2-1 கோல் கணக்கில் நைஜீரியாவை சாய்த்து: அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது அர்ஜென்டினா


2-1 கோல் கணக்கில் நைஜீரியாவை சாய்த்து: அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது அர்ஜென்டினா
x
தினத்தந்தி 27 Jun 2018 11:15 PM GMT (Updated: 27 Jun 2018 8:54 PM GMT)

உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்,

உலக கோப்பை கால்பந்து போட்டியில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த ‘டி’ பிரிவு கடைசி லீக் ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி, ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த நைஜீரியாவை எதிர்கொண்டது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை பெற முடியும் என்ற உச்சகட்ட நெருக்கடியுடன் ஆடிய அர்ஜென்டினா அணியில் 5 வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். 31 வயதான கோல்கீப்பர் பிரான்கோ அர்மானி அறிமுக வீரராக இடம் பெற்றார். குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கவனக்குறைவாக பந்தை ‘பாஸ்’ செய்து எதிரணி முதல் கோல் அடிக்க காரணமாக விளங்கிய அர்ஜென்டினா அணியின் கோல்கீப்பர் கபல்லேரோவுக்கு அணியில் இடம் வழங்கப்படவில்லை.

ஆரம்பம் முதலே அர்ஜென்டினா அணி ஆக்ரோஷமாக ஆடியது. அந்த அணி வீரர்கள் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் அதிகம் வைத்து இருந்ததுடன், எதிரணி கோல் எல்லையை முற்றுகையிட்டு தாக்குதல் ஆட்டத்திலும் ஈடுபட்டனர். அனுபவம் வாய்ந்த அர்ஜென்டினா அணியின் தாக்குதல் ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் நைஜீரியாவின் இளம் வீரர்கள் முதலில் தடுமாறினார்கள்.

14-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணி முதல் கோல் அடித்தது. அந்த அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான லயோனல் மெஸ்சி, மைதானத்தின் நடுபகுதியில் இருந்து சக வீரர் எவர் பனேகா அடித்த பந்தை தனது தொடையால் அருமையாக கட்டுப்படுத்தியதுடன், தரையில் விழும் முன்பு பந்தை காலால் தட்டுக்கொடுத்து முன்னோக்கி எடுத்து சென்றதுடன், நைஜீரியா பின்கள வீரரின் துரத்தலையும் பின்னுக்கு தள்ளி வேகமாக ஓடி பந்தை கோல் கம்பத்தின் இடது புறத்தின் மேல் நோக்கி அடித்து அருமையாக கோலாக்கினார்.

மெஸ்சி அடித்த கோலின் வேகத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்த ரசிகர்களின் ஆர்ப்பரிப்பில் ஸ்டேடியமே அதிர்ந்தது. அத்துடன் முந்தைய ஆட்டங்களில் சோபிக்காததால் தன்னை நோக்கி எழுந்த விமர்சனங்களுக்கும் மெஸ்சி இந்த கோலின் மூலம் சரியான பதிலடி கொடுத்தார். இந்த உலக கோப்பை போட்டியில் மெஸ்சி அடித்த முதல் கோலான இது இந்த போட்டி தொடரில் 100-வது கோலாக பதிவானது. அத்துடன் அர்ஜென்டினா அணிக்காக மெஸ்சி அடித்த 65-வது கோல் இதுவாகும்.

27-வது நிமிடத்தில் லயோனல் மெஸ்சி கொடுத்த பந்தை சக வீரர் கொன்சாலோ வீணடித்தார். 34-வது நிமிடத்தில் பிரிகிக் வாய்ப்பை பயன்படுத்தி மெஸ்சி அடித்த பந்து நைஜீரியா அணியின் கோல்கீப்பர் பிரான்சிஸ் கையில் லேசாக உரசியதுடன் கோல் கம்பத்தில் பட்டு மயிரிழையில் வெளியேறியது. முதல் பாதியில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

51-வது நிமிடத்தில் நைஜீரியா அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்தி அந்த அணி வீரர் கோலை நோக்கி அடித்த பந்தை சக வீரர்கள் தலையால் முட்ட முயற்சிக்கையில் கோல் எல்லையில் வைத்து அர்ஜென்டினா வீரர் சேவியர் மாஸ்சேரனோ பவுல் செய்தார். இதனை அடுத்து வீடியோ உதவி நடுவர் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்த நடுவர் நைஜீரியா அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கினார். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நைஜீரியா அணி வீரர் விக்டர் மோசஸ் எளிதாக கோல் அடித்தார். இதனால் அர்ஜென்டினா அணியின் ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

அதன் பிறகு அர்ஜென்டினா அணியினர் கோல் அடிக்க அதிக தீவிரம் காட்டினார்கள். கோல் வாங்கி விடக்கூடாது என்பதில் நைஜீரியா அணி முனைப்பு காட்டியது. அர்ஜென்டினா அணிக்கு கிடைத்த சில வாய்ப்புகள் கோல் எல்லை வரை வந்து வெற்றிகரமாக அமையாமல் காலை வாரியது. இதனால் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் அதிக பரபரப்பு நிலவியது. 75-வது நிமிடத்தில் கோல் எல்லையில் வைத்து அர்ஜென்டினா வீரர் மார்கோஸ் ரோஜோ கையால் பந்தை தடுத்ததாக நைஜீரியா வீரர்கள் பெனால்டி கேட்டு நடுவருடன் வாக்குவாதம் செய்தனர். வீடியோ உதவி நடுவர் தொழில்நுட்பத்தை (வி.ஏ.ஆர்.) ஆய்வு செய்ததில் பந்து முதலில் தலையில் படுவது தெரியவந்ததால் அர்ஜென்டினா அணி பெனால்டி ஆபத்தில் இருந்து தப்பியது. 80-வது நிமிடத்தில் நைஜீரியா அணியும், 84-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியும் கோல் அடிக்கும் வாய்ப்பை வீணடித்தன.

86-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணி 2-வது கோலை அடித்து நிம்மதி பெருமூச்சு விட்டது. வலது புறத்தில் இருந்து கேப்ரியல் மெர்காடோ கோல் எல்லையை நோக்கி கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் மார்கோஸ் ரோஜோ தரையில் படும் முன்பு அதிரடியாக மடக்கி அடித்து கோலுக்குள் திருப்பினார். கடைசி நிமிடத்தில் பந்தை அடிக்காமல் தாமதப்படுத்தியதாக மெஸ்சிக்கு நடுவர் மஞ்சள் அட்டை காண்பித்தார்.

முடிவில் அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. குரோஷியாவிடம் அதிர்ச்சி தோல்வியும், ஐஸ்லாந்து அணியுடன் டிராவும் கண்டு இருந்த அர்ஜென்டினா அணி தனது பிரிவில் 2-வது இடம் பிடித்து அடுத்தச் சுற்றுக்கு (ரவுண்ட் 16) தகுதி பெற்றது. ஒரு வெற்றி, 2 தோல்வி கண்ட நைஜீரியா அணி 3-வது இடம் பெற்று மயிரிழையில் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.

அர்ஜென்டினா அணி தனது அடுத்த சுற்று ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் முதலிடம் பிடித்த பிரான்ஸ் அணியை (ஜூன் 30-ந் தேதி) சந்திக்கிறது. அர்ஜென்டினா அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றதும் வீரர்கள் ஆனந்த கண்ணீர் வடித்ததுடன், ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். நைஜீரியா அணியின் அடுத்த சுற்று கனவு கலைந்து போனதால் அந்த அணியினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.

Next Story