அரைஇறுதிக்கு முன்னேறுமா பிரேசில்? பெல்ஜியத்துடன் மோதல்


அரைஇறுதிக்கு முன்னேறுமா பிரேசில்? பெல்ஜியத்துடன் மோதல்
x
தினத்தந்தி 5 July 2018 10:30 PM GMT (Updated: 5 July 2018 9:00 PM GMT)

உலக கோப்பை கால்பந்து போட்டியில் அரைஇறுதியை எட்டும் முனைப்பில் உள்ள பிரேசில் அணி இன்று பெல்ஜியத்துடன் மல்லுகட்டுகிறது.

கஜன்,

உலக கோப்பை கால்பந்து போட்டியில் அரைஇறுதியை எட்டும் முனைப்பில் உள்ள பிரேசில் அணி இன்று பெல்ஜியத்துடன் மல்லுகட்டுகிறது.

நெய்மார் கூட்டணி

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய நேரப்படி இன்று இரவு 11.30 மணிக்கு அரங்கேறும் 2–வது கால்இறுதியில் 5 முறை சாம்பியனான பிரேசில் அணி, பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது.

லீக் சுற்றின் முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்துடன் (1–1 என்ற கணக்கில் டிரா) சற்று தடுமாறிய பிரேசில் அணி அதன் பிறகு எழுச்சி கண்டது. அடுத்த லீக் ஆட்டங்களில் கோஸ்டாரிகா, செர்பியா மற்றும் 2–வது சுற்றில் மெக்சிகோ ஆகிய அணிகளை தலா 2–0 என்ற கோல் கோல் வித்தியாசத்தில் போட்டுத்தாக்கியது.

பட்டம் வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருக்கும் பிரேசில் அணியில் நெய்மார், பிலிப் காட்டினோ, கேப்டன் தியாகோ சில்வா, வில்லியன், மார்செலோ, பவுலினோ என்று ஒரு நட்சத்திர பட்டாளமே அணிவகுத்து நிற்கிறது. இதில் நெய்மார், காட்டினோ கூட்டணி எதிராளியிடம் இருந்து பந்தை தட்டிப்பறித்து நொடிப்பொழுதில் பந்தை கோலாக மாற்றுவதில் கில்லாடிகள்.

மெக்சிகோவுக்கு எதிரான ஆட்டத்தில் நெய்மார் காயம் அடைந்தது போல் போலியாக நடித்ததாக பலமான விமர்சனங்கள் கிளம்பின. ஆனால் அதை பற்றி எல்லாம் துளியும் கவலைப்படாத நெய்மார், எதிரணியினர் தன்னை வீழ்த்த தீட்டும் வியூகங்களை எப்படி உடைத்தெறிவது என்பதில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருக்கிறார். இரண்டு மஞ்சள் அட்டை பெற்ற கேஸ்மிரோ இந்த ஆட்டத்தில் ஆட முடியாதது பிரேசிலுக்கு சற்று பின்னடைவாகும்.

பெல்ஜியம் அணி

உலக தரவரிசையில் 3–வது இடம் வகிக்கும் ‘ரெட் டெவில்ஸ்’ என்று அழைக்கப்படும் பெல்ஜியத்துக்கு, நடப்பு தொடரில் இது இன்னொரு மிகப்பெரிய யுத்தமாகும். 2–வது சுற்றில் ஜப்பானுக்கு எதிராக 0–2 என்ற கணக்கில் பின்தங்கிய பெல்ஜியம் அதன் பிறகு 3 கோல்கள் போட்டு ஒருவழியாக தப்பிப்பிழைத்தது. ஆனால் அது போன்று பிரேசிலிடம் பின்தங்கினால் மீள்வது கஷ்டம் என்பதை அந்த அணி வீரர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

இந்த தொடரில் அதிக கோல்கள் (12 கோல்) அடித்துள்ள அணியான பெல்ஜியம் தாக்குதல் பாணியையே பெரிதும் நம்புகிறது. ஆனால் கடைசி 310 நிமிடங்களில் ஒரு கோல் கூட பெறாத பிரேசிலுக்கு எதிராக அவர்களின் வியூகம் எந்த அளவுக்கு பலன் அளிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ரோம்லு லுகாகு (4 கோல்), கேப்டன் எடன் ஹசார்ட், மரோன் பெல்லாய்னி உள்ளிட்டோர் அந்த அணியின் நம்பிக்கை வீரர்களாக தெரிகிறார்கள். மொத்தத்தில் வெற்றி வாய்ப்பில் பிரேசிலின் கை சற்று ஓங்கி இருந்தாலும் பெல்ஜியத்தையும் எள்ளளவும் குறைத்து மதிப்பிட முடியாது. அதனால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.


Next Story