கால்பந்து

சுவிட்சர்லாந்தை தோற்கடித்து 24 ஆண்டுகளுக்கு பிறகு கால்இறுதியை எட்டியது சுவீடன் + "||" + Defeating Switzerland After 24 years Sweden has reached the goal

சுவிட்சர்லாந்தை தோற்கடித்து 24 ஆண்டுகளுக்கு பிறகு கால்இறுதியை எட்டியது சுவீடன்

சுவிட்சர்லாந்தை தோற்கடித்து 24 ஆண்டுகளுக்கு பிறகு கால்இறுதியை எட்டியது சுவீடன்
உலக கோப்பை கால்பந்து போட்டியில் சுவீடன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை தோற்கடித்து 24 ஆண்டுகளுக்கு பிறகு கால்இறுதிக்கு முன்னேறியது.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்,

உலக கோப்பை கால்பந்து போட்டியில் சுவீடன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை தோற்கடித்து 24 ஆண்டுகளுக்கு பிறகு கால்இறுதிக்கு முன்னேறியது.

முதல் கோல்

21–வது உலக கோப்பை கால்பந்து திருவிழாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நேற்று அரங்கேறிய 2–வது சுற்று ஆட்டத்தில் சுவீடன்–சுவிட்சர்லாந்து அணிகள் மல்லுகட்டின. சுவிட்சர்லாந்து 4 மாற்றங்களுடன் களம் இறங்கியது. ஆக்ரோ‌ஷமான பாணியை கடைபிடித்த இரு அணிகளும் மாறி மாறி கோல் பகுதியை முற்றுகையிட்டபடி இருந்தன. 28–வது நிமிடத்தில் சுவீடன் வீரர் மார்கஸ் பெர்க் அடித்த சூப்பரான ஷாட்டை, சுவிட்சர்லாந்து கோல் கீப்பர் யான் சோம்மெர் பாய்ந்து விழுந்து ஒற்றைக்கையால் தடுத்து நிறுத்தினார். முதல் பாதியில் யாரும் கோல் போடவில்லை.

பிற்பாதியில் இரண்டு அணி வீரர்களும் கோல் அடிப்பதற்கு தீவிர முனைப்பு காட்டினர். 66–வது நிமிடத்தில் இழுபறியை சுவீடன் வீரர்கள் முடிவுக்கு கொண்டு வந்தனர். சக வீரர் டோய்வோனென் தட்டிக்கொடுத்த பந்தை சுவீடனின் எமில் போர்ஸ்பெர்க் இலக்கை நோக்கி ஓங்கி உதைத்தார். அப்போது குறுக்கே நின்ற சுவிட்சர்லாந்து வீரர் மானுல் அகன்ஜி காலால் வேறு பக்கம் தள்ள முயன்றார். ஆனால் பந்து அவரது காலில் பட்டு வலைக்குள் நுழைந்தது. மானுல் அகன்ஜி குறுக்கிடாமல் இருந்திருந்தால், சுவிட்சர்லாந்து கோல் கீப்பரே தடுத்து இருப்பார். ஏனெனில் அதற்கு ஏற்ப அவர் சரியாக நின்று கொண்டு இருந்தார். இதையடுத்து 1-0 என்ற கோல் கணக்கில் சுவீடன் முன்னிலை பெற்றது.

சுவிட்சர்லாந்து வீரருக்கு சிவப்பு அட்டை

பதில் கோல் திருப்ப சுவிட்சர்லாந்து வீரர்கள் போராடினர். 80–வது நிமிடத்தில் பிரீல் எம்போலோ வலை அருகே வந்து அடித்த பந்தை, சுவீடன் தடுப்பாட்டக்காரர் தடுத்து வெளியேற்றினார். கடைசி நிமிடத்தில் மற்றொரு சுவிட்சர்லாந்து வீரர் ஹாரிஸ் செபரோவிக் தலையால் முட்டினார். அதை சுவீடன் கோல் கீப்பர் ராபின் ஆல்சன் முறியடித்தார்.

வழக்கமான 90 நிமிடங்களுக்கு பிறகு காயம் உள்ளிட்ட விரயத்துக்காக 3 நிமிடங்கள் (இஞ்சுரி டைம்) ஒதுக்கப்பட்டது. இதன் கடைசி நிமிடத்தில் சுவீடன் வீரர் மார்ட்டின் ஆல்சான் பந்துடன் தனி வீரராக எதிரணியின் கோல் பகுதியை நோக்கி மின்னல் வேகத்தில் ஓடினார். அப்போது அவரை சுவிட்சர்லாந்தின் மைக்கேல் லாங் தள்ளிவிட்டார். இதையடுத்து உடனடியாக அவருக்கு சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றிய நடுவர், அது பெனால்டி வழங்குவதற்கு உகந்ததா? என்று வீடியோ உதவி நடுவர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆராய்ந்தார். அப்போது கோல் பகுதிக்கு சற்று வெளியே இது நிகழ்ந்திருப்பது தெரிய வந்தது. இதனால் நடுவர் பெனால்டிக்கு பதிலாக ‘பிரிகிக்’ வழங்கினார். இந்த வாய்ப்பை சுவீடனால் கோலாக்க முடியவில்லை.

சுவீடன் வெற்றி

முடிவில் சுவீடன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை சாய்த்து கால்இறுதிக்கு தகுதி பெற்றது. 1994–ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக கால்இறுதியை எட்டிய சுவீடன் அணி அடுத்து இங்கிலாந்து அல்லது கொலம்பியாவை சந்திக்கும்.

பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் (63 சதவீதம்), ஷாட் அடிப்பதிலும் (18) சுவிட்சர்லாந்து ஆதிக்கம் செலுத்திய போதிலும் அதிர்ஷ்டம் இல்லாமல் போனது.