செர்பியாவுக்கு ‘செக்’ வைத்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தது, பிரேசில்


செர்பியாவுக்கு ‘செக்’ வைத்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தது, பிரேசில்
x
தினத்தந்தி 28 Jun 2018 11:24 PM GMT (Updated: 28 Jun 2018 11:27 PM GMT)

உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் செர்பியாவை சாய்த்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தது.

மாஸ்கோ,

உலக கோப்பை கால்பந்து தொடரில் மாஸ்கோ நகரில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய ‘இ’ பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான பிரேசில் அணி, செர்பியாவை எதிர்கொண்டது. அடுத்த சுற்றை எட்டுவதற்கு குறைந்தது ‘டிரா’ செய்தாக வேண்டும் என்ற சூழலில் பிரேசில் வீரர்களும், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் செர்பிய அணியினரும் மல்லுகட்டினர்.

நெய்மார், பிலிப் காட்டினோ, தியாகோ சில்வா உள்ளிட்ட பிரேசில் நட்சத்திர வீரர்கள் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி களத்தில் துறுதுறுவென வலம் வந்தனர். 4-வது நிமிடத்தில் நெய்மார் அடித்த ஷாட்டை செர்பிய கோல் கீப்பர் விளாடிமிர் ஸ்டோஜ்கோவிச் தடுத்தார். இதே போல் 28-வது நிமிடத்தில் நெய்மார் பந்துடன் வலையை நெருங்கிய போது தடுப்பாட்டக்காரர்கள் அவரது முயற்சியை முறியடித்தனர். அடுக்கடுக்கான கோல் வாய்ப்புகளை உருவாக்கி கொண்டே வந்த பிரேசில் 36-வது நிமிடத்தில் செர்பியாவுக்கு முதல் ‘செக்’ வைத்தது.

பிலிப் காட்டினோ கம்பத்தை நோக்கி அடித்த பந்தை சக வீரர் பவுலினோ தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர, அப்போது எதிரணி கோல் கீப்பர் கொஞ்சம் முன்னோக்கி வந்ததால் அவருக்கு மேலாக பவுலினோ பந்தை தூக்கி விட்டார். அது நேராக கோலுக்குள் உருண்டோடியது. இதனால் பிரேசில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. செர்பிய வீரர்களால் முதல் பாதியில் இலக்கை நோக்கி ஒரு ஷாட்கூட அடிக்க முடியவில்லை.

பிற்பாதியில் செர்பிய வீரர்கள் வியூகங்களை மாற்றிக்கொண்டு தீவிரமான எதிர்தாக்குதலை தொடுத்தனர். 60-வது நிமிடத்தில் செர்பியா கோல் போட்டிருக்க வேண்டியது. ருகாவினா அடித்த பந்தை பிரேசில் கோல் கீப்பர் அலிஸ்சன் கையால்தட்டிவிட்டு தடுமாறி விழுந்தார். கையில் பட்டு தெறித்த பந்தை மற்றொரு செர்பியா வீரர் அலெக்சாண்டர் மிட்ரோவிச் தலையால் முட்டினார். ஆனால் துரதிர்ஷ்டம், அருகில் நின்ற தியோகோ சில்வாவின் காலில் பந்து பட்டு பிரேசில் கோல் கீப்பர் அலிஸ்சன் வசம் சிக்கியது. சில்வா மட்டும் குறுக்கிடாமல் இருந்திருந்தால், அது வலைக்குள் பயணித்து இருக்கும். அடுத்த 3-வது நிமிடத்தில் மிட்ரோவிச் மீண்டும் ஒரு முறை பந்தை இலக்கை நோக்கி தலையால் பலமாக முட்டித்தள்ளினார். இந்த முறை அதை கோல் கீப்பர் அலிஸ்சன் கச்சிதமாக பிடித்தார்.

இந்த பரபரப்பான கட்டத்தில் பிரேசில் அணி 2-வது கோல் போட்டது. 68-வது நிமிடத்தில் கார்னரில் இருந்து நெய்மார் உதைத்த ஷாட்டை, சக வீரர் தியாகோ சில்வா தாவி குதித்து தலையால் முட்டி கோலாக்கினார். அந்த முன்னிலையை பிரேசில் கடைசி வரை தக்க வைத்துக் கொண்டது.

நெய்மார் கோல் ஏதும் போடாவிட்டாலும் அதற்குரிய வாய்ப்புகளை உருவாக்கி தந்து ஹீரோவாக முத்திரை பதித்தார். இந்த ஆட்டத்தில் பந்தை அதிக முறை தொட்டவர் இவர் தான். அவரது காலை 119 முறை பந்து முத்தமிட்டு சென்று இருக்கிறது. இன்னொரு தருணத்தில் தனிநபராக நெய்மார் கோலை நோக்கி பந்துடன் மின்னல் வேகத்தில் ஓடிய போது கோல்தரிசனம் கொடுப்பார் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால் செர்பிய கோல் கீப்பர் ஸ்டோஜ்கோவிச் சரியாக கணித்து தடுத்து விட்டார்.

முடிவில் பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் செர்பியாவை விரட்டியடித்து 2-வது சுற்றை எட்டியது. தனது பிரிவில் முதலிடம் பிடித்த பிரேசில் (7 புள்ளி, 2 வெற்றி, ஒரு தோல்வி) அடுத்த சுற்றில் மெக்சிகோவை 2-ந்தேதி சந்திக்கிறது.

‘களத்தில் 90 நிமிடங்கள் தாக்குப்பிடிக்க வேண்டும், இல்லாவிட்டால் அதற்குரிய தண்டனை (கோல்) கிடைத்து விடும். கால்பந்து உலகில் பலம் வாய்ந்த பிரேசில் போன்ற அணிகளுக்கு எதிராக, தடுப்பாட்டத்தை கைவிட்டு ‘ரிஸ்க்’ எடுத்து ஆடுவது என்பது மிகவும் கடினமாகும். தைரியமாக போராடிய எங்களது அணி வீரர்களை பாராட்டுகிறேன். அதே சமயம் நாங்கள் ஆட்டத்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.

உலக கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்பே கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பிரேசில் கணிக்கப்பட்டது. இப்போது ஜெர்மனி வெளியேறி விட்ட நிலையில், நிச்சயம் கோப்பையை வெல்ல பிரேசிலுக்கு அதிக வாய்ப்புள்ளது’.

* பிரேசில் அணி 1970-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 13-வது முறையாக முதல் சுற்றை வெற்றிகரமாக கடந்திருக்கிறது.

* செர்பியா தனி நாடாக உருவான பிறகு உலக கோப்பையில் பங்கேற்ற 3 தொடர்களிலும் (2006, 2010, 2018) முதல் சுற்றுடனேயே வெளியேறியுள்ளது.

Next Story