தென்கொரியாவிடம் அதிர்ச்சி தோல்வி: உலக சாம்பியன் ஜெர்மனி வெளியேற்றம்


தென்கொரியாவிடம் அதிர்ச்சி தோல்வி: உலக சாம்பியன் ஜெர்மனி வெளியேற்றம்
x
தினத்தந்தி 27 Jun 2018 11:30 PM GMT (Updated: 27 Jun 2018 9:03 PM GMT)

தென்கொரியாவிடம் அதிர்ச்சி தோல்வியால் உலக சாம்பியன் ஜெர்மனி வெளியேறியது.

கஜன்,

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி அணி 0-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு, 80 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக முதல் சுற்றுடன் வெளியேறியது.

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டத்தில் மோதி வருகின்றன. லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் 16) முன்னேறும்.

இந்த நிலையில் ‘எப்’ பிரிவில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி அணி, ஆசிய கண்டத்தை சேர்ந்த தென்கொரியாவை எதிர்கொண்டது. இதில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற நெருக்கடியுடன் ஜெர்மனி அணி களம் கண்டது. நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் அணியுமான ஜெர்மனி அணியில் அதிக அளவில் நட்சத்திர வீரர்கள் இடம் பெற்று இருந்தனர். அந்த அணியின் பயிற்சியாளர் ஜோசிம் லோ வும் அணியை சிறப்பாக வழிநடத்துவதில் ஆற்றல் படைத்தவர். இதனால் இந்த போட்டி தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக ஜெர்மனி கருதப்பட்டது.

ஆனால் தென்கொரியா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஜெர்மனி அணி தன் மீதான எதிர்பார்ப்பை நிறவேற்ற முடியாமல் ஏமாற்றம் அளித்தது. அந்த அணியினர் அதிக நேரம் பந்தை தன்வசம் வைத்து இருந்தாலும் (70 சதவீதம்) கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. தென்கொரியா அணியின் தடுப்பு அரணை தகர்க்க ஜெர்மனி அணியினர் எடுத்த பல முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்தது. தென்கொரியா அணியின் கோல்கீப்பர் ஜோ ஹெயினூ அபாரமாக செயல்பட்டு ஜெர்மனி வீரர்களின் 20-க்கும் மேற்பட்ட ஷாட்களை முறியடித்து சிம்மசொப்பனமாக விளங்கினார்.

கோல் எதுவும் வர மறுத்ததால் ஜெர்மனி அணியினர் கடைசி கட்டத்தில் பதற்றத்துடன் விளையாட ஆரம்பித்தனர். அதனை தென்கொரியா அணியினர் சரியாக பயன்படுத்தி கொண்டனர். வீரர்கள் காயம் உள்ளிட்ட விரயத்துக்காக வழங்கப்படும் நேரத்தில் (இஞ்சுரி டைம்) தென்கொரியா அணி அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. கார்னர் வாய்ப்பில் தென்கொரியா வீரர் கிம் யங்வோன் முதல் கோல் அடித்தார். அதனை நடுவர் ஆப்-சைடு என்று தெரிவித்தார். ஆனால் தென்கொரியா வீரர்களின் அப்பீலை அடுத்து வீடியோ உதவி நடுவர் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்த நடுவர் கோல் என்று அறிவித்தார். இதனால் பதில் கோல் திருப்ப ஜெர்மனி அணியின் கோல்கீப்பர் உள்பட எல்லா வீரர்களும் முன்னால் இறங்கி ஆடினார்கள். அந்த நேரத்தில் தென்கொரியா அணியின் கேப்டன் சன் ஹிங்மின் பந்தை எளிதாக கடத்தி சென்று 2-வது கோலை அடித்தார்.

முடிவில் தென்கொரியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த தோல்வியால் ஜெர்மனி அணி தனது பிரிவில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு, அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. தென்கொரியா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாவிட்டாலும், பெரிய அணியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்ததுடன், தனது பிரிவில் 3-வது இடத்தை பெற்ற மகிழ்ச்சியுடன் போட்டியில் இருந்து விடைபெற்றது.

ஜெர்மனி அணி 80 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக உலக கோப்பை போட்டியில் முதல் சுற்றுடன் வெளியேறி இருக்கிறது. கடைசியாக அந்த அணி 1938-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் முதல் சுற்றில் நடையை கட்டி இருந்தது. தொடர்ச்சியாக 3 உலக கோப்பை போட்டியில் நடப்பு சாம்பியன் அணி முதல் சுற்றுடன் வெளியேறும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதேபோல் 2010-ம் ஆண்டில் நடப்பு சாம்பியன் இத்தாலியும், 2014-ம் ஆண்டில் நடப்பு சாம்பியன் ஸ்பெயினும் முதல் சுற்றுடன் வெளியேறி இருந்தது. முன்னதாக 2002-ம் ஆண்டில் பிரான்ஸ் அணி நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களம் கண்டு முதல் சுற்றுடன் வெளியேறி இருந்தது.

இதேபிரிவில் மற்றொரு கடைசி லீக் ஆட்டம் எகடெரின்பர்க் நகரில் நேற்று அரங்கேறியது. இதில் மெக்சிகோ-சுவீடன் அணிகள் சந்தித்தன. வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குள் நுழைய வாய்ப்பு ஏற்படும் என்ற நிலையில் சுவீடன் அணி களம் இறங்கியது. இதில் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை.

பிற்பாதியில் அடுத்தடுத்து 3 கோல்கள் அடித்த சுவீடன் அணி 3-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தியது. சுவீடன் அணியில் அகஸ்டின்சன் 50-வது நிமிடத்திலும், கேப்டன் கிரான்விஸ்ட் ‘பெனால்டி’ வாய்ப்பை பயன்படுத்தி 62-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். 74-வது நிமிடத்தில் சுவீடன் வீரர் அடித்த பந்தை, மெக்சிகோ வீரர் அல்வரேஸ் தடுக்கையில் அது சுயகோலாக மாறியது.

‘எப்’ பிரிவில் லீக் ஆட்டம் முடிவில் சுவீடன், மெக்சிகோ அணிகள் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றன. கோல் விகிதாசாரம் அடிப்படையில் சுவீடன் அணி முதலிடத்தை பிடித்தது. மெக்சிகோ அணி 2-வது இடம் பெற்றது. இந்த இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

Next Story