கால்பந்து

ஆஸ்திரேலியாவை பதம்பார்த்து 40 ஆண்டுகளுக்கு பிறகு பெரு அணி வெற்றி + "||" + After 40 years, Australia have won the Peru team

ஆஸ்திரேலியாவை பதம்பார்த்து 40 ஆண்டுகளுக்கு பிறகு பெரு அணி வெற்றி

ஆஸ்திரேலியாவை பதம்பார்த்து 40 ஆண்டுகளுக்கு பிறகு பெரு அணி வெற்றி
உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பெரு அணி 40 ஆண்டுகளுக்கு பிறகு முதல் வெற்றியை பெற்றது.
சோச்சி,

32 அணிகள் பங்கேற்றுள்ள உலக கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று இறுதி கட்டத்துக்கு வந்துவிட்டது.

‘சி’ பிரிவில் கடைசி லீக் ஆட்டங்கள் நேற்று நடந்தன. சோச்சி நகரில் அரங்கேறிய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பெரு அணிகள் மோதின. ஷாட் அடிப்பதிலும் (14 முறை), பந்தை வசப்படுத்துவதிலும் (53 சதவீதம்) ஆஸ்திரேலியாவின் கை சற்று ஓங்கி இருந்தாலும் அதிர்ஷ்டம் என்னவோ பெரு அணிக்கு தான் கிட்டியது.


பெரு வீரர்கள் ஆந்த்ரே காரில்லோ 18-வது நிமிடத்திலும், கேப்டன் பாப்லோ குயரிரோ 50-வது நிமிடத்திலும் அட்டகாசமாக கோல் அடித்தனர். ஆஸ்திரேலிய அணியின் சில நல்ல ஷாட்டுகளை பெரு கோல் கீப்பர் பெட்ரோ கல்லீஸ் முறியடித்தார்.

முடிவில் பெரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை பதம்பார்த்து ஆறுதல் வெற்றியை பெற்றது. 1978-ம் ஆண்டுக்கு பிறகு உலக கோப்பையில் சுவைத்த முதல் வெற்றி என்ற பெருமிதத்துடன் பெரு அணி தாயகம் புறப்படுகிறது. முதல் 2 ஆட்டத்தில் ஆடாத ஆஸ்திரேலிய வீரர் 38 வயதான டிம் காஹில் இந்த மோதலில் மாற்று ஆட்டக்காரராக களம் கண்டார். உலக கோப்பையில் அதிக வயதில் அடியெடுத்து வைத்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சிறப்பை பெற்ற டிம் காஹிலுக்கு இது 4-வது உலக கோப்பை தொடராகும். முந்தைய மூன்று உலக கோப்பை போட்டிகளிலும் கோல் அடித்திருந்த அவருக்கு ரஷிய உலக கோப்பை ஏமாற்றத்தில் முடிந்திருக்கிறது.

மாஸ்கோ நகரில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் அணி, டென்மார்க்கை எதிர்கொண்டது. பிரான்ஸ் அணி கோல் அடிக்க வரிந்து கட்டிய போதிலும், டிரா செய்தாலே போதும் என்ற மனநிலையுடன் ஆடிய டென்மார்க் தடுப்பாட்டத்தில் அக்கறை காட்டியது. பெரும்பாலான நேரம் பந்து பிரான்ஸ் அணியினர் (62 சதவீதம்) பக்கம் சுற்றிக் கொண்டு இருந்தாலும் கடைசி வரை டென்மார்க்கின் தடுப்பு அரணை உடைக்க முடியவில்லை.

முடிவில் இந்த ஆட்டம் 0-0 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. நடப்பு தொடரில் கோல் இன்றி முடிந்த முதல் ஆட்டம் இது தான். இதனால் குழுமியிருந்த 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள்.

‘சி’ பிரிவில் இருந்து பிரான்ஸ் (7 புள்ளி, 2 வெற்றி, ஒரு டிரா), டென்மார்க் (5 புள்ளி, ஒரு வெற்றி, 2 டிரா) அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. பெரு (3 புள்ளி), ஆஸ்திரேலியா (1 புள்ளி) அணிகள் வெளியேறின.

ஆசிரியரின் தேர்வுகள்...