திய போட்டி நடுவர், ரொனால்டோவை மஞ்சள் அட்டை எச்சரிக்கையுடன் விட்டு விட்டார். இதனால் ஈரான் வீரர்கள் கடும் அதிருப்திக்குள்ளானார்கள்.

அவ்வப்போது சலசலப்பும், சர்ச்சைகளும் எழுந்து அடங்கிய நிலையில் 89-வது நிமிடத்தில் ஈரான் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசியது. அச்சமயம் ஈரான் வீரர் சர்தார், போர்ச்சுகல் வீரர் செட்ரிக் இருவரும் பந்தை தலையால் முட்ட முயற்சித்தனர். அப்போது பந்து செட்ரிக்கின் கையில் பட்டதாகவும், அதற்கு பெனால்டி வேண்டும் என்றும் ஈரான் அணியினர் நடுவரிடம் முறையிட்டனர். இதற்கு போர்ச்சுகல் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து நடுவர் வி.ஏ.ஆர். தொழில்நுட்ப உதவியை நாடிய போது செட்ரிக் பந்தை கையால் கையாண்டது தெளிவாக தெரிந்தது. 3 நிமிட விவாதத்திற்கு பிறகு ஈரானுக்கு பெனால்டி வழங்கப்பட்டது.

இதற்கிடையே வழக்கமான நேரம் முடிந்து காயம் உள்ளிட்ட விரயத்துக்காக 6 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. பெனால்டி வாய்ப்பை ஈரான் வீரர் கரிம் அன்சாரிபாத் கோலாக்கி ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார். அடுத்த சில வினாடிகளில் ஈரான் இன்னொரு கோல் அடித்திருக்க வேண்டியது. எதிரணியின் தற்காப்பு ஆட்டக்காரர்களுக்கு ‘தண்ணி’ காட்டிவிட்டு கோல்பகுதிக்குள் ஊடுருவிய ஈரான் வீரர் மெதி டாரிமி, கம்பத்தின் கார்னர் பகுதியை குறி வைத்து பந்தை பலமாக உதைத்தார். பந்து துரதிர்ஷ்டவசமாக சற்று விலகி வெளிவலையின் மீது பட்டு நின்றது. அது மட்டும் கோலாகி இருந்தால் ஈரான் முதல் முறையாக நாக்-அவுட் சுற்றை எட்டியிருக்கும். போர்ச்சுகல் மூட்டை முடிச்சை கட்டியிருக்கும்.

திரிலிங்கான ஆட்டத்தின் முடிவில் இந்த போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதன் மூலம் உலக கோப்பை ஆட்டங்களில் முதல் கோல் அடித்து அதன் பிறகு தோற்றதில்லை என்ற பெருமையை போர்ச்சுகல் தக்கவைத்துக் கொண்டது.

‘பி’ பிரிவில் 5 புள்ளிகளுடன் (ஒரு வெற்றி, 2 டிரா) 2-வது இடத்தை பிடித்த போர்ச்சுகல் அணி 2-வது சுற்றுக்கு முன்னேறியது. போர்ச்சுகல் அணி அடுத்த சுற்றில் முன்னாள் சாம்பியன் உருகுவேயை 30-ந்தேதி சோச்சி நகரில் சந்திக்கிறது.

‘முழங்கையால் இடித்த ரொனால்டோவுக்கு சிவப்பு அட்டை காட்டியிருக்க வேண்டும்’ - ஈரான் பயிற்சியாளர் குயரோஸ்


‘டிரா’வுக்கு பிறகு ஈரான் அணியின் பயிற்சியாளர் கார்லோஸ் குயரோஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த ஆட்டத்தில் எங்கள் அணி வீரரை முழங்கையால் இடித்த போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோவுக்கு நடுவர் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றி இருக்க வேண்டும். முழங்கையால் தடுத்தால் சிவப்பு அட்டை வழங்க வேண்டும் என்பது விதிமுறையாகும். பிரபலம் வாய்ந்த வீரர்கள் லயோனல் மெஸ்சி அல்லது ரொனால்டோவாக இருந்தால் அது பொருந்தாது என்று விதிமுறையில் எதுவும் சொல்லப்படவில்லையே?

முன்பு மனிதர்கள் தவறு செய்தார்கள், அது விளையாட்டின் ஒரு அங்கம் என்று ஏற்றுக்கொண்டோம். ஆனால் இப்போது உயரிய தொழில்நுட்பம் வந்து விட்டது. அதில் 5-6 பேர் பணியாற்றுகிறார்கள். அப்படி இருந்தும் தவறு நடந்தால் எப்படி? இதற்கு பொறுப்பு ஏற்பது யார்?

‘ரக்பி’ விளையாட்டு போல் நடுவர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது அவர்கள் தங்களுக்குள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது வெளிப்படையாக அனைவருக்கும் தெரிய வேண்டும். சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் இன்பான்டினோவுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், வி.ஏ.ஆர். தொழில்நுட்பம் துல்லியமாக இல்லை என்பது தான். அது தான் உண்மை. இது பற்றி நிறைய புகார்கள் வந்திருப்பதே அதற்கு சான்று. இந்த ஆட்டத்தில் சில தீர்ப்புகள் சரியாக வழங்கப்பட்டிருந்தால் ஒரு அணி வெற்றியாளராக உருவெடுத்து இருக்கும். அது ஈரானாக இருந்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

அதே நேரத்தில், ஈரான் பயிற்சியாளர் குயரோஸ் போர்ச்சுகல் நாட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக பெனால்டி வழங்கப்பட்ட உலக கோப்பை தொடர்

இந்த உலக கோப்பை கால்பந்து திருவிழாவில் 38 ஆட்டங்களின் நிறைவில் 20 பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. ஒரு உலக கோப்பையில் அதிக பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்ட உலக கோப்பை தொடர் இது தான். இதற்கு முன்பு 18 பெனால்டி (1990, 1998, 2002) வழங்கப்பட்டதே சாதனையாக இருந் தது.

இந்த உலக கோப்பையில் முதல்முறையாக வீடியோ உதவி நடுவர் (வி.ஏ.ஆர்.) முறை அறிமுகமாகியுள்ளது. வீரர்கள் ‘பவுல்’ செய்கையில் அதற்கு பெனால்டி அளிப்பதா? அல்லது ‘பிரிகிக்’ வழங்குவதா? என்று சந்தேகம் வரும் போது கள நடுவர், வி.ஏ.ஆர். தொழில்நுட்பத்தை நாடுகிறார். இந்த வகையில் 7 பெனால்டி, வி.ஏ.ஆர். உதவியுடன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுவரை வழங்கப்பட்ட 20 பெனால்டியில் 15 கோலாக மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story