‘நெய்மாரின் நடிப்பு கால்பந்து விளையாட்டுக்கு நல்லதல்ல’ மெக்சிகோ பயிற்சியாளர் சாடல்


‘நெய்மாரின் நடிப்பு கால்பந்து விளையாட்டுக்கு நல்லதல்ல’ மெக்சிகோ பயிற்சியாளர் சாடல்
x
தினத்தந்தி 3 July 2018 9:30 PM GMT (Updated: 3 July 2018 8:56 PM GMT)

நெய்மார் களத்தில் போலியாக நடிப்பது கால்பந்து விளையாட்டுக்கு நல்லதல்ல என்று மெக்சிகோ பயிற்சியாளர் கூறியுள்ளார்.

சமரா,

நெய்மார் களத்தில் போலியாக நடிப்பது கால்பந்து விளையாட்டுக்கு நல்லதல்ல என்று மெக்சிகோ பயிற்சியாளர் கூறியுள்ளார்.

காயத்தில் சிக்கிய நெய்மார்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் நடந்த 2–வது சுற்றில் முன்னாள் சாம்பியன் பிரேசில் அணி 2–0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது. பிரேசில் அணியில் நட்சத்திர வீரர் நெய்மார் (51–வது நிமிடம்), பிர்மினோ (88–வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.

முன்னதாக 71–வது நிமிடத்தில் நெய்மாரின் கணுக்காலில் மெக்சிகோ வீரர் மிக்யூல் லாயூன் லேசாக மிதித்ததால் மைதானத்தில் விழுந்து துடித்தார். வலது காலை பிடித்துகொண்டு உருண்டு, புரண்டு அலறினார். சக வீரர்கள், போட்டி நடுவர் மற்றும் மருத்துவ குழுவினர் அவரை சூழ்ந்தனர். சில நிமிடங்களுக்கு பிறகு சகஜநிலைக்கு திரும்பிய நெய்மார் பிறகு ஆட்டம் முழுவதும் விளையாடினார்.

காயம் அடைந்ததும் நெய்மார் உணர்ச்சிகளை வெளிக்காட்டிய விதம் கொஞ்சம் மிகைப்படுத்தும் வகையில் இருந்ததாக சமூக வலைதளங்களிலும், கால்பந்து உலகிலும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. ‘இந்த நடிப்புக்காக அவருக்கு ஆஸ்கார் விருதே கொடுக்கலாம்’ என்று சில ரசிகர்கள் டுவிட்டரில் கிண்டலடித்துள்ளனர்.

பயிற்சியாளர் சாடல்

மெக்சிகோ அணியின் பயிற்சியாளர் ஜூவான் கார்லஸ் ஓசோரியா நெய்மார் மீது கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறுகையில், ‘இந்த ஆட்டத்தில் குறிப்பிட்ட ஒரு வீரருக்காக நிறைய நேரத்தை வீணடித்தது துரதிர்ஷ்டவசமானது. உண்மையிலேயே இது கால்பந்து விளையாட்டுக்கு அவமானகரமானதாகும். இத்தகைய செயல் கால்பந்து விளையாட்டை தேர்வு செய்யும் வருங்கால சந்ததியினருக்கு தவறான முன்னுதாரணமாகி விடும். போட்டி நடுவர், தேவையில்லாமல் ஆட்டத்தை அடிக்கடி நிறுத்தியதால் பிற்பாதியில் எங்களது வழக்கமான பாணியை இழக்க வேண்டியதாகி விட்டது. அது மாதிரியான சமயத்தில் எங்களது வீரர்களும் உத்வேகத்தை இழந்து சோர்ந்து போனார்கள்.

இது ஆண்களுக்குரிய விளையாட்டாக இருக்கவேண்டுமே தவிர, கேலிக்கூத்துக்குரிய இடமாக இருக்கக்கூடாது. அளவுக்கு அதிகமான நடிப்புக்கும் இடம் தரக்கூடாது. நெய்மாரின் நடிப்பு கால்பந்து விளையாட்டுக்கு நல்லதல்ல. இந்த ஆட்டம் முற்றிலும் பிரேசிலுக்கு சாதகமாகவே இருந்தது. நடுவரின் குறுக்கீடும் அதிகமாக காணப்பட்டது.’ என்றார்.

இதே போல் நெய்மாரை குறைகூறியுள்ள அயர்லாந்து அணியின் பயிற்சியாளர் மார்ட்டின் ஓ நியல் ‘நெய்மார் உயர்தரமான ஒரு வீரர். அதே சமயம் உயர்தரமான நடிகரும் ஆவார்’ என்று குறிப்பிட்டார்.

விளக்கம்

இந்த தொடரில் இதுவரை 23 ஷாட்டுகள் அடித்துள்ள 26 வயதான நெய்மார் அதில் 2–ஐ கோலாக மாற்றி இருக்கிறார். எதிரணியினரால் அதிக முறை ‘பவுல்’ (23 முறை) செய்யப்பட்ட வீரரும் நெய்மார் தான். அவர் கூறுகையில், ‘இந்த தொடரில் மற்றவர்களை காட்டிலும் என்மீதே அதிகமாக தாக்குதல் தொடுத்து, அதன் மூலம் பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள். பொதுவாக விமர்சனங்களையோ அல்லது பாராட்டுகளையோ எதையும் நான் கண்டுகொள்வதில்லை. ஏனெனில் அதன் மீது கவனம் செலுத்தினால், அது நமது செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தி விடும். எனது வேலை, களம் இறங்கி அணிக்காகவும், சக வீரர்களுக்காகவும் உதவுவது மட்டுமே’ என்றார்.

நெய்மாரை ரியல்மாட்ரிட் கிளப்புக்கு இழுக்க முயற்சியா?

பிரேசில் முன்னணி வீரர் நெய்மார், பிரான்சில் உள்ள பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப்புக்காக ஆடி வருகிறார். அவரை அந்த கிளப்பில் இருந்து ஸ்பெயினில் புகழ்பெற்ற ரியல்மாட்ரிட் கிளப்புக்கு இழுக்க முயற்சி நடந்து வருவதாகவும், அதற்காக ரூ.2,475 கோடி பேரம் பேசப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்படியொரு பேச்சுவார்த்தையே நடக்கவில்லை, இது முற்றிலும் தவறான தகவல் என்று ரியல்மாட்ரிட் கிளப் மறுத்துள்ளது.


Next Story