‘பெல்ஜியம் வீரர்களின் ஆட்டத்தை நினைத்து பெருமை அடைகிறேன்’ பயிற்சியாளர் மார்ட்டினஸ் பேட்டி


‘பெல்ஜியம் வீரர்களின் ஆட்டத்தை நினைத்து பெருமை அடைகிறேன்’ பயிற்சியாளர் மார்ட்டினஸ் பேட்டி
x
தினத்தந்தி 7 July 2018 10:30 PM GMT (Updated: 7 July 2018 9:07 PM GMT)

உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசிலை கால்இறுதியுடன் விரட்டிய பெல்ஜியம் வீரர்களுக்கு அந்த அணியின் பயிற்சியாளர் புகழாரம் சூட்டியுள்ளார்.

கஜன், 

உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசிலை கால்இறுதியுடன் விரட்டிய பெல்ஜியம் வீரர்களுக்கு அந்த அணியின் பயிற்சியாளர் புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரேசில் தோல்வி

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த பரபரப்பான கால்இறுதியில் 5 முறை சாம்பியனான பிரேசில் அணி 1-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் உதை வாங்கி வெளியேறியது.

தனக்கு தானே சூனியம் வைத்தது மாதிரி 13-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் பெர்னான்டினோ பந்தை வெளியே தள்ளிவிடும் முனைப்பில் துள்ளிகுதித்த போது, பந்து அவரது தோள்பட்டையில் பட்டு சுயகோலாக மாறியது. அந்த அதிர்ச்சியில் இருந்து விடுபடுவதற்குள் பிரேசிலின் கோல்பகுதிக்குள் லாவகமாக ஊடுருவிய பெல்ஜியத்தின் ரோம்லு லுகாகு, சக வீரர் கெவின் டி புருனேவிடம் பந்தை தட்டிவிட அதை அவர் கோலாக்கி (31-வது நிமிடம்) அசத்தினார்.

கலக்கிய கோல் கீப்பர்

பிரேசில் வீரர்கள் பந்தை அதிக நேரம் கட்டுப்பாட்டில் (57 சதவீதம்) வைத்துக் கொண்டு எதிரணியின் கோல் பகுதிக்குள் சாரைசாரையாக படையெடுத்த போதிலும் பெல்ஜியம் வீரர்களின் வலுவான தடுப்பு அரண், எல்லாவற்றுக்கும் மேலாக தூண்போல் நின்ற கோல் கீப்பர் திபவுட் கோர்ட்டோஸ் இவர்களை தாண்டி ஒன்றுமே செய்ய முடியவில்லை. நெய்மார், காட்டினோ, வில்லியன், மார்சிலோ போன்ற நட்சத்திர வீரர்களின் புயல்வேகத்துக்கு அணை போடும் சூட்சமத்தை பெல்ஜியம் வீரர்கள் நன்கு கண்டறிந்து, அதை சூப்பராக செய்து முடித்தனர். 76-வது நிமிடத்தில் பிரேசில் மாற்று ஆட்டக்காரர் ரெனட்டோ அகஸ்டோ ஆறுதல் அளிக்கும் வகையில் ஒரு கோல் அடித்தார். மொத்தம் 26 ஷாட்டுகள் (பெல்ஜியம் 8 ஷாட்) அடித்த போதிலும் பிரேசிலுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

1986-ம் ஆண்டுக்கு பிறகு அரைஇறுதிக்குள் நுழைந்த பெல்ஜியத்தின் வெற்றியை அந்த நாட்டு ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடினர். 10-ந்தேதி நடக்கும் அரைஇறுதியில் பெல்ஜியம் அணி, பிரான்சை சந்திக்கிறது.

பெல்ஜியத்தின் ஹீரோவாக ஜொலித்த 26 வயதான கோல் கீப்பர் கோர்ட்டோஸ் 199 சென்டிமீட்டர் உயரம் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ட்டினஸ் பெருமிதம்

பெல்ஜியம் பயிற்சியாளர் ராபர்ட்டோ மார்ட்டினஸ் நிருபர்களிடம் கூறுகையில், ‘பலம் வாய்ந்த பிரேசில் அணிக்கு எதிராக விளையாடும் போது, யுக்திகளை பயன்படுத்துவதில் நமது கை ஓங்கி இருக்க வேண்டியது அவசியமாகும். மஞ்சள் நிற சீருடை, 5 முறை உலக சாம்பியன், கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணி இப்படிப்பட்ட சாதகமான அம்சங்களுடன் இறங்கிய பிரேசிலுக்கு எதிராக நாங்கள் தந்திரங்களை தைரியமாக செயல்படுத்த வேண்டி இருந்தது.

இங்கு யுக்திகள் பற்றி பேசுவதை விட அதை களத்தில் எப்படி செய்து காட்டினோம் என்பதே முக்கியம். கடினமான வியூகங்களை அமைத்து அந்த பணியை வீரர்களிடம் வழங்கினேன். அவர்களும் நம்பிக்கை வைத்து அதற்கு ஏற்ப கடைசி நிமிடம் வரை முழுமூச்சுடன் விளையாடிய விதம் வியப்பூட்டுகிறது. சொல்லப்போனால் ஒரு நிமிடம் கூட எங்களது வீரர்கள் சோடை போகவில்லை. அந்த வகையில் இந்த பூமியில் நான் மிகவும் பெருமைக்குரிய ஒரு மனிதர். பெல்ஜியம் மக்களால் கதாநாயகர்களாக கொண்டாடுவதற்கு எங்களது வீரர்கள் தகுதியானவர்கள்’ என்றார்.

Next Story